இதையெல்லாம் நம்பாதீங்க.. குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்த முக்கிய மேசேஜ்! நோட் பண்ணுங்க
சென்னை: குரூப் 4 பணியிடங்கள் 10 ஆயிரம் வரையாவது அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நிரப்பப்படுகிறது. ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1, குரூப் 4 பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதில் குரூப் 4 தேர்வை எழுத தேர்வர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உண்டு. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள். தமிழகத்தில் வேறு எந்த அரசு போட்டி தேர்வுகளுக்கும் இவ்வளவு பேர் விண்ணப்பிக்க மாட்டார்கள். 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் கூட பட்டப்படிப்பு, பிஎச்டி முடித்தவர்கள் வரைக்கும் விண்ணப்பிப்பார்கள். விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த குரூப் 4 மூலமாக நிரப்பப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, 6,244 பணியிடங்களை நிரப்ப வெளியானது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வானது கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 7,247 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பணியிடங்கள் 10 ஆயிரம் வரையாவது அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி 4 -2024- ல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2001-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
2024 ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுக்கான 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே 2024-ம் ஆண்டு குரூப் 4 தேர்வின் மூலம் சரசரியாக ஒரு நிதி ஆண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள் ஆக மொத்தம் 2172 காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட உள்ளன. எனவே, சமூக வலைத்தளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications