6,244 குரூப்-4 பணியிடங்கள்.. தேர்வர்கள் மனம் குளிர டிஎன்பிஎஸ்சி இதை செய்யுமா? இரண்டு கோரிக்கைகள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி அறிவித்த 6,244 குரூப்-4 பணியிடங்களுக்கு இந்த முறை எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.. பிப்ரவரி 28ம் தேதியுடன் காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்த விண்ணதார்களின் தகவல்களை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்புவோர் முதலில் தேர்வு செய்யும் அரசு பணி என்றால் அது குரூப் 4 பணியிடங்கள் தான். ஒரே ஒரு முறை தேர்வு எழுதினால் போதும். நேர்காணல் இல்லை... தேர்வில் வென்ற பின்னர், சான்றிதழ்கள் சரியாக இருந்தால் வேலை உறுதியாக கிடைக்கும்.. இதில் முறைகேடு செய்வது கடினமானது.. ஏழைகள் மற்றும் சாமானியர்கள் எளிதாக படித்து விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர்களாக அரசு வேலையில் சேர்ந்துவிட முடியும். 10ம் வகுப்பு படித்தவர்களே போட்டியிடலாம் என்பதால், குரூப் 4 பணியிடங்கள் பலருக்கும் விருப்பமான ஒன்று.. 40 வயது வரை ஆனவர்களும் குரூப் 4 தேர்வு எழுதி அரசு வேலைக்கு போக முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. ஆண்டு தோறும் மற்ற பணிகளைவிட குரூப் 4 பணியிடங்கள் அதிகமாகவே வெளியிடப்படும்.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வில் 6,244 பணியிடங்கள் உள்ளது. 2023ம் ஆண்டு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, குரூப்-4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளார்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஜூனில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. டி.என்.பி.எஸ்.சி. நடத்தக்கூடிய தேர்வுகளில் குரூப் 4 தேர்வுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப்பணியிடங்களுக்கும் தேர்வர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளார்கள்..
விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்தது.. ஆனால் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்த நிலையில் குரூப்-4 பணியிடங்களுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளார்கள்? என்பது குறித்த விவரத்தை டி.என்.பி.எஸ்.சி. எப்போது வெளியிடும்? என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் காத்திருக்கிறார்கள்
கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியான குரூப்-4 பணியிடங்களுக்கு, 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது எந்த அளவிற்கு விண்ணப்பதார்கள் விண்ணப்பித்தார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.. இந்நிலையில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மொத்த விண்ணதார்களின் தகவல்களை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications