Accenture Layoff: ரூ.17,746 கோடி செலவில் 3 மாதத்தில் 11,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அக்சென்ச்சர்- ஷாக்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சரில் கடந்த 3 மாதத்தில் மொத்தம் 11,000க்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை உடனடியாக நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிறுவனம் இதற்காக பணிகளை மேற்கொண்டு ரூ.17,746 கோடியை செலவிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், கூகுள், விப்ரோ உள்பட பல ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் அவ்வப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இது ஐடி துறை ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எப்போது வேலை பறிபோகும்? என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அக்சென்ச்சர் ஐடி நிறுவனமும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 11 ஆயிரம் ஊழியர்கள் திடீரென்று பணி நீக்கம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அக்சென்ச்சர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட், ‛‛நாம் நம் அனுபவத்தின் அடிப்படையில் மறுதிறன் அடிப்படையில் திறமையானவர்களிடம் இருந்து பணிகளை பெறுவது என்பது குறுகிய காலத்தில் சாத்தியமாகாது. இதனால் ஊழியர்கள் தங்களின் திறனை உடனடியாக வளர்த்து கொள்ள வேண்டும். ஏஐ-க்களை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஊழியர்கள் தங்களின் திறமையை வளர்த்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்பதையும் வார்னிங்காக கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் அக்சென்ச்சர் நிறுவனம் 3 மாதத்தில் 11,000 க்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்வதற்காகரூ.17,746 கோடியை செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த செலவை கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து ஆட்டோமேஷன், ஏஐ உள்பட பிற பிரிவுகளில் மறுசீரமைப்பை கொண்டு வரும் முனைப்பில் இந்த தொகையை கடந்த 3 ஆண்டுகளில் அக்சென்ச்சர் மேற்கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான தொகை பணி நீக்க நடைமுறைக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் மட்டும் பணி நீக்கம் மற்றும் அதுசார்ந்த செலவுகளுக்கு 615 மில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டுள்ளது. தற்போதைய காலாண்டில் இன்னும் கூடுதலாக 250 மில்லியன் டாலர் வரை செலவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அக்சென்ச்சர் ஊழியர்களின் எண்ணிக்கை 7,91,000ல் இருந்து 7,79,000 ஆக குறைந்துள்ளது.
தற்போது அக்சென்ச்சர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 69.7 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏஐ பயன்பாடு என்று நிறுவனம் நம்புகிறது. கடந்த நிதியாண்டில் ஏஐ தொடர்பான புராஜெக்ட்டுகளுடன் 5.1 பில்லியன் டாலர் வரை ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏஐ மூலமாக 3 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது. இதனால் அக்சென்ச்சர் ஐடி நிறுவனம் ஏஐ மற்றும் டேட்டா புரோபஷனல் ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 77,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications