எல்லா கேமராவையும் திருப்பு.. சென்னையே அலர்ட்டாக இருக்கா.. அலர்ட் ஆறுமுகமாக கம்பி நீட்டிய மழை
சென்னை: காய்கறி, பால், பிரெட், முட்டை, நொறுக்கு தீனிகள், தண்ணீர் கேன்கள், அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் என எல்லாவற்றையும் ஓடி பிடித்து போய் வாங்கி வைத்த சென்னை மக்கள், இந்த முறை மழையை எதிர்கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். லேப்டாப், செல்போனில் புல் சார்ஜ் போட்டு, கார்களை பாலத்தில் பார்க்கிங் செய்து படு ஸ்மார்ட்டாக இருந்தனர். ஆனால் மழை ஆந்திர பக்கம் வண்டியை திருப்பி, கம்பி நீட்டிவிட்டது. ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்து வெளுத்துவிட்டு போய்விடுகிறது.
சென்னையில் அக்டோபர் 15, 16ம் தேதிகளில் அதீத கன மழை வரப்போகிறது என்று கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அப்படி அறிவித்த உடனேயே அலர்ட்டான சென்னை மக்கள், அதை பற்றிய ஒவ்வொரு தகவலையும் கவனமாக பார்த்து வந்தார்கள்.

மழை குறித்து எச்சரிக்கைகளை முழுமையாக கவனித்த மக்கள், மழை வருவதற்குள், வீட்டிற்கு தேவையான காய்கறி, பால், பிரெட், முட்டை, நொறுக்கு தீனிகள், தண்ணீர் கேன்கள், அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் என எல்லாவற்றையும் ஓடி பிடித்து போய் வாங்கி குவித்தார்கள். தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு வாரம் முதல் 10 நாளைக்கு சிக்கல் ஏற்படாத அளவிற்கு எல்லா பொருட்களையும் வாங்கி குவித்தார்கள். இதனால் பலருக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் தங்கள் செல்போன்களில் சார்ஜ் போட்டு வைப்பது, பேட்டரி லைட்டுகளை தயாராக வைப்பது, கார்கள், பைக்குகள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க அவரை பாலத்தில் போய் நிறுத்துவது என படு ஸ்மார்ட்டாக இருந்தனர். வெடிகுண்டு முருகேசன் படத்தில் ஓட்டலில் சாப்பிடும் வடிவேலுவை பிடிக்க எப்படி எல்லாரும் கவனமாக அவர் மீதே கவனம் செலுத்துவார்களோ அந்த அளவிற்கு மழை விவகாரத்தில் எச்சரிக்கையாக இருந்தனர்.
தமிழக அரசுமே மழையை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. படகுகள், உணவுக்கூடங்கள், தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை முன்பே வெளியேற்ற நடவடிக்கை, மழை நீர் செல்ல வழி இல்லாத கால்வாய்களை உடைத்து வழிகளை ஏற்படுத்துவது என எல்லா நடவடிக்கையையும் அரசு செய்து கொண்டே இருந்தது. முக்கிய சாலைகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற உடனுக்குடன் நடவடிக்கை என மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தது.
ஆனால் அலர்ட் ஆறுமுகமாக மாறிய மழை, எல்லாரும் அலர்ட்டாக இருக்கிறார்கள் என்பதை அறிந்ததோ என்னவோ, சென்னைக்கு வராமல் கம்பி நீட்டிவிட்டது. நேற்று ஒரு நாள் மட்டுமே சென்னையில் கனமழை பெய்தது. இன்று லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும் இருந்தது. அதுவும் பெரிய அளவில் இல்லை.. வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்படுகிறது. சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் தப்பித்துள்ளார்கள்.
வெடிகுண்டு முருகேசன் படத்தில் வருவது போல், நம்ம எல்லாருடைய போக்கசும் இருந்ததால், புரோட்டோவுடன் (சிறிய அளவில் பிரச்சனையுடன்) போச்சு.. என்பது பேச்சாக உள்ளது. ஆனால் கம்பி நீட்டிய மழை.. மீண்டும் அடுத்த மாதமும், டிசம்பர் மாதமும் வரும் என்பது உறுதி. பொதுவாக மழை சாதாரணமாக மக்கள் இருக்கும் போது தான் எதிர்பார்க்கவே முடியாத அளவிற்கு பெய்து விட்டு செல்கிறது. வானிலை மையம் கூட கடைசி நேரத்தில் தான் அதனைசொல்லும் என்கிற நிலை தான் இப்போது வரை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications