விஜய்யின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அல்லாடும் பவன் கல்யாண்! புழுங்கி தீர்க்கும் பவர்ஸ்டார்!
ஹைதராபாத்: தமிழகத்தில் ஒரே தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்த விஜய்யை பார்த்து தான் அசந்து போய்விட்டதாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விஜய் மீது லேசான பொறாமை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பவன் கல்யாணின் ஜனசேனா வென்று 3 அமைச்சர்களை பெற்றது. அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தன்னையும் தனது அமைச்சர்களையும் சரியாக நடத்துவதில்லை என்ற வருத்தம் பவன் கல்யாணுக்கு உள்ளதாம். இதனால் அமைச்சரவை கூட்டங்களை அவர் தவிர்த்து வருகிறார் என்கிறார்கள். மேலும் ஜனசேனாவை தெலுங்கு தேசம் பலவீனப்படுத்தி வருவதாகவும் கருதுகிறாராம்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும் அமைச்சருமான நார லோகேஷும் அடிக்கடி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து நல்ல நட்பில் இருக்கிறார்களாம். அதே போல் பவன் கல்யாணும் தனது கட்சியினருடன் அடிக்கடி டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்துள்ளனராம்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு இரு மத்திய அமைச்சர்கள் உள்ள நிலையில் தங்கள் கட்சிக்கும் மத்தியில் அமைச்சரவையில் ஒரு இடம் தர வேண்டும் என அவர் விரும்புகிறாராம். இனி நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில் 2 எம்பிக்களை கொண்ட ஜனசேனாவுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் முன்னேற்றம் அண்டை மாநிலமான ஆந்திராவை பெரிதும் பாதித்துள்ளதாம். குறிப்பாக விஜய் தேர்தலில் வென்ற 23 நாட்களில் பவன் கல்யாண் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக எளிதாக வெற்றி பெற்றுவிட்டது. எனக்கு விஜய் மீது லேசான பொறாமை ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முறையில் விஜய் முதல்வராகியிருக்கிறார்.
விஜய்யின் உருவத்தை ஹோலோகிராமில் கொண்டு வந்தும், கட் அவுட்களை வைத்தும் அவரது கட்சியினர் பெருவாரியான வெற்றியை கொடுத்துள்ளனர். நானும்தான் 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு பெரிய வெற்றியை நான் பார்த்ததே இல்லை.
அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நாம் ஏன் ஆந்திராவில் கூட்டணியை அமைத்தோம் என்ற கேள்வியை எனது ஆதரவாளர்கள் எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் ஆந்திராவுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் அரசியல் சூழல் என்பது வேறுபட்டுள்ளது. சமூக மாற்றம் வேண்டுமென்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியை நான் தொடங்கினேன். முன்னாள் முதல்வர் என்டிஆரின் அரசியல் பயணத்தை பார்த்துள்ளேன். அதே நேரத்தில் நக்சலிச கொள்கைகளுக்காக இளைஞர்கள் உயிர்த் தியாகம் செய்ததையும் நான் பார்த்துள்ளேன்.
அந்த அனுபவங்கள் என்னை ஆழமாக சிந்திக்க செய்தது. அதனால் எனக்கு பொது வாழ்வில் பதவி மற்றும் அதிகாரத்தை காட்டிலும் சித்தாந்தம், கொள்கை மிகவும் முக்கியம் என கருதுகிறேன். அந்த எண்ணத்துடன்தான் இந்த கட்சியை வழிநடத்துகிறேன்.
தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது என இப்போது நீங்கள் எல்லோரும் கருதலாம். அப்படி நம் கட்சியின் தொண்டர்கள் சொல்வது எனது காதிலும் படுகிறது. நாம் தனித்து போட்டியிட்டிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications