சொந்த மாவட்டத்தில் அரசு வேலை.. கனவை நனவாக்க செம சான்ஸ்.. ஊராட்சி செயலர் பணி.. இன்றே கடைசி நாள்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 1,300 ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், தேர்வு முறை எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. மொத்தம் 1,300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர் பணியிடம்
ஊராட்சி செயலர் பணியை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசு திட்டங்களை சரியாக செயல்படுத்துதல், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, சுகாதாரம் மற்றும் சுத்தம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிடுவது, வரி வசூல் செய்வது என அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பு மிக்க பதவியாகும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,300-க்கும் அதிகமான ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. மாவட்ட வாரியாக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
கல்வித் தகுதியை பொறுத்தவரை 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2025 தேதியின்படி 18 வயது நிரம்பியவர்கள் முதல் 34 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்திற்கு சென்றதும், "ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க" என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் விளம்பரத்தை பார்க்க, அறிவுரைகளை பார்க்க, பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
இதில் முதல் இரண்டையும் படித்து பார்க்கவும். தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு இருப்பின், "விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனில் சென்று கேட்கப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை எப்படி?
வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். இதன் பிறகு டிசம்பர் 3ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும். தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்முகத் தேர்வு நடத்துவர். இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications