வேலைக்காக குவியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! மோடியின் ரெக்கார்ட் பிரேக்.. காங்கிரஸ் நறுக்
மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமை தூக்கும் பணிக்கான நேர்காணலில் 25,000 இளைஞர்கள் குவிந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது மோடியின் ரெக்கார்ட் பிரேக் சாதனை என காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது.
இந்தியா சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடு. பொதுவாக வளரும் நாடுகளில் வேலையின்மை இருக்கக்கூடாது என்றும், அப்படி இருந்தால் அது அந்நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் சமீப காலமாக வேலையின்மை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.

தற்போது மும்பையில் நடந்துள்ள சம்பவமும் வேலையின்மை பிரச்னையின் கோரமுகத்தை காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்த காலிப்பணியிடங்கள் 2,216. பணிக்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகள். சம்பளம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேர விருப்பம் இருப்பவர்கள் ஜூலை 16ம் தேதி காலை மும்பை அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து வெறும் 2,216 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 25,000க்கும் அதிகமான இளைஞர்கள் மும்பை அலுவலகத்திற்கு முன் குவிந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பட்டதாரி இளைஞர்கள். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மும்பையில் ஏர் இந்தியா அலுவலகம் முன்பு குவிந்த இளைஞர்களின் வீடியோவை பகிர்ந்து, வேலையின்மை பிரச்னையில் மோடியின் ரெக்காட் பிரேக் சாதனை இது என காங்கிரஸ் x தளத்தில் விமர்சித்துள்ளது.
அதேபோல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "மோடியால் உருவாக்கப்பட்ட கடும் வேலையின்மை நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு காலி பணியிடத்திற்கு கூட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டியிடும் சூழல் உருவாகியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுமார் 8 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மோடி கூறுகிறார். ஆனால், பலவீனமான தனியார் முதலீடுகள் இவர் சொல்லும் எண்களை பிரதிபலிக்கவில்லை.
வேலையின்மையை புரிந்துக்கொள்ளலாமல், அதை தீர்ப்பதற்கு முயற்சிக்காமல் வெறுமென புள்ளி விவரங்களில் மட்டும் மோடி அரசு மாற்றங்களை செய்திருக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.
ஏற்கெனவே குஜராத்திலும் இதே போல அதிக அளவில் இளைஞர்கள் வேலைக்கான நேர்காணலுக்காக குவிந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது, குஜராத்தின் பாரூச்சில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், வேலைக்கு வர விருப்பம் உள்ளவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்திருந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சுமார் 1800 இளைஞர்கள் ஹோட்டல் முன்பு குவிந்திருக்கின்றனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், ஹோட்டலின் முன்பு இருந்த தடுப்பு கம்பி உடைந்து விழுந்திருக்கிறது. இதனால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.












Click it and Unblock the Notifications