IBPS Clerk Job: வங்கி பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பாராத ஹேப்பி நியூஸ்! ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் மொத்தம் 10,277 கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வும் நடந்து முடிந்த நிலையில் தற்போது தேர்வர்களுக்கு குட் நியூசாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையானது 13 ஆயிரத்துக்கும் மேல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தவிர்த்து, இதர வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பப்படுகிறது.

வங்கி வேலைவாய்ப்புகள்
அதாவது, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் ஐபிபிஎஸ் வாயிலாகவே நிரப்பப்படுகின்றன. வங்கிப்பணிகளை பொறுத்தவரை கைநிறைய சம்பளம், கவுரவமான வேலை, பிற சலுகைகள் என பலவும் கிடைப்பதால் வங்கிப்பணிகளுக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனால் வங்கிப்பணிகளில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், 10,277 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
10,277 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாட்டில் மட்டும் 897 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 367, கர்நாடகா - 1,170, கேரளா - 330, புதுவை - 19, தெலுங்கானா - 261 என மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து முதல் நிலை தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. ஓரிரு நாட்களில் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் மெயின்ஸ் எனப்படும் முதன்மை தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். முதல் நிலை தேர்வர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்து உள்ள நிலையில், தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஐபிபிஎஸ் கொடுத்துள்ளது. அதாவது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை 10,277ல் இருந்து 13,533 ஆக உயர்த்தியுள்ளது. கூடுதலாக 3,256 காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்கள் முதலில் 897 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,161 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கேரளாவில் 342 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1,114 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 2,346 ஆகவும் காலிப்பணியிடங்கள் உயர்ந்துள்ளன. முதல் நிலை தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு இதன் மூலம் கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளது. கூடுதல் தேர்வர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வு
முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 4, 5 மற்றும் 11 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்றது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட முக்கிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் எழுதினர். 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் இந்த தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டன. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் IBPS இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications