Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளுக்கு வரும் அதீத காய்ச்சலை ஒட்டிய வலிப்பு எதனால் ஏற்படுகிறது ?.. டாக்டர் பரூக் அப்துல்லா

காய்ச்சலின் போது ஏற்படும் பிட்ஸ் நோய்க்கு தீர்வு என்ன என்பதை விளக்கும் டாக்டர் பரூக் அப்துல்லா

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்ச்சல் 101 டிகிரியை தாண்டும் போது குழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவது ஏன், அவ்வாறு வலிப்பு நோயை கண்டறிவது எப்படி என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு வரும் அதீத காய்ச்சலை ஒட்டிய வலிப்பு எதனால் ஏற்படுகிறது ? எப்படிக் கட்டுப்படுத்துவது ? அடுத்து என்ன செய்வது ? அச்சம் குறைத்து விழிப்புணர்வை வளர்க்கும் விரிவான பதிவு .

What is Fits? Why it happens? What are the remedies? says Dr Farook

வைரஸ் காய்ச்சல்கள் பருவகாலங்களில் பரவி வரும் சூழ்நிலையில் குழந்தைகளை ப்ளூ வைரஸ்கள் தாக்கும் போது அதீத ஜுரத்தை வரவழைக்கின்றன. நான் தற்போது கேள்விப்படுவது குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் தொற்றால் வரும் காய்ச்சல் 101 டிகிரி ஃபாரன்ஹீட் ( 38 டிகிரி செல்சியஸ்) தாண்டுகிறது. 102 ,103 எல்லாம் தொடுகிறது எனும் போது காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெற்றோர்களும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் தாத்தா பாட்டிகள் பேபி சிட்டர்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உடலின் வெப்பநிலை 101டிகிரியைத் தாண்டும் போது மூளையின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் மிகவும் சூடாகும் நமது செல்போன்கள் தானாக ரீஸ்டார்ட் ஆகும் இல்லையா அது போல மூளை சற்று நேரம் ஸ்விட்ச் ஆஃப் ஆகி உடனே தானாக ஸ்விட்ச் ஆன் ஆகுவதை வலிப்பாக நாம் காண்கிறோம். மேலும் காய்ச்சலின் போது உடல் முழுவதும் வெளிப்படும் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி காரணிகள் கிருமித் தொற்றை அழிக்க நடக்கும் போரில் நம் உடலால் உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்களில் முக்கியமானதான இண்டர் லியூகின்- 1 பீட்டா (Interleukin 1 Beta)இருக்கிறது.

What is Fits? Why it happens? What are the remedies? says Dr Farook

ஆயுதத்தினால் எதிரிக்கும் சேதம் நம் பக்கமும் சிறிது சேதம் இருக்கும் தானே.. இதை கொலேட்டரல் டேமேஜ் என்பார்கள். அதைப்போல நமது உடலில் குறிப்பாக மூளையில் இந்த இண்டர்லியூகின் -1 பீட்டா கூடும் போது வலிப்பைத் தூண்டுகிறது. சரி காய்ச்சலுடன் கூடிய வலிப்பு எப்படி ஏற்படும்?
- குழந்தையின் உடல் திடீரென விரைப்பாக முறித்துக் கொள்ளும்
- பிறகு இரு கை இருகால் வலிப்பு வெட்ட ஆரம்பிக்கும்
- சிறிது நேரம் மூர்ச்சை நிலையில் இருக்கும்
- மூர்ச்சை நிலையில் சுய நினைவின்றி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் வாய்ப்பும் உண்டு
- வாந்தி எடுக்கக் கூடும்
- வாயில் நுரை தள்ளக்கூடும்
- கண்கள் மேலெழும்பி நிலை குத்தி நிற்கும்
இவ்வாறாக வலிப்பு ஏற்படும்

What is Fits? Why it happens? What are the remedies? says Dr Farook

இத்தகைய காய்ச்சலில் ஏற்படும் வலிப்பு சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கக்கூடும். பொதுவாக ஐந்து நிமிடங்களுக்குள் வலிப்பு தானாக குணமாகி குழந்தை பழைய நிலைக்குத் திரும்பி விடும். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை இந்த வலிப்பு நிகழ்வு ஏற்படலாம். காய்ச்சல் தொடங்கிய 24 மணிநேரத்திற்குள் ஒரு முறை மட்டுமே இந்த வலிப்பு வரும். இதை "சாதாரண காய்ச்சலுடன் கூடிய வலிப்பு" SIMPLE FEBRILE SEIZURE என்று வகைப்படுத்துகிறோம். குழந்தை பிறந்து ஆறு மாதம் தொடங்கி அறுபது மாதங்கள் வரை அதாவது அரை வயது முதல் ஐந்து வயது வரை இந்த வலிப்பு காய்ச்சலுடன் ஏற்படலாம்.

எப்படிக் கட்டுப்படுத்துவது? காய்ச்சலின் போது ஏற்படும் அதீத உடல் வெப்பத்தால் இந்த வலிப்பு தூண்டப்படுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் பாராசிட்டமால் மருந்தை குழந்தையின் எடைக்கு ஏற்ப வழங்க வேண்டும். காய்ச்சல் ஏற்படுவதை அறிந்த உடனே பாராசிட்டமால் வழங்கப்பட வேண்டும். சில நேரங்களில் வைரஸ் தொற்றுகளில் பாராசிட்டமாலுக்கு காய்ச்சல் குறையாத தன்மை இருக்கும். அப்போது உடல் முழுவதும் அறை வெப்பத்தில் இருக்கும் நீரில் ( குழாயில் இருந்து வரும் நீர் 32.2 டிகிரி செல்சியஸ் - 35 டிகிரி செல்சியஸ்) ஒற்றி எடுத்த துணியைக் கொண்டு தொடர்ந்து உடல் முழுவதும் துடைத்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதை WATER IN ROOM TEMPERATURE TEPID SPONGING என்று அழைக்கிறோம்.

உடல் வெப்பத்தைக் குறைப்பதில் மிகுந்த பலனைத் தரும் செயலாகும். வெப்பமான நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாது. ப்ளூ வைரஸ் தொற்றுகள் பரவும் காலத்தில் பாராசிட்டாமலுடன் இன்னும் சில இணை மருந்துகள் காய்ச்சலை நன்றாகக் கட்டுப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். அவற்றை 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் கொடுக்கலாம்.

வலிப்பு ஏற்படும் போது என்ன செய்வது? முதலில் பெற்றோர் பதட்டம் கொள்ளாமல் இந்த நிகழ்வை அணுக வேண்டும். காய்ச்சலின் போது ஏற்படும் சாதாரண வலிப்பு என்பது குழந்தையின் மூளைக்கோ அதன் சிந்தனை சக்திக்கோ அறிவுத்திறன் மற்றும் நியாபக சக்திக்கோ எந்த நாள்பட்ட பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே அச்சமின்றி இந்த நிகழ்வை அணுகும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையை ஒருபக்கமாக "மீட்பு நிலையில் "(RECOVERY POSITION) படுக்க வைக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிந்திருப்பின் அதைக் களைய வேண்டும் / தளர்த்தி விட வேண்டும்.

What is Fits? Why it happens? What are the remedies? says Dr Farook

வலிப்பு ஏற்படும் போது அதை தடுக்கவோ கையைக் கொண்டு அழுத்தம் தரவோ கூடாது. வலிப்பு ஆரம்பித்த நேரம் முதல் அது முடியும் நேரத்தை குறித்துக் கொள்ள வேண்டும். வலிப்பு ஏற்படும் குழந்தைக்கு அருகில் கடினமான அல்லது கூர்மையான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக வலிப்பு ஏற்படும் குழந்தைக்கு வாய் வழியாக நீரோ/ டானிக்கோ ஊற்றக் கூடாது. புரையேறி நுரையீரலுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. அது ஆபத்தாகிவிடும். வலிப்பு ஏற்படும் குழந்தையை உடனே அள்ளிப்போட்டுக் கொண்டு அரக்க பறக்க மருத்துவரைத் தேடி ஓடுவதும் தவறான செய்கை.

அதீத ஜூரம் மட்டுமே காரணமாக அமையும் வலிப்பு - தானாக சில நிமிடங்களில் குணமாகும். குழந்தையும் சுயநினைவுக்கு மீண்டும் வரும். அப்போது பதறாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவரை சந்திக்க வரலாம். வலிப்பு ஏற்படும் போது கையை மடக்கி காலை மடக்கி தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடுவதை விட குழந்தையை மீட்பு நிலையில் கிடத்தி வலிப்பு நின்றதும் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது இதுவே வலிப்பு தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்காமல் இருந்தாலோ வலிப்பு நின்றும் குழந்தை தன் சுய நினைவுக்குத் திரும்பாமல் இருந்தாலோஅவசர சிகிச்சைப் பிரிவிற்கு "மீட்பு நிலையில்" குழந்தையைக் கிடத்தி அழைத்துச் செல்வது நல்லது.

அவசர சிகிச்சை நிலையத்தில் / மருத்துவமனையில் வலிப்பை மட்டுப்படுத்தும் மருந்துகள் - ஆசன வாய் வழியாகவோ / நேரடியாக ரத்த நாளம் வழியாகவோ உடனடியாக செலுத்தப்படும். வலிப்பும் நிற்கும்.
இதுவே வலிப்பு நிகழ்வை அணுக வேண்டிய முறையாகும். இதற்கடுத்த கேள்வியாக மக்களிடம் இருப்பது ஒருமுறை காய்ச்சல் வந்து வலிப்பு ஏற்பட்ட குழந்தைக்கு மீண்டும் வலிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா? ஆம் உள்ளது. இதுபோன்ற காய்ச்சலுடன் கூடிய வலிப்பு நிகழ்வு குழந்தை பிறந்த 18 மாதங்களுக்குள் நிகழ்ந்திருந்தாலோ குழந்தையின் நெருங்கிய ரத்த உறவுகளில் யாருக்கேனும் இதே போன்று வலிப்பு ஏற்பட்டிருந்த வரலாறு இருந்தாலோ தற்போது குறைவான உடல் ஜுரத்திலேயே வலிப்பு ஏற்படும் நிலை இருந்தாலோ காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்னமே வலிப்பு தான் நோயின் முதல் அறிகுறியாக தோன்றியிருந்தாலோ மீண்டும் காய்ச்சல் வந்தால் வலிப்பு ஏற்படும் தன்மை மேற்சொன்ன குழந்தைகளுக்கு அதிகம்.

எனவே இவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வலிப்பு ஏற்படாமல் இருக்கு வலிப்பைத் தடுக்கும் மருந்துகள் சிரப் வழியாக காய்ச்சல் ஏற்படும் போது ஒன்றிரண்டு நாட்கள் வழங்க அறிவுறுத்தப்படும். இதுவரை நாம் பேசியது அனைத்தும் காய்ச்சலின் போது ஏற்படும் சாதாரண வலிப்பு பற்றியது. இனி நாம் பேச இருப்பது காய்ச்சலின் போது ஏற்படும் சிக்கலான வலிப்பு பற்றியது. அதென்னா காம்ப்ளக்ஸ் ஃபிப்ரைல் சீசர்ஸ் (COMPLEX FEBRILE SEIZURES)இத்தகைய குழந்தைகளுக்கு வலிப்பு உடலின் ஒரு குறிப்பிட்ட அங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழும்.
உதாரணம் ஒரு பக்க கை ஒரு பக்க கால் மட்டும் வெட்டுவது. வலிப்பின் கால அளவு 15 நிமிடங்களுக்கு மேல் நிகழும் . காய்ச்சல் தொடங்கிய 24 மணிநேரங்களுக்குள் ஒருமுறைக்கு மேல் வலிப்பு ஏற்படும். (more than one episode within 24 hours of onset of fever)

இத்தகைய வலிப்பு என்பதை சாதாரணமானது என்று கடந்து செல்ல இயலாது. காரணம் இது மீண்டும் மீண்டும் தோன்றும் தன்மையுடன் இருக்கும். எனவே இத்தகையோருக்கு சில ஆண்டுகள் அல்லது ஐந்து வயது வரை தொடர்ந்து வலிப்பை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படும். இத்தகைய காம்ப்ளக்ஸ் வலிப்புக்கு மருத்துவ பரிசோதனைகள் முறையாக செய்யப்பட வேண்டும். காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படும் குழந்தைக்கு முதலில் காய்ச்சலின் காரணம் கண்டறியப்பட வேண்டும். அதற்கு சில ரத்தப் பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் உதவும். இதற்கடுத்த படியாக வலிப்பு நோயுடன் தீவிரமான வாந்தி ( PROJECTILE VOMITING) பின் கழுத்துப் பகுதியில் இறுக்கம் (NECK STIFFNESS) குழந்தையால் நேர்க்கோட்டில் நடக்க இயலாமை / தள்ளாடி நடப்பது ( unsteady gait) குழந்தை சுயநினைவின்றி உளறுவது / பிதற்றுவது கை கால்கள் வழக்கமான திடத்துடன் இல்லாமல் தளர்ந்து போய் காணப்படுவது (ACUTE FLACCID PARALYSIS) போன்ற அபாய அறிகுறிகளுடன் இருப்பின் இது மூளை(encephalitis) மற்றும் மூளையின் உரையில் ( meningitis) ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று என்று அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

What is Fits? Why it happens? What are the remedies? says Dr Farook

வைரஸ் கிருமித் தொற்று மூளைக்கு சென்று சூழ்ந்து கொண்டால் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும். இது குறித்து கவனம் தேவை. மேற்சொன்ன விஷயங்களைக் கண்டறிய
- பின் புற இடுப்புப் பகுதியில் ஊசி போட்டு தண்டுவட நீரை எடுத்து அதில் கிருமிகளின் தன்மை குறித்து சோதிக்கப்படும் (LUMBAR PUNCTURE - CEREBROSPINAL FLUID ANALYSIS & CULTURE)
- எம்.ஆர்.ஐ ( MRI) ஸ்கேன் எடுத்து மூளையின் தன்மை சோதிக்கப்படும்.
மேற்சொன்ன பரிசோதனைகளின் மூலம் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்
"நரம்பியல் சிறப்பு நிபுணரின்" மேற்பார்வையில்
எலக்ட்ரோ என்கெஃபலோகிராம் எனும் EEG பரிதோதனை செய்யப்படும்.
இதயத்தின் மின்சார இயக்கத்தை பார்வையிட ஈசிஜி உதவுவது போல
மூளையின் மின்சார இயக்கத்தை பார்வையிட ஈஈஜி உதவுகிறது.
அதில் இது சாதாரண வலிப்பா அல்லது வலிப்பு நோயா என்பது அடையாளம் காணப்படும்
வலிப்பு நோயாக இருப்பின் தொடர்ந்து வலிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சையில் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும்.
ஈஈஜி நார்மலாக இருப்பின் கவலையின்றி அச்சமின்றி இருக்கலாம்.
பொதுவாக காய்ச்சலுடன் ஏற்படும் சாதாரண வலிப்பு நிகழ்வு என்பது அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் குழந்தைகளுக்கோ அவர்களின் மூளைக்கோ பாதகம் விளைவிக்காதவை.
காய்ச்சல் அடிக்கும் போது மட்டும் வலிப்பு ஏற்படாதவாறு கொடுத்தால் போதுமானது.
எனினும் சிக்கலான வலிப்பு மற்றும் வலிப்பு நோய் போன்றவை உடனடியாக அவசர சிகிச்சை கொடுத்தால் மட்டுமே குணமாகும் தன்மையவை மேலும் தொடர் சிகிச்சையைக் கோருபவை
- 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு
- ஆறு மாதங்களுக்குள் நேரும் வலிப்பு
- காய்ச்சலுக்கான காரணத்தை அடையாளம் காணுவதற்கு
- தீவிரமான நோய் தொற்று
போன்ற காரணங்களுக்காக மருத்துவமனை அட்மிசன் மற்றும் சிகிச்சை கட்டாயம் தேவைப்படும்.
காய்ச்சலின் போது வலிப்பு வராத வண்ணம் பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.
உடனடியாக பாராசிட்டமால் வழங்கப்பட வேண்டும்.
அப்படியே வலிப்பு ஏற்பட்டாலும் அச்சம் கொள்ளாமல் பதட்டப்படாமல் நிகழ்வை சந்திக்க வேண்டும்.
வலிப்பின் காரணம் மற்றும் தன்மை அறிந்து முறையான மருத்துவ சிகிச்சையை குழந்தைகளுக்கு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+