Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Health tips: நொறுக்குத் தீனி, ஜங் ஃபுட்டுக்கு குட் பை சொன்னாலும் சர்க்கரையின் அளவு குறையாதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை, நொறுக்குத் தீனி, ஃபாஸ்ட் ஃபுட் உள்ளிட்டவைகளை நிறுத்திவிட்டாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராததற்கு என்ன செய்வது என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டயாபடிஸ் (நீரிழிவு/ சுகர் / சர்க்கரை நோய்) ஏற்பட்டவர்கள் பலர் தாங்கள் சீனி / நாட்டு சர்க்கரை உள்ளிட்ட அனைத்து இனிப்புப் பண்டங்கள், லாஹிரி வஸ்துக்கள், தீனிக்கடைப் பண்டங்கள், துரித உணவுகள், எண்ணெயில் பொரிப்பவை உள்ளிட்ட அனைத்தையும் உடனே நிறுத்தி விட்டு காலவரையற்ற நிபந்தனையற்ற
சரணாகதி நிலைக்கு வந்து மேற்கூறியவை அனைத்துக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு விட்டோம்.

health dr farook abdulla diabetes

ஆனாலும் ரத்த சுகர் அளவுகள் ஓரளவுக்கு மேல் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறது. இதற்கு என்ன செய்வது? இதற்கு தாங்கள் நீரிழிவு குறித்து நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். டைப் டூ நீரிழிவு என்பது திடீரென ஒருநாளில் வரும் நோயன்று. அது உடலின் வளர் சிதை மாற்ற இயந்திரத்தில் தொடர்ந்து பல நாட்கள் ஏற்படும் கோளாறுகளால் ஏற்படும் நோயாகும்.

டைப் டூ நீரிழிவில் இன்சுலின் சுரப்பில் சிக்கல் இல்லை. அந்த இன்சுலின் தனது பணியைச் செய்வதில் தான் சிக்கல் என்று கூறப்பட்டாலும் இங்கு டைப் டூ கண்டறியப்படும் பலருக்கும்
இன்சுலின் சரியாகச் சுரப்பதிலும் சிக்கல் இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறேன்.

அதாவது நாம் உணவில் மாவுச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது அதை நமது உடல் க்ளூகோஸாக மாற்றி ரத்தத்தில் கலக்கும். ரத்தத்தில் கலக்கப்பட்ட க்ளூகோஸ் கணையத்தின் பீட்டா செல்கள் அடையும். பீட்டா செல்களில் உள்ள சென்சார்கள் ரத்தத்தில் அதிகமான அளவு க்ளூகோஸ் ஏறியதைச் சரியாகக் கண்டறிந்து உடனே தன்னகத்தே உண்டாக்கி வைத்திருக்கும்.

இன்சுலினை ரத்தத்தில் கலந்து விடும். இந்த இன்சுலின் சுரப்பு இரண்டு படிநிலைகளில் நடக்கும். முதல் படிநிலை - கல்யாணப் பந்தியில் முதலில் வைக்கப்பட்ட ஒரு ஸ்வீட் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உடனடியாக க்ளூகோஸ் வேகமாக ஏறும். இதற்கு ஏற்றவாறு தன்னகத்தே ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த இன்சுலினை உடனே வேகமாகக் கலந்து விடும்.

இது பத்து நிமிடங்கள் தான். அதற்குப் பிறகு
இரண்டாவது படிநிலை - அதற்குப் பிறகு நாம் அடுத்து சோறு - காய்கறி என்று உண்ணும் போது புதிதாக இன்சுலினை உற்பத்தி செய்து தேவைக்கேற்ப ரத்தத்தில் மெதுவாக கலந்து கொண்டே இருக்கும். இந்தச் சுரப்பு 2 முதல் 3 மணிநேரங்கள் வரை நீடிக்கும்.

இதில் டைப் டூ நீரிழிவு நோயாளிகளுக்கு, நோய் கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டங்களிலேயே இந்த முதல் நிலை தீவிர இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும். நோய் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் போது இரண்டாம் படிநிலை இன்சுலின் சுரப்பும் பாதிப்புக்குள்ளாகும்.

இதனால் தான் நல்ல உணவுக் கட்டுப்பாடு செய்த பிறகு கூட உடல் பயிற்சி செய்தும் கூட பலருக்கும் நீரிழிவு கட்டுக்குள் வராமல் இருக்கிறது. பீட்டா செல்களின் சென்சார்களில் ஏற்படும் இந்தக் கோளாறு என்பது ரத்தத்தில் தொடர்ந்து அதிக அளவு மாவுச்சத்து இருந்து கொண்டே இருப்பதால் நிகழ்கிறது.

இந்தக் கோளாறு, சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீரிழிவு கட்டுப்படுத்தபடாமல் இருந்தவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, அவர்கள் இரண்டு இட்லி சாப்பிட்டால் கூட அதற்கேற்ற இன்சுலின் சுரப்பு இல்லாமல் ரத்தத்தில் க்ளூகோஸ் மிக அதிக அளவு ஏறும்.

இது ஏன்... ஒரு டம்ளர் இனிப்பில்லாத பால் டீ பருகினால் கூட அதற்கேற்ற இன்சுலின் சுரப்பு இல்லாமல் ரத்த க்ளூகோஸ் 250-300 வரை ஏறுவதைக் காண முடியும். இதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? தாங்கள் உண்ணும் மாவுச்சத்து நுகர்வை குறைக்க வேண்டும். அதற்கு ஈடாக புரதச் சத்து / நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த க்ளூகோஸ் அளவுகளை தடாலடியாக ஏற்றும் ஹை க்ளைசீமிக் இண்டெக்ஸ் உணவுகளான தானியங்கள் / இனிப்பு சுவை கொண்ட உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யலாம்.

ரத்த க்ளூகோஸ் அளவுகளைக் குறைவாக ஏற்றும் லோ க்ளைசீமிக் உணவுகளான முட்டைகள், காய்கறிகள், கீரைகள், பனீர் / டோஃபு , சோயா பீன்ஸ், நிலக்கடலை, பாதாம் / வால்நட் , பறவை/கால்நடை/ கடல்சார் விலங்குகளின் மாமிசம், தேங்காய், வெள்ளரிக்காய், கொய்யாக்காய், நெல்லிக்காய் உள்ளிட்டவற்றைக் கொண்டு உங்களின் உணவுத் தட்டை அமைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் ரத்தத்தில் க்ளூகோஸ் மிக அதிகமாக ஏறாமல் இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்புக்கான தேவையும் குறையும். இன்சுலின் சுரப்பில் ஏற்படும் சிக்கல்களைச் சரி செய்ய
ரத்தத்தில் அதிகமான க்ளூகோஸை தசைளுக்கு உணவாகக் கொடுப்பதற்குரிய முக்கிய விஷயமான தினசரி ஒரு மணிநேர உடல் பயிற்சி எனும் அஸ்திரத்தைக் கையில் எடுக்க வேண்டும்.

அப்படியும் ரத்த க்ளூகோஸ் நாம் நினைக்கும் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் மாத்திரைகளை உண்ணும் உணவின் மாவுச்சத்துக்கு ஏற்றவாறு மருத்துவர் அறிவுரைப் படி உட்கொள்ள வேண்டும். பல ஆண்டுகள் இருந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் உணவு முறை மாற்றத்தால் மட்டும் குணமாகும் என்று எண்ணுவது பேராசை.

நிச்சயம், தொடர்ந்து வாழ்வியல் மாற்றத்தை உயிர் மூச்செனக் கடைபிடிக்க வேண்டும். அதனுடன் மருத்துவ சிகிச்சையை ( மாத்திரை / மருந்துகள் / தேவைப்பட்டால் இன்சுலின் ) ஆகியவற்றை மருத்துவர் பரிந்துரையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு நம்மில் பலரும் சுகருக்கு போட்டு வரும் மாத்திரைகளை நிறுத்த ஆசைப்படுகிறோமே தவிர அதற்குத் தேவையான உணவு முறைக் கட்டுப்பாடு + உடல் பயிற்சி + உறக்கம் + உளநலன் பேணல் ஆகியவற்றைத் தொடர்கிறோமா?
என்பது கேள்விக்குறியே.

என்னைப் பொருத்தவரை நீரிழிவு ஏற்பட்டவர்கள் மருத்துவர் ஆலோசனையின் படி முறையான சிகிச்சை அதனுடன் சுய மற்றும் மருத்துவ கண்காணிப்பு + குறை மாவு உணவு முறை + உடல் பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடிப்பது
அவர்களது ஆரோக்கியத்துக்கும் ஆயுள் நீட்சிக்கும் நல்லது.

குறை மாவு உணவு முறையின் அடிப்படைகளை முறையாகப் புரிந்து கொள்வது மிக எளிது. அவற்றைப் புரிந்து வாழ்வியல் நெறியாக ஏற்று நடப்பது என்பது அதன் வெற்றியில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+