சுட்டெரிக்கும் வெயில் .. கொத்து கொத்தாக கொட்டும் தலைமுடி..ஆரோக்கியத்திற்கு டாக்டர் சொல்லும் அட்வைஸ்
சுட்டெரிக்கும் வெயிலுக்கு உடல் சூடாகி பலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு சித்த மருத்துவர் வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது பற்றி கூறியுள்ளார்.
சென்னை: கோடைக்காலத்தில் ஏற்படும் உஷ்ணமும் வியர்வையும் நம் உடலை இயல்பாகவே பலவீனப்படுத்துகின்றது. கோடை காலத்தில் அதிக அளவில் பலருக்கும் முடி உதிரும். இதனாலேயே பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், முடி உதிர்வதை தடுக்கவும், வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை மருத்துவத் துறை Dr.யோ.ரா.மானேக்சா.எம்.டி.
கோடைக்காலம் என்பது இளவேனிற், முதுவேனிற் காலங்களையே குறிக்கும். இளவேனிற் காலம் சித்திரை, வைகாசி மாதங்களிலும் முதுவேனிற் காலம் ஆனி, ஆடி மாதங்களிலும் நடக்கும். ஆனால் தற்சமயம் காலநிலை மாறுபாடுகளினால் பின்பனி காலமாகிய மாசி, பங்குனி மாதங்களிலேயே வெயில் வறுத்தெடுத்து ரத்தமே வியர்வை துளியாய் ஆவியாகும் அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் நம்மை பாடாய்படுத்துகிறது.
நம் உடலின் சராசரி வெப்பநிலை 98.4F. கோடைக்காலத்தில் நமது சுற்றுச்சூழல் வெப்பமானது 106 - 112 F வரை அதிகரித்துக் காணப்படும். எனவே நம் உடலானது உடல் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள வியர்வை மூலமாக அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றும். இந்நேரத்தில் தான் வியர்வை சுரப்பிகளில் அழுக்குகள் சேர்ந்து வியர்க்குருக்கள் தோன்றும். அதிகப்படியான வியர்வை பிசுபிசுப்பால் சில கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து தேமல், படை, தினவு போன்ற சரும தொற்றுகளை ஏற்படுத்தும்.

கோடையில் சோப் வேண்டாம்
இந்த கோடைக்கால வியர்க்குருவிற்கு அருகம்புல்லின் சாறு அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எண்ணெய்யாக தோலின் மீது பூசி பயன்படுத்த வேண்டும். குளிப்பதற்கு அகத்தியர் பதார்த்த குண விளக்கத்தில் கூறப்பட்டுள்ள நலங்குமாவு பயன்படுத்தலாம். நலங்குமாவு என்பது வெட்டிவேர், விலாமிச்சுவேர், கோரைக்கிழங்கு, கிச்சிலிகிழங்கு, பாசிப்பயறு, கார்போகரிசி, சந்தனம் இவைகளை சமஅளவில் எடுத்து பொடித்த பொடியாகும். இதை சோப்பிற்கு பதிலாக உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இதனால் தேமல், படை, தினவு, தோல் வறட்சி இவைகள் நீங்கி தோல் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

அதிகப்படியான வியர்வைக்கு
உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை, தோலின் வியர்வை, வியர்வை நாற்றம் அதிகமுள்ளவர்கள் ஆவாரம்பூ, மகிழம்பூ இவை இரண்டையும் டீ போல போட்டு குடித்தும், வெளிப்பூச்சாக ஆவாரம்பூ, மகிழம்பூ, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை இவைகளை சமஅளவில் அரைத்து தேய்த்து குளித்தும் வரலாம்.

முடி உதிர்வு பிரச்சினை
கோடையில் பலருக்கு கொத்து கொத்தாக முடி உதிரும். அவர்கள் வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம்.
கறிவேப்பிலை சாறு - 100 மி.லி
கரிசலாங்கண்ணி சாறு - 100 மி.லி
நெல்லிக்காய் சாறு - 100 மி.லி
வேப்பம்பூ சாறு - 50 மி.லி
வெந்தயம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
செம்பருத்திப்பூ - 50
இவைகளை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, இரவில் தலைக்குத் தேய்த்துப்பின் உறங்க வேண்டும். இதனால் வியர்வையால் அதிகப்படும் பேன், தலைஊறல், பொடுகு இவை நீங்கி மயிர்க்கால்கள் உரம் பெறும். மேலும் கூந்தல் கருமை நிறத்தில் அடர்த்தியாய் வளரும்.

வியர்க்குரு
கோடைக் காலத்தில் உடலில் வெப்பம் அதிகமாகும் போது, வியர்வைச் சுரப்பிகள் அதிகமான வியர்வையை உடலில் இருந்து வெளியேற்றும். இந்த வியர்வை சுரப்பிகளின் துவாரத்தில் தூசி அல்லது அழுக்கு படிந்து அடைத்துக் கொள்வதால் வியர்க்குரு தோன்றுகிறது. அதிகரித்த வியர்வையால் இவை வருவதால் இதை வேர்க்குரு அல்லது வியர்க்குரு என்கிறோம்.இதற்கு, சந்தனத்தை அரைத்து உடலில் வியர்க்குரு உள்ள இடங்களில் பூசலாம்.
வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் பூசலாம். அருகன் தைலத்தை வெளிப்பிரயோகமாக பயன்படுத்தலாம். நலங்குமா தேய்த்துக் குளிக்கலாம். கற்றாழை ஜெல்லை வெளியே தேய்த்துக் குளிக்கலாம்.

இயற்கை பானங்கள்
வியர்க்குரு உள்ளவர்கள் காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். இரவு உறங்கும் முன்னர், திரிபலா சூரணம் ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து பருகவும். தர்பூசணி, வெள்ளரிப்பழம், கிர்ணிப்பழம், முலாம்பழம், இளநீர், பூசணிக்காய் சாறு, சுரைக்காய் சாறு, சோற்றுக்கற்றாழை சாறு, மோர், தயிர் போன்றவைகளை உணவில் அதிகம் பயன்படுத்தவும். கோடைக் காலங்களில் தினமும் 3-4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல்
வெயில் காலத்தில் பிரத்தியேகமாக ஏற்படும் தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் இவைகளை நீக்க கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல், மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம்வித்து இவைகளை சமஅளவு எடுத்து பொடித்து பசும்பாலில் காய்ச்சி குளிப்பதற்கு 15 நிமிடம் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து அதன் பின்னர் குளித்து வந்தால் மேற்சொன்ன பிணிகளும் நீங்கி, உடல் சூடு தணிந்து கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி உண்டாகும். இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க சம்மர் காலத்தை ஜில்லென்று கடந்து விடலாம்.












Click it and Unblock the Notifications