மத்திய கிழக்கில் சீனா ஆட்டம்- கைகோர்த்த சவுதி- ஈரான்! அமெரிக்கா நாட்டாண்மைதனத்துக்கு மரண அடி!
சவுதி அரேபியாவும் ஈரானும் கை கோர்த்திருப்பது சர்வதேச அரங்கில் மிக முக்கியமான நிகழ்வாகும்.
டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் எலியும் பூனையுமாக இருந்த சவுதி அரேபியா, ஈரான் இப்போது நட்பு நாடுகளாக கை குலுக்கிக் கொண்டிருக்கின்றன. பரம எதிரிகளாக செயல்பட்ட இரு இஸ்லாமிய நாடுகளை நட்பு சக்திகளாக கரம் கோர்க்க வைத்து உலக ஒழுங்கு என்ற போக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது சாட்சாத் சீனாதான்!
மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா, அமெரிக்காவின் நட்பு சக்திகளில் ஒன்றாக இருந்து வந்தது. அமெரிக்காவின் பிரதான எதிரி நாடுகளில் ஒன்றான ஈரான் இருந்து வந்தது. இதனால் இயல்பாகவே ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கான ஆதரவு குரலை வெளிப்படுத்தியிருந்தது.
எந்த ஒரு உலக ஒழுங்கும் நிலையானதாக இருப்பது இல்லை என்பதுதான் வரலாறு. அமெரிக்காவின் பெரும் நம்பிக்கைக்குரிய நட்பு சக்தியாக சவுதி இருந்த போதும் இரட்டை கோபுர தாக்குதல், கொரோனா காலம், உக்ரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம் ஆகிய முக்கியமான காலகட்டங்களில் இந்த உலக ஒழுங்கு என்பது பெரும் ஆட்டம் காணக் கூடியதாக மட்டுமல்ல தலைகீழான மாற்றங்களையும் கண்டிருக்கிறது.

அமெரிக்காவும் பயங்கரவாதமும்
இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதம் என்பது விஸ்வரூபம் எடுக்காத ஒரு சொற்பதமாக இருந்தது. பூமிப்பந்தில் பல்வேறு தேசிய இனங்ககள், கட்டமைக்கப்பட்ட நாடுகளுக்குள் ஆயுதம் ஏந்தி விடுதலைக்கான யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்தன. இவற்றை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதை பிராந்திய சூழலுக்கு ஏற்ப சர்வதேச நாடுகள் முடிவு எடுத்துக் கொண்டிருந்தன. ஐநா பிரகடனத்தின்படி தேசிய இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்ற நம்பிக்கையில் இந்தப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின்னர் இந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், புதியதாக பிறப்பெடுத்த பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டன. உலகில் எந்த ஒரு நாட்டிலும் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் ஆயுத கிளர்ச்சிகள் நடைபெறாத வகையில் அனைத்து சர்வதேச நாடுகளும் கூட்டணி அமைத்து களமிறங்கின. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த சர்வதேச சுனாமியில் சிக்கி சிதைந்து போன போராட்டங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் போராட்டம்.
அமெரிக்காவின் ஆட்டங்கள்
இன்னொரு பக்கம் பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம்; அணு ஆயுதங்களை அழிக்கிறோம் என்ற பெயரில் இரட்டை கோபுர தாக்குதலின் கீழ் பெறப்பட்ட அனுதாபத்தின் அடிப்படையில் அமெரிக்கா, நாட்டாண்மை வேட்டையை தொடங்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டனர்; அல் கொய்தாவின் ஒசாமா பின்லேடன், ஈராக்கில் சதாம் உசேன், லிபியாவின் கடாபி என பல சகாப்தங்களுக்கு அமெரிக்கா முடிவுரை எழுதிக் கொண்டிருந்தது. இரட்டை கோபுர அனுதாபத்தின் பெயரால் அமெரிக்கா பெற்ற நாட்டாண்மை வரைமுறையின்றி வாலாட்டிக் கொண்டிருந்தது. இதில் மத்திய கிழக்கு நாடுகளும் சிக்கிக் கொண்டன.
சவுதி, ஈரான், அமெரிக்கா
குறிப்பாக சவுதி அரேபியாவும் ஈரானும் அமெரிக்கா நிலைப்பாட்டில் இருதுவருவங்களாக நின்றன. ஈரான் மீது அமெரிக்கா யுத்தமே தொடங்கலாம்; அப்படியான ஒரு யுத்தத்துக்கு அமெரிக்காவின் பங்காளியாக சவுதி துணை நிற்கும் என்றெல்லாம் சர்வதேச சூழல்கள் இருந்தன. அமெரிக்காவின் இத்தகைய ஆட்டத்தை கனத்த மவுனத்துடன் சீனாவும் ரஷ்யாவும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன என்று சொல்லிவிட முடியாது. தங்கள் பங்குக்கு சீனாவும் ரஷ்யாவும் சர்வதேச விவகாரங்களில் ஆடுபுலியாட்டங்களை ஆடிக் கொண்டிருந்தன.

டிரம்ப் நிர்வாக போக்கு
அமெரிக்காவில் அதிபராக இருந்த டிரம்ப் நிர்வாகத்தில் சவுதி அரேபியா மீதான நெருக்கடி அதிகரித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷ போக்கால் உலகின் பல நாடுகளுடன் கடும் மோதல் போக்கையே அமெரிக்கா கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. டிரம்ப்பின் இந்தப் போக்கு மெல்ல மெல்ல உலக ஒழுங்கு என்ற உலக நாடுகளின் ஆதரவுப் போக்கில் மாற்றங்களை உருவாக்கவும் தொடங்கின.
ஜோ பைடன் காலம்
அமெரிக்காவில் டிரம்புக்குப் பிந்தைய ஜோபைடன் நிர்வாகம், ஒருவித மென்மைப் போக்கை உலக நாடுகளுடன் கடைபிடித்தன. ஆனால் இதுநாள் வரை மவுனிகளாக இருந்த சீனாவும் ரஷ்யாவும் இப்போது ஆக்ரோஷ முகத்தை காட்ட தொடங்கின. உக்ரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம், தைவான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள், தென்சீனா கடலில் சீனாவின் போர் முனைப்புகள், தெற்காசியாவில் இந்தியாவுடனான எல்லை மோதல்கள் என உலக நாடுகளை அணி அணிகளாக ரஷ்யாவும் சீனாவும் பிரித்துக் கொண்டிருந்தன.
ரஷ்யா-சீனா- சவுதி- ஈரான்
ரஷ்யா, சீனாவின் இந்த அரசியல் விளையாட்டுகள் மத்திய கிழக்கில் மிக கடுமையான அல்லது தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தின. அமெரிக்காவோ, சவுதி அரேபியாவை மேலும் மேலும் தமது பிடியில் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் சவுதி அரேபியாவோ, ரஷ்யா- சீனா சார்பு நிலை பக்கம் போனது. ஏற்கனவே அண்டை நாடான ஈரானும் ரஷ்யா- சீனா சார்பு நிலையில்தான் இருக்கின்றன. இதனால் பல தசாப்தங்களாக நீடித்த சவுதி அரேபியா- ஈரான் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க சீனாவால் எளிதில் முடிந்தது. இப்போது ஈரானும் சவுதி அரேபியாவும் நட்பு சக்திகளாக சீனாவின் முன் முயற்சியால் கை குலுக்கிக் கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமாக சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவுக்கான பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவின் தலையீடு
இன்னொரு பக்கம் சர்வதேச விவகாரங்களில் சீனாவின் தலையீடு என்பது தலைதூக்கவும் தொடங்கிவிட்டது என்பதை சவுதி- ஈரான் விவகாரம் வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாக அமெரிக்காதான் இத்தகைய விவகாரங்களில் நாட்டாண்மைதனம் செய்து கொண்டிருக்கும். ரஷ்யா, சீனா நாடுகள் வேடிக்கை பார்க்கும் அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் இப்போது சீனா களத்தில் இறங்கி கோல் அடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் உலகின் பொருளாதாரத்தை, உலக அரசியல் நிகழ்வுகளை தீர்மானிக்கிற எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில் நின்று அமைதிப் பேச்சுவார்த்தை, நட்புறவு மேலாண்மை என்ற புதிய முகமூடியுடன் காட்சி தருகிறது சீனா. அதனால்தான் இது அமெரிக்காவின் சர்வாதிகாரம் அல்லது சர்வ வல்லமை பாசாங்குதனத்துக்கு பயங்கரமாக சம்மட்டி அடி என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.
கேள்விக்குறியாகும் அமெரிக்காவின் நாட்டாண்மை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒரு உலக யுத்தமாக மாறலாம் என கணிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவின் இந்த யுத்தத்தில் உக்ரைன் தனித்துவிடப்பட்டது; அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளால் ரஷ்யாவை எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் உலக நாடுகளின் ஒரு பகுதிக்கான அமெரிக்காவின் தலைமைத்துவம் என்பது மிகப் பெரும் கேள்விக்குறியானது. இந்த பேரதிர்வில்தான் சவுதி அரேபியா, ரஷ்யாவின் நட்பு சக்தியான சீனாவுடன் கை கோர்த்து நிற்கிறது.
என்ன நடக்கும்?
இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தை தடுக்க முடியாத அமெரிக்காவால் நாளை தைவான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க முடியாத சூழ்நிலை வரலாம். ஏனெனில் உக்ரைனில் கோட்டை விட்டது அமெரிக்கா; ஆனால் இந்த இடைவெளியில் தங்களுக்கான வலிமையை ரஷ்யாவும் சீனாவும் அதிகரித்துள்ளன. ரஷ்யா, சீனா பக்கம் இப்போது மத்திய கிழக்கின் மிக முக்கியமான சவுதி அரேபியாவும் ஈரானும் நிற்கின்றன என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய கிழக்கில் சீனா ஆடியிருக்கும் இந்த அட்டகாசமான ஆட்டத்தால் அமெரிக்காவின் மேலாண்மைத்தனம் அல்லது நாட்டாண்மைத்தனம் மிகப் பெரும் அச்சுறுத்தலுக்கும் சரிவுக்குமான இடத்தைத் தந்துவிட்டது. இனி அமெரிக்காவின் இடத்தை பொருளாதார ரீதியாக மட்டுமல்ல அரசியல் நகர்வுகளிலும் சீனா கைப்பற்றவே அதிக வாய்ப்புகள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications