கலைஞர் கருணாநிதி: இந்திய அரசியல் வரலாற்றில் ஒப்பிட முடியாத ஆளுமை: பா.கிருஷ்ணன்
இந்திய அரசியலில் கல்வீச்சுகளுக்கும் பூச்செண்டுகளுக்கும் அதிக அளவில் ஆளானவர்கள் மிகவும் சில பேர் மட்டுமே! அவர்களில் குறிப்பிடத் தக்கவர் கலைஞர் மு. கருணாநிதி. அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. மறைந்த பின்னரும் அதிக அளவில் பேசப்படுகிற தலைவர்களில் இவருக்கென்று தனி இடம் கிடைத்துவிட்டது. தனது அரசியல் ஆதரவாளர்களாலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். தனது அரசியல் எதிரிகளாலும் பாராட்டப்பட்டிருக்கிறார். இத்தகைய விநோதமான நிலையைப் பெற்ற ஒரே அரசியல் தலைவர் அவர்தான்.
அரசியலை முற்றிலுமாக மறந்துவிட்டால், கலைஞர் மு. கருணாநிதி வியப்புக்குரிய ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் சட்டப் பேரவை வளாகம் முழுமை பெற்றதாகவே கருதலாம்.

மூதறிஞர் இராஜாஜி, கர்மவீரர் காமராஜர், பெரியவர் பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோருடன் சட்டப் பேரவையில் அரசியல் நடத்தியவர் கலைஞர் கருணாநிதி. தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், வி.பி. சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங் எனப் பல பிரதமர்களுடன் அரசியல் உறவு கண்டவர். தேவே கவுடாவைப் பிரதமர் ஆக்கியவர்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஆறு முதலமைச்சர்கள், ஆறு பிரதமர்களுடன் அரசியல் நடத்தியவர் என்று யாராவது இருந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. நீண்ட காலம் முதலமைச்சராக இருந்த பஞ்சாப் சிங்கம் பிரகாஷ் சிங் பாதல், மேற்கு வங்கத்தின் புலி ஜோதி பாசு ஆகியோர் கூட இப்படித் நெடிய அரசியல் வரலாறு கொண்டவர்களா என்று கூற முடியாது.
கலைஞர் கருணாநிதியிடம் இன்றைய அரசியல்வாதிகள் கற்க வேண்டியவை ஏராளம். சட்டமன்றப் பேரவையில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த காலங்களில் ஒரு நாளும் நேரம் தவறாமல் அவைக்கு வந்து, முழுமையாக இருந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஓய்வு அறைக்குச் சென்றாலும், அங்கே ஒலிபெருக்கியில் அவையில் பேசுவோரின் பேச்சுகளைக் கேட்பதுடன் குறிப்பும் எடுத்து வைத்துக் கொள்வார். அவைக்கு வரும்போது தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்துவார்.
திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 9 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். காலையில் 8.50 மணிக்கு பளிச்சென்று அவையில் இருப்பவர் கலைஞர் கருணாநிதி. அது மட்டுமல்ல, அன்றைய தினம் வெளியான நாளேடுகள் ஒன்றையும் விடாமல் படித்து, குறிப்புகளை எடுத்து வைத்திருப்பார். எதிர்க்கட்சிகள் நாளேடுகளில் வெளியான செய்திகளைப் படித்து விட்டு, கேள்வி கேட்டாலோ சந்தேகம் எழுப்பினாலோ உடனுக்குடன் அதற்கான பதிலைத் தந்தவர் கருணாநிதி. காரணம், செய்தித் தாள்களில் வரும் செய்திகளில் எவையெல்லாம் சட்டப் பேரவையில் எழுப்பப்படக் கூடும் என்பதையும் முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தொலைபேசியில் காலையிலே அழைத்து உரிய விளக்கத்தையும் பெற்று வைத்துக் கொள்ளும் ஆற்றல் நிர்வாகத் திறமையை அவர் மட்டுமே கடைப்பிடித்து வந்தார்.
சட்டப் பேரவையில் கலைஞர் கருணாநிதி முதல் முறையாக நுழைந்தது 1957ம் ஆண்டில்தான். அவருக்கு அப்போது 33 வயது. ஆனால், அதற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற முக்கிய விவாதங்களையெல்லாம் சட்டமன்ற நூலகத்தில் பழைய ஏடுகளைப் படித்து வைத்திருந்தார் என்பது பலரும் அறியாதது.
ஒரு முறை முதலமைச்சராக இருந்தபோது, மத உணர்வு தொடர்பான சர்ச்சைக்குரிய நிகழ்வு நடப்பதாகப் பேசப்பட்டது. அது குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் கலைஞர் எழுந்து, "இதைப் போன்ற சர்ச்சைக்குரிய போராட்டத்தை பெரியார் அறிவித்தார். அப்போது இராஜாஜி முதலமைச்சராக இருந்தார். பெரியார் அறிவித்தது, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் முதலமைச்சருக்குக் கோப்பு அனுப்பினர். அதைப் பார்த்த முதலமைச்சர் பென்சிலில் Ignore it என்று ஆங்கிலத்தில் எழுதினார். அவர் குறிப்பிட்டது போலவே பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்தது. ஆனால், இப்போது உறுப்பினர் குறிப்பிட்ட பிரச்சினையை அப்படி Ignore செய்ய மாட்டேன். உரிய நடவடிக்கை எடுத்துள்ளேன்" என்று பதிலளித்தார்.
சட்டப் பேரவையில் யார் பேசினாலும் அதைக் கூர்ந்து கவனிப்பதுடன், கையில் துண்டுத் தாளில் குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்வார். தகுந்த நேரத்தில் தகுந்த வகையில் அதற்கான பதிலையும் தயார் செய்து வைத்து அந்த அவையிலேயே பதிலும் அளிப்பார். சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தாலும், 1996ம் ஆண்டுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அவர் மாற்றுக் கட்சியினருடன் மதிப்போடுதான் பழகினார்.
கலைஞர் கருணாநிதியின் மனத் திண்மையை யாரும் பெற்றதில்லை. போராளிகள் நடமாட்டத்தைச் சுட்டிக் காட்டி அவரது ஆட்சி தேவையின்றி 1991ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி இரவு கலைக்கப்பட்டது. மறுநாள் காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சொன்னபடி 11 மணிக்கு நிருபர்கள் கூட்டத்திற்கு வந்தார். எல்லோரும் கருணாநிதி மன வேதனையோடு பேசுவார் என்றும், மத்திய அரசையும் தன்னை விமர்சித்த பத்திரிகைகளையும் சாடுவார் என்றும் எதிர்பார்த்தனர்.
மாறாக, செய்தியாளர்களின் முதல் கேள்விக்கு, "எங்கள் ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள். இது போல் முன்பு கூட ஆட்சிக் கலைப்பைப் பார்த்து கலங்காவர்கள் நாங்கள். எது எப்படியோ எங்களது ஆட்சியைக் கலைத்ததன் மூலம் மத்தியில் உள்ளவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் அது போதும்!" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அவரது ராசியோ என்னவோ, 1976ம் ஆண்டு அவரது ஆட்சியைக் கலைத்த மத்திய ஆட்சியாளர்கள் 1977 பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்தனர். அதைப் போல் 1991ம் ஆண்டு அவரது ஆட்சியைக் கலைத்த மத்திய ஆட்சியாளர்கள் சில மாதங்களிலேயே ஆட்சியை இழந்தனர்.
கலைஞர் கருணாநிதி போராட்டங்கள், சோதனைகள் என்று எப்போதும் போர்க்களத்திலேயே வாழ்க்கை நடத்தியவர். அதே சமயம் அவரது மனத் திடம் அபரிமிதமானது. போராட்டங்களால் அவர் சோர்வடைந்ததில்லை. மாறாக, போராடாத நிலை இருந்தால் சோர்வடைவார்.
அவரது திட மனத்துக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. ஓர் ஒப்பீடாகக் கூறவேண்டியது அது.
1972ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மீது வாட்டர் கேட் ஊழல் புகார் எழுந்தது. எதிர்க்கட்சியினரை ஒட்டுக் கேட்டதாக எழுந்த அந்தப் பிரச்சினையால் அவர் விமர்சனத்துக்கு ஆளானார். அது முதல் ஆட்சியிலிருந்து நி்க்சன் பதவி விலகும் வரையில் அவர் கோப்புகளில் போட்ட கையெழுத்துகள் மிகவும் நடுக்கமாகவும் கிறுக்கல் போலவும் இருந்தாக ஏடுகளில் செய்தி வெளியானது.
அதே சமயம் 1976ம் ஆண்டிலும், 1991ம் ஆண்டிலும் பதவியை இழந்தார். அதிலும் நெருக்கடி நிலைக் காலத்தில் ஆட்சியை இழந்தது மட்டுமின்றி கைது செய்யப்படக் கூடும் என்றும் பேச்சு அடிபட்டது. அவரது மகன் மு.க. ஸ்டாலின், மருமகன் முரசொலி மாறன் உள்பட பலர் கைதாயினர்.
ஆனால், அதற்கெல்லாம் கலங்காத கலைஞர் மு. கருணாநிதி எப்போதும் போல் முரசொலிக்குத் தன் கைப்படவே கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அக்கடிதங்கள் முரசொலி நாளேட்டில் தினமும் பிரசுரமாயின. இதில் கவனிக்க வேண்டியது, சோதனைக் காலத்திலும் அவரது கையெழுத்து சிறிது கூட பிசகாமல் தெளிவாக இருந்தது. நிக்சனைப் போல் கையெழுத்து மாறவில்லை. அது அவரது மனத் திண்மையைத் தெளிவாக் காட்டுகிறது.
கலைஞர் மீது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர் ஹிந்து மத விரோதி என்ற விமர்சனம்தான். ஆனால், கலைஞர் ஆட்சியில் இருந்தபோது, ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் (திருக்குடந்தை) என்ற வைணவத் துறவி உடல் நலமின்றி மருத்துவனையில் இருந்தார். அவருக்கு உரிய அறுவைச் சிகிச்சையை முறையாக நடத்தும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தினார். அதைப் போல் அவருக்குப் பின் வந்த இன்னொரு வைணவ ஆண்டவன் சுவாமிகள் (ஸ்ரீமுஷ்ணம்) ஒரு நேர்காணலில் "பகவானைப் போற்றி ஆழ்வார்கள் தமிழில் பாசுரம் பாடினர். அப்படியானால் தமிழில் வழிபடுவது சிறப்புதானே.." என்று குறிப்பிட்டார். அதை வரவேற்று கடிதம் எழுதினார் கலைஞர் கருணாநிதி.
காஞ்சி மடத்தின் மகா பெரியவருக்கு விழா நடத்தப்பட்டபோது, அதைச் சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு உத்தரவிட்ட கலைஞர் தனது அறநிலையத் துறை அமைச்சராக அப்போது இருந்த கே.பி. கந்தசாமியை விழாவில் பங்கேற்கச் செய்து காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்கவும் அறிவுறுத்தினார்.
2006ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சென்னையில் சில நிகழ்ச்சில் பங்கேற்றார். அப்போதுதான் குஜராத் கலவரம் நடந்து முடிந்தது. மோடியை மறிக்க சிலர் முயல்வர் என்று தகவல் கிடைத்தது. எந்த அசம்பாவிதமும் இல்லாமல் உரிய வகையில் பாதுகாப்பு அளித்து மோடி குஜராத் திரும்புவதற்கு ஏற்பாடு செய்தார் அப்போதைய முதலமைச்சர். அதே சமயம் குஜராத் கலவரத்தை அவர் சாடினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
குறிப்பிட்ட சாதியினரைத் திருப்தி செய்வதற்காக மாவட்டங்களுக்கும் பேருந்துக் கழகங்களுக்கும் பெயர் சூட்டும் போக்கு தேவையில்லாமல் வளர்ந்தது. இது, சாதிகளை ஊக்குவிப்பது போல் அமைந்தது மட்டுமின்றி, வெவ்வேறு தரப்பினரிடையிலே முரண்பாட்டை ஊக்குவித்துவிடுமோ என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டது.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ஒரே உத்தரவில் பேருந்து கழகங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ஊர்ப்பெயர்களே போதும் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அரசியலைக் கடந்து கலைஞர் மிகவும் நேசித்தது இலக்கியமும் தமிழும்தான். ஒரு முறை செய்தியாளர்களிடம் அலுவல்முறை சந்திப்பு நடத்தியபோது, எழுத்தாளர் லா.ச. ராமாமிர்தம் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. அதை அங்கே இருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ம.ராசேந்திரன் முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவித்தார். உடனே, கருணாநிதி அதை செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்ந்து, தனது இரங்கலைத் தெரிவித்ததுடன் நிற்கவில்லை. லா.ச.ரா.வின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்படும் எனவும் அங்கேயே அறிவித்தார்.
அதைப் போல் இன்னொரு செய்தியாளர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருவரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாப்பிள்ளை உள்பட பலர் உயிரிழந்தது குறித்த தகவல் கிடைத்தது. உடனே, செய்தியாளர் கூட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஒரு சில சமயம் அரசியல் காரணத்திற்காக அவரது சொல்லும் செயலும் பகைமையைத் தேடித்தந்தன என்பது உண்மை என்றாலும், ஈழத் தமிழர்கள் மீதான அவரது அக்கறை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என சில கோட்பாடுகளில் அவரை முற்றிலுமாக சந்தேகிக்க இயலாது.
கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையிலிருந்து இக்கால அரசியல் தலைவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications