டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? தேர்வர்கள் மறக்க கூடாத விஷயங்கள்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும் சனிக்கிழமை நடக்கிறது. இந்த தேர்வுக்கு இன்னும் சரியாக 4 நாட்களே இருக்கும் நிலையில், குரூப் 4 தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.. தேர்வர்கள் மறக்க கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதையும் இங்கு பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,295 பணியிடங்களுக்கு விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான தேர்வு வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

குரூப் 4 தேர்வு
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினாலும் குரூப் 4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கும் இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது.
பத்தாம் வகுப்பு கல்வி தகுதிதான் என்றாலும் கூட டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதை பார்க்க முடியும். விஏஓ , இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரே ஒரு போட்டி தேர்வுதான்.. கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் நேரடியாக வேலை என்பதால் பலரும் ஆர்வத்துடன் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். தேர்வுக்கு இன்னும் சரியாக 4 நாட்களே இருக்கும் நிலையில், குரூப் 4 தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்..
தேர்வர்களுக்கான விதிமுறைகள்:
* தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வுக் கூட்டத்திற்குள் வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் உடன் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.
* தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர், தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
* தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தேர்வர் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் அசலினை அறைக் கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும்.
* ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி https://tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளங்களில் தேர்வர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
Mock test
குரூப் தேர்வர்கள் பலரும் வீட்டில் இருந்தே தயாராகி வருகிறார்கள். பயிற்சி மையங்களில் படிப்பவர்களுக்கு மாதிரி தேர்வுகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. வீட்டில் இருந்து படிக்கும் தேர்வர்களும் மாதிரி தேர்வுகளை (Mock Test) எழுதி பார்க்க முடியும். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் மெய்நிகர் கற்றல் போர்டல் https://tamilnaducareerservices.tn.gov.in/ எனப்படும் போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு இணையதளம் செயல்படுகிறது.
இந்த இணையதளத்தில் தேர்வர்கள், போட்டித்தேர்வுகளுக்கு மாதிரி தேர்வை ஆன்லைன் வழியாகவே எழுதி பார்க்கலாம். குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த வெப்சைட்டில் பதிவு செய்துகொண்டு, இந்த வசதியை பயன்படுத்தலாம். முந்தைய ஆண்டு வினாத்தாளையும் இதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ரிவைஸ் செய்து படிக்கலாம்
குரூப் 4 தேர்வர்கள் தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து கொண்டு படிப்பது வசதியாக இருக்கும். தேர்வர்கள் இனி புதிதாக படிப்பதை விட படித்ததை ரிவைஸ் செய்வதே இனி பயனளிக்கும். பள்ளி பாடப்புத்தகங்கள், பொது அறிவு வினாக்கள், நடப்பு நிகழ்வுகள் உள்பட சிலபசில் கவர் ஆகும் பாடப்பகுதிகளை மீண்டும் ஒருமுறை முழுமையாக ரிவைஸ் செய்து படிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்று இருக்கும்.












Click it and Unblock the Notifications