குழந்தைகளிடம் எதையுமே திணிக்காதீங்க.. திறமைகளை கண்டுபிடிங்க.. தட்டிக் கொடுங்க!
சென்னை: குழந்தைகளிடம் எதையுமே திணிக்காதீங்க.. அதை அவர்கள் விரும்புவதில்லை. அக்காலத்து குழந்தைகள் போல இல்லை இப்போது உள்ள குட்டீஸ்கள்.. நிறைய யோசிக்கிறார்கள்.. புத்திசாலிகளாக உள்ளனர்.. அவர்களுக்குப் பிடித்ததையே செய்ய விரும்புகின்றனர்.
முன்பெல்லாம் நீ டாக்டராகணும், என்ஜீனியராகணும் என்று சொல்லிச் சொல்லியே பிள்ளைகளை வளர்த்தனர். ஆனால் இன்று அப்படியெல்லாம் வளர்க்க முடியாது. காரணம், குழந்தைகள் தங்களிடம் எதையும் திணிப்பதை விரும்புவதில்லை.
எனக்கு என்ன திறமை இருக்கோ அதன்படிதான் வருவேன் என்று பலரும் தைரியமாக பேசத் தொடங்கி விட்ட காலம் இது. எனவே பெற்றோரும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு பிள்ளைகளின் திறமையைக் கண்டறிந்து அந்தப் பாதையில் செல்ல ஊக்குவிப்பதுதான் சரியான Parenting ஆக இருக்கும்.

மழலை பேசும் குழந்தைகள்
மழலைப் பேசும் குழந்தைகளின் மனதில் உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள். சிலப் பெற்றோர்கள் நான் தான் டாக்டராகணும்னு நினைச்சேன் என்னால முடியல என் பையனையாவது டாக்டராக்கிப் பார்க்கிறேன் என்று உறுதியெடுத்து அதில் ஆர்வமே இல்லாத குழந்தையை அதைப் படிக்க வைக்க சிறு வயது முதலே மெனக்கெடுகின்றனர். அவர்கள் பூமியில் பூத்த புது மலர்கள்.

வாசமான மலர்கள்
ஒவ்வொரு பூவுக்கும் ஒரு வாசமுண்டு என்பது போல ஒவ்வொரு குழந்தைக்கும் சில தனிப்பட்ட திறமைகள் இருக்கும். அந்தத் திறமைகளை ஊக்குவிக்காமல் பெற்றோர்கள் தங்கள் ஆசைகளைக் குழந்தைகளின் மீது திணிக்கக் கூடாது. முதலில் குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள். நீ அதைச் செய்யாதே இதைச் செய்யாதே நீ இப்படித் தான் இருக்க வேண்டும் என்றுக் கூறி குழந்தைகளிடமிருந்து குழந்தைத் தன்மையை அழித்து விடாதீர்கள்.

சுவரில் வரையட்டுமே
உங்கள் குழந்தை வீட்டில் ஓவியம் வரைய முயற்சி செய்கிறதா. அந்தக் குழந்தையை ஊக்குவித்து ஓவியப் பயிற்சிக்கு அனுப்புங்கள். ஓவியப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யுங்கள். அக்குழந்தையின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதே சிறந்த parenting. எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அது தவறில்லை ஆனால் உங்களின் ஆசைகளைக் குழந்தைகளின் ஆசைகளாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.நம் குழந்தைகள் நம்மால் இந்த உலகிற்கு வந்தவர்கள் அவ்வளவு தானே தவிர அவர்கள் உங்களுக்காகப் பிறந்தவர்கள் அல்லர்.

அப்பாவின் கனவு
விசுவாசம் படத்தில் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் அந்தக் குழந்தை தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுக்கிறது. என் குழந்தை நான் நினைத்தது போல் தான் வளர வேண்டும் என்று உங்கள் ஆசைகளை அவர்கள் மீது திணித்தால் குழந்தைகள் சிறு வயதிலேயே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் விளையாட்டு வீரர்களாக்கி அழகு பாருங்கள்.

விஜய் கில்லி
கில்லிப் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கபடி விளையாட்டில் வெற்றியடைய வேண்டும் என்று முயற்சி செய்வார். ஆனால் அவல் தந்தையோ மகன் பட்டதாரி ஆக வேண்டும் என்று கூறுவார். இன்று அவரைப் போல பல அப்பாக்கள் இருக்கின்றனர். நீ நிச்சயம் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சிப் பெற்றே ஆக வேண்டும் என்றுக் கூறி இரவு பகல் பாராது அக்குழந்தையைப் படிக்க வைக்கிறேன் என்று பெற்றோர்களே படிப்பின் மீது வெறுப்பை வர வைக்கின்றனர்.

எல்லோரும் விரும்பும் ஒயிட் காலர்
எல்லோரும் இந்த உலகத்தில் ஒயிட் காலர் ஜாப்பையே விரும்புகின்றனர். சிலருக்கு நன்கு அறிவியல் வரும் அவர்களின் கண்டுபிடிப்புகளைக் கொண்டு அவர்களை விஞ்ஞானியாக்கி அழகு பாருங்களேன். சிலருக்குத் தொழில் முனைவோராக விருப்பம் இருக்கும். அதற்கான ஆலோசனைகளைப் பெற்றோர்கள் வழங்கலாமே. உங்கள் குழந்தைகளின் நோட்டின் கடைசிப்பக்கத்தில் எடுத்துப் பார்த்தால் அதில் சில கிறுக்கல்களும் எழுத்துக்களும் இருக்கும். அது வெறும் கிறுக்கல்கள் அல்ல அவர்கள் என்னவாக விரும்புகின்றனர் என்பதன் வெளிப்பாடு தான்.
உங்கள் குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள். அவர்களின் கனவுகளை நனவாக்க பெற்றோர்கள் உதவி செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications