சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவுகளை வாபஸ் பெற்றது ஏன்? அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மதுரை: தமிழகம் முழுவதும் 1,299 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த தேர்வுகள் டிசம்பர் 21ம் தேதி நடந்தது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், வாபஸ் பெறப்பட்டது. எஸ்ஐ தேர்வு முடிவுகளை வாபஸ் பெற்றது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகியது.

இந்த பதவியில் சேருவதற்கு எங்களுக்கு முழு தகுதி இருக்கிறது. இந்த பதவிக்கான தேர்வுக்கு நாங்கள் விண்ணப்பித்தோம்.சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த டிசம்பர் 21-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி வினாத்தாளில் தமிழ் வினாக்கள் இடம் பெறவே இல்லை. அதேநேரம் அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தது
இதனால் அந்த தேர்வை எழுதியவர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் குறையும் நிலை உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தயாராகி வந்தவர்கள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டது. எனவே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜராகி, தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தெரிவித்தபடி கேள்விகள் இடம்பெறாததால் மனுதாரர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் கட்-ஆப் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோதம் என்றார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தொழில்நுட்ப கோளாறுகளுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தவறு ஏற்பட்டு இருந்ததால் தேர்வு முடிவுகளை வாபஸ் பெற்று இருக்கிறோம். விசாரணை முடிவில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவை வாபஸ் பெற்றது ஏன்? என்று அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications