டிஎன்பிஎஸ்சியில் வெற்றி.. அப்பா வேலை செய்த மன்னார்குடி நகராட்சியில் ஆணையாளரான 'தூய்மை பணியாளர்' மகள்
திருவாரூர்: தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய மன்னார்குடி நகராட்சியில் அவரது மகளே ஆணையாளராக மாறி உள்ளார். உலகை விட்டு சென்ற தந்தையின் கனவை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நிறைவேற்றி உள்ளார் துர்கா.., கல்வி கற்றால் இந்த உலகில் பெண் ஒருவர் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த பெண் சிறந்த உதாரணம்.
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்"

இந்த பாடல் வாரிகள் நிச்சயம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த துர்காவிற்கு பொருந்தும்.. ஏனெனில் தன் மகளை அரசு அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தந்தையின் கனவை நினைவாக்கி உள்ளார். ஆனால் மகள் அரசு அதிகாரியாக பொறுப்பேற்பதை பார்க்கத்தான் உயிருடன் இல்லை.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சேகர். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார், சேகரின் மனைவி செல்வி வீட்டு வேலைகளுக்கு மன்னார்குடியில் சென்று வந்தார்.
தூய்மை பணியாளர் சேகரும் செல்வியும் தங்கள் மகள் துர்கா பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். பின்னர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படிக்க வைத்துள்ளனர். தங்களின் ஒரே மகளை நன்றாக படிக்க வைத்த சேகர் செல்வி தம்பதி, கடந்த 2015-ல் துர்காவிற்கு 21 வயது இருக்கும் போதே, மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பின்னர் வழக்கமான வாழ்க்கைக்குள் போன தூர்கா, எப்படியாவது அரசு ஊழியராக வேண்டும் என்ற கனவை மட்டும் விடவே இல்லை. துர்காவின் கணவர் நிர்மல் குமார் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். துர்காவின் கனவு அரசு ஊழியர் ஆக வேண்டும் என்பது தான் என்று அறிந்த கணவன் நிர்மல் குமார் , அவரை அரசு வேலையில் சேர தயாராகுமாறு ஊக்கப்படுத்தி உள்ளார்.
முதல் முயற்சியாக கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து 2020ல் குரூப் ஒன் தேர்வு எழுதினார். அதில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
அதன்பின்னர் இரண்டு குரூப் 4 தேர்வுகளை எழுதி உள்ளார். ஆனால் அதில் கட் ஆப் இல்லாத காரணத்தினால் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்ற துர்கா, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2024 ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று மன்னார்குடி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அதனை பார்க்கத்தான் துர்காவின் தந்தையான சேகர் உயிருடன் இல்லை.. தனது மகளை அரசு ஊழியராக்க வேண்டும் ஆசைப்பட்ட சேகர் அந்த கனவு நிறைவேறியதை பார்க்காமலே சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications