விஜய் போடும் பிளான்.. மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் நாளை தனி தீர்மானம்.. ஏன் முக்கியம்?
சென்னை: தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூட உள்ளது. இந்நிலையில் தான் நாளை கர்நாடகா சார்பில் காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் தனி தீர்மானம் கொண்டு வர முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தனி தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட டிகே சிவக்குமார் நடவடிக்கை எடுத்து வருகிறார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

இதற்கிடையே தான் காவிரியில் மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் கர்நாடகா அரசின் மேகதாது அணை திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். பல கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கர்நாடகா விடுவதாக இல்லை. இன்று கூட கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், ''மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது. உச்சநீதிமன்றம் கூறியபடி ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கொடுப்போம். மேலும் கோடை காலங்களில் அணையில் தண்ணீரை தேக்கிவைத்து தமிழகத்துக்கு வழங்குவோம். கர்நாடகாவை விட தமிழகத்துக்கு தான் மேகதாது அணையால் அதிக பலன் கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தான் மேகதாது அணை கட்டுவதை தடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வர முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் இன்று தொடங்கியது. நாளை அதன்பிறகு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சியின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நாளை தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மேகதாதுவில் தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
கர்நாடகாவின் அணை கட்டும் விரிவான திட்ட அறிக்கையை ஏற்க கூடாது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும். தமிழக விவசாயிகள் நலனை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட பிறகு எம்எல்ஏக்களின் ஆதரவு கோரப்படும். இதற்கு அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த தனி தீர்மானம் வெற்றி பெறும். அதன்பிறகு தீர்மானம் குறித்த விவரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இப்படி மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும்போது அது மொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் பிரதிபலிப்பதாக அமையும். இதனால் தான் முதல்வர் விஜய் இந்த தனி தீர்மானத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக முதல்வர் விஜய் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோது மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முடிவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கை வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications