தமிழக அரசு இளைஞர்களுக்கு மானியத்துடன் சூப்பர் கடன் உதவி.. ரூ.3.50 லட்சத்தை தள்ளுபடி செய்கிறது
சேலம்: ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஆதிதிராடவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திதல் தொழில் தொடங்க கடன் உதவி அளித்து வருகிறது. அந்த கடன்களுக்கு 50 சதவீதம் வரை மானியமும் அளிக்கிறது. உதாரணமாக 5 லட்சம் கடன் வாங்கினால் அதில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டத்தேவையில்லை. அதனை தமிழக அரசே வழங்குகிறது.

தற்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் பல்வேறு கடன் உதவிகளை பட்டியல் இனத்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே தாட்கோவில் சென்று எந்த மாதிரியான தொழில் தொடங்க கடன் தருகிறார்கள். அதற்கான டேட்டாக்களை தயார் செய்வது, புள்ளி விவரங்களை தயார் செய்வது, மேலும் அந்த கடன் பெற என்ன தகுதி வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை கேளுங்கள். அதன்படி கடன் வாங்கி தொழில் தொடங்கி முன்னேறலாம். கடனுக்கான வட்டி விகிதமும் மிக குறைவாகவே உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை தவற விட வேண்டாம்.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற பெயரில் ரூ.40 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.

இந்த புதிய திட்டத்தின் படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்ட தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3½ லட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் வழங்கப்படும்.
மேலும், 6 சதவீதம் வட்டி மானியத்தை அரையாண்டிற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து பெற்று, ஒத்திவைப்பு காலம் உள்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்." இவ்வாறு சேலம் கலெக்டர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications