நகரங்களில் வசிப்பவர்களே.. சம்பளம் கூடுனாலும் கையில் பணம் நிற்கவில்லையா? நிதி ஆலோசகர் ஐடியாவை பாருங்க
பெங்களூர்: பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் கூட குடும்பத்தை நடத்த, நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது என்று நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். மாதம் ₹1.5 லட்சம் சம்பாதிக்கும் ஐடி ஊழியர் ஒருவர் வேலையை இழந்தால் விரைவில் அவரது சேமிப்பு தொகை மொத்தமும் காலியாகிவிடும் என்று வருத்தப்பட்டு வெளியிட்ட பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து ஐஐஎம் பெங்களூருவின் முன்னாள் மாணவரும், முதலீட்டு ஆலோசகருமான அபிஷேக் குமார் கூறுகையில், மெட்ரோ நகர வாழ்க்கை பலருக்கு ஒரு "நிதி பொறி" போன்றது என்கிறார்.

பெங்களூருவில் மாதம் ₹2.4 லட்சம் சம்பாதிக்கும் தம்பதியினர் கூட மாதம் வெறும் ₹15,000 மட்டுமே சேமிக்க முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதிக வாடகை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் சம்பளம் அதிகமாக இருந்தாலும் பலரால் சேமிக்க முடிவதில்லையாம். மெட்ரோ நகரங்களில் வருமானத்தில் 40% வீட்டு வாடகைக்கும், 30% அத்தியாவசியத் தேவைகளுக்கும் சென்றுவிடுவதாகவும், மீதமுள்ள 30% மட்டுமே சேமிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார். அதேநேரத்தில், சிறிய நகரங்களில் இந்த நிலைமை தலைகீழாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மெட்ரோ வாழ்க்கை ஒரு "நிதி பொறி" என்று அவர் குறிப்பிட காரணம், பணம் வருவது போல வரும். ஆனால் இன்னொரு பக்கம் அது செலவாகிவிடும். அது உங்களுக்கே புரியாது என்பதுதான்.
பெங்களூருவில் மாதம் ரூ.2.4 லட்சம் சம்பளம் பெறும் ஒரு ஐடி தம்பதியர், ரூ.15,000 மட்டுமே சேமிக்க முடிந்தது என்று தன்னிடம் தெரிவித்த உண்மை நிகழ்வை அபிஷேக்குமார் சுட்டிக்காட்டுகிறார்.
40-30-30 விதி: மெட்ரோ நகரங்களில், 40% வருமானம் வீட்டு வாடகைக்கு செல்கிறது, 30% தேவைகளுக்கு செல்கிறது, மற்றும் 30% மட்டுமே சேமிப்பு மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்கு மிச்சமாகிறது. டியர்-2 நகரங்களில், இந்த விகிதம் தலைகீழாக இருக்கலாம், இது நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகிறது. உதாரணத்திற்கு ஒருவர் பெங்களூரில் வசிப்பதை விட ஒர்க் பிரம் ஹோம் மாதிரி வாங்கிக்கொண்டு, சேலத்திலோ, மதுரையிலோ, திருச்சியிலோ இருப்பது அவரை நிதியளவில் வலுவானவராக மாற்றும்.
பொதுவாக, ஒருவரின் வருமானத்தில் 40% வீட்டு வாடகைக்கும், 30% மற்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற 40-30-30 நிதியை பலரும் பின்பற்றுவதில்லை என்று அபிஷேக் குமார் தெரிவிக்கிறார்.
மெட்ரோ நகரங்களில் வீட்டு வாடகை என்பது வருமானத்தில் 50% அல்லது அதற்கு மேலாகக்கூட சென்றுவிடுவதால் இது முடிவதில்லையாம். மேலும், மெட்ரோ நகரங்களில் சொத்து முதலீடுகள் குறைந்த வருவாயையும், அதிக இஎம்ஐ சுமையையும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். மெட்ரோ நகரங்களில் பணிபுரியும் பல இளம் வயதினர் தங்கள் பெற்றோரின் மருத்துவ மற்றும் பிற தேவைகளுக்காக கணிசமான தொகையை செலவிடுகின்றனர். இது அவர்களின் சேமிப்பில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு அவசர கால நிதி தேவையும் அதிகமாக உள்ளது. எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது வேலை இழப்பு போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க குறைந்தது 8-12 மாத சம்பளமாவது அவசர நிதியாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாழ்க்கை முறை பணவீக்கம் (Lifestyle Inflation) சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக சம்பளம் கிடைக்கும்போது, மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பலரும் தங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதால் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைகிறது.
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், சிறிய நகரங்களுக்கு குடிபெயர்வது நிதி ரீதியாக நன்மை பயக்கும் என்று அபிஷேக் வலியுறுத்துகிறார்.
சமீபத்தில் ரெட்டிட் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், பல பயனர்கள் மெட்ரோ நகர வாழ்க்கையின் அதிக செலவுகள் மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்க்கை முறை இவ்வளவு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையில், பெரு நகரங்களில் வசிப்பது, உண்மையில் மதிப்புள்ளதா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications