Independence Day:ஆங்கிலேய தளபதி டூ மதுரை சுல்தானாக... கான்சாகிப் யூசுப்கான் என்ற மருதநாயகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் விடுதலை கொண்டாட்டங்களை அனுபவிக்கும் நாம் இந்த மண்ணின் விடுதலைக்காக சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் மூத்த குடிகள் நிகழ்த்திய சுதந்திர யுத்தங்களையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது தீரன் கான்சாகிப் யூசுப் கான் எனும் மருதநாயகம்.

Independence Day: History of Khan Sahib Of Madurai Yusuf Khan

மருதநாயகம்- கமல்ஹாசன் திரைப்படமாக எடுக்க முயற்சித்து கைவிடப்பட்ட ஒன்று. இங்கிலாந்து அரசியார் வந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

யார் இந்த மருதநாயகம்? தமிழர் நிலத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகள் முடிவுக்கு வந்தன. மதுரையில் விஜயநகரத்து நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தின் இறுதி கட்டங்கள். அப்போது மதுரையை அரசாண்டது விஜயரங்க சொக்க நாத நாயக்கர். இவரது மனைவிதான் இராணி மீனாட்சி. இராணி மீனாட்சியுடன் 300 ஆண்டுகால நாயக்கர்கள் அரசாட்சி மதுரையில் முடிவுக்கு வந்தது.

அந்த கால கட்டத்தில்தான் கி.பி.1725-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகே பனையூரில் வேளாளர் குலத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அவரது பெற்றோர் இளம் வயதிலேயே காலமானதால் இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட நிலையில் சூட்டப்பட்ட பெயர் யூசுப்கான்.

Independence Day: History of Khan Sahib Of Madurai Yusuf Khan

இளம் வயதிலேயே புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆளுநர் வீட்டு பணியாளராக பணிபுரிந்தார். 1751-ம் ஆண்டு ஆற்காடு நவாப் பதவிக்காக வாலஜாவும் சாந்தா சாகிப்பும் போட்டியிட மூக்கை நுழைத்தது வர்த்தகம் செய்ய வந்த ராபர்ட் கிளைவின் கிழக்கிந்திய கம்பெனி. அப்போது ஆங்கிலேயர்கள், வாலஜாவுக்கு களமிறங்கினர். சாந்தா சாகிப்புக்காக பிரெஞ்சு படை வந்தது. அப்போது பிரெஞ்சு படையில் நெல்லூர் பிரிவில் இருந்தவர் கான்சாகிப். இந்த யுத்தத்தில் ஆங்கிலேயர்கள் வெல்ல, அவர்களுக்கு மதுரை, திருநெல்வேலியில் வரி வசூலிக்கும் உரிமையை கொடுத்தார் நவாபு வாலஜா. இந்த யுத்தத்துக்குப் பின்னர் யூசுப்கானை தமது ஆங்கிலேயர் படையில் சேர்த்துக் கொண்டார் ராபர்ட் கிளைவ்.

கர்னல் ஹரான் தலைமையிலான ஆங்கிலேயப் படை மதுரை, நெல்லையில் வரி வசூலிக்க ஆயிரக்கணக்கானோருடன் படை திரட்டியது பயணித்தது. இந்த பயணத்தில் மூர்க்கமான, கொடூரமான ஒரு தளபதியாக இருந்தவர் யூசுப்கான். அதுவும் மதுரையை ஆண்ட மியானைத் தேடி கோவில்குடியில் கள்ளர் சமூகத்தினர் கோயிலை சூறையாடி தீக்கிரையாக்கி குலதெய்வ சிலைகளை கொள்ளையடித்த கொடுஞ்செயல் கான்சாகிப்பின் மூர்க்கத்தனத்தை காட்டியது. அதேபோல் கட்டாலங்குளத்து மாமன்னர் வீரன் அழகுமுத்துகோன் வரி கட்ட மறுத்த நிலையில் அவரும் அவர்தம் 200 வீரர்களும் கான்சாகிப்பின் பீரங்கி படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் தமிழ் நிலத்தில் ஆங்கிலேயர்களுடனான முதல் யுத்தம். ஆனால் வீரன் அழகுமுத்துகோனிடம் பலித்த கான்சாகிப் ஜம்பம், அருகே நெற்கட்டும்சேவல் பூலித்தேவரிடம் பலிக்காமல் போய் தோற்று திரும்பினார்.

அப்படி திரும்பிய வழியில்தான் மதுரை - நத்தம் இடையே நத்தம் கணவாய் பகுதியில் கொரில்லா போர்முறையில் 970 ஆங்கிலேயர்களை கொன்று குவித்து குலதெய்வ சிலைகளை மீட்டனர் கள்ளர்கள். அதுதான் வரலாற்றின் பக்கங்கள் மிக ஆழமாக எழுதாமல் விட்ட நத்தம் கணவாய் யுத்தம். அந்த காலகட்டத்தில் யூசுப்கானுடன் இணைந்து கொண்டதுதான் ஆங்கிலேயர்கள் தந்த கான்சாகிப் என்கிற பட்டம். 1757-ல் மதுரையின் ஆளுநரானார் கான்சாகிப் யூசுப்கான். நத்தம் கணவாய் யுத்தத்துக்கு பழிவாங்கும் வகையில் தாம் மதுரையின் ஆளுநரான உடனேயே 500-க்கும் மேற்பட்ட கள்ளர்களை தூக்கிலிட்டு வெறியைக் காட்டிக் கொண்டார். பின்னர் மீண்டும் படை திரட்டி நெற்கட்டும்சேவல் போனார் மருதநாயகம். பூலித்தேவருடன் யுத்தம் நடத்தி அவரையும் படுகொலை செய்தார். அப்போது எட்டயபுரத்து பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா இருந்தார்.

மதுரையின் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் கான்சாகிப் யூசுப்கானின் வாழ்க்கையும் மாறியது. போர்வெறியராகவே இருந்த கான்சாகிப் யூசுப்கான் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்தார். இதனால் மக்களிடம் செல்வாக்கு பெற்றார். ஒருகட்டத்தில் தம்மை மதுரையின் சுல்தான் என தனி ஆட்சியாளராகவும் பிரகடனம் செய்தார் கான்சாகிப் யூசுப்கான் எனும் மருதநாயகம். அப்போது அவரிடம் 27,000 படை வீரர்கள் இருந்தனர். ஆங்கிலேயப் படை சும்மாதான் இருக்குமா? கர்னல் மேன்சன் தலைமையிலான ஆங்கிலேயப் பெரும் படை மதுரை நோக்கி கான்சாகிபுடனான யுத்தத்துக்கு வந்தது. நத்தம் கணவாய் ஆங்கிலேயர் வசமான போதே கான்சாகிப் யூசுப்கானின் சரித்திரமும் முடிவுக்கு வந்தது. படை கொண்டு மட்டுமே கான்சாகிப் யூசுப்கானை வெல்ல முடியாது என்பதால் வழக்கம் போல துரோகம், முதுகில் குத்த செய்தல் என போர்மரபுகளை மீறிச் செயல்பட்டது ஆங்கிலேய படை. எந்த பிரெஞ்சு படையால் கான்சாகிப் யூசுப்கானின் வாழ்க்கை தொடங்கியதோ அதே பிரெஞ்சு படையில் தளபதியாக இருந்த மார்சன்ட் என்பவர் கான்சாகிப் யூசுப்கானை கட்டிப் போட்டு கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.

கி.பி.1764-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதியன்று மதுரை - திண்டுக்கல் சாலை காளவாசல் சம்மட்டிபுரத்தில் கான்சாகிப் யூசுப்கான் தூக்கிலிடப்பட்டார். கான்சாகிப் தலை துண்டிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கை கால்களும் வெவ்வேறாக துண்டிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. சம்மட்டிபுரத்தில் கான்சாகிப் யூசுப்கானின் எஞ்சிய உடல் புதைக்கப்பட்டது. இன்றளவும் அது வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது.

Ref: YUSUF KHAN- THE REBEL COMMANDANT by S. C. HILL (1914)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+