குரூப்-2, குரூப் 2ஏ தேர்வு எழுதியவர்களுக்கு குட்நியூஸ்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பால் நடந்த சூப்பர் மாற்றம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்கள் கடந்த ஜூலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 625 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் குரூப் 2 தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போட்டியிட்ட 329 பேரில் ஒருவர் அரசு அதிகாரி என்கிற நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4, இந்து அறநிலையத்துறை, பொறியியல் துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு தேர்வு வைத்து ஆட்களை தேர்வு செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிடப்படும்.

அதன்படியே தேர்வுகளும் வைக்கப்படும். எனினும் தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது அல்லது தேர்வுகள் முடிந்தபின்னர் காலி பணியிடங்கள் திடீரென உயர்த்தப்படுவதை டிஎன்பிஎஸ்சி வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் தான் குரூப் 2 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
குரூப் 2 தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) வெளியிட்டது.
செப்டம்பரில் நடந்த தேர்வு
கடந்த ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பின் போது, 645 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் எழுதினார்கள். இந்த நிலையில் தற்போது கூடுதல் பணியிடங்களை சேர்த்துள்ளது டிஎன்பிஎஸ்சி, அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குரூப்-2, 2ஏ பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 625 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது . இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. குரூப்-2 காலிப்பணியிடங்கள் நிதியாண்டுக்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் வீதம் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
குரூப்-2 பணியிடங்கள் 1,270 ஆக உயர்வு
2025-ம் ஆண்டு குரூப்-2 பணியிடங்கள் 1,270 ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு துறை, நிறுவனங்களிடம் இருந்து மேலும் பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்னதாக அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்" இவ்வாறு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
329 பேரில் ஒருவர் அரசு அதிகாரி
இதனிடையே கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையின்படி, அதற்கான தேர்வு எழுத போட்டியிட்டவர்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி போட்டனர். தற்போது கூடுதல் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் குரூப்-2, 2ஏ பணிகளுக்கு ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டியிடுகிறார்கள்.போட்டியிட்ட 329 பேரில் ஒருவர் அரசு அதிகாரி என்கிற நிலை உருவாகி உள்ளது. பணியிடங்கள் அதிகரிப்பால் குரூப் 2 தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications