• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

நாட்டுப்புற உலகம்

கி.ராஜநாராயணன்

ஒரு காலத்தில் அரண்மனையை ஒட்டி பல தொழில்கள் வாழ்ந்தன. அவற்றில் அடப்பம் என்பதும் ஒன்று. இந்தத் தொழில் செய்தவனை அடப்பக்காரன் என்பார்கள். ராஜாவுக்கு இவன்தான் அந்தரங்கக் காரியதரிசி. இவனுக்குத் தெரியாமல் யாரும் ராஜாவை, அரண்மனைக்குள் போய் தனியாகப் பார்க்க முடியாது. தர்பார் மண்டபத்தில் ராஜா கொலு வீற்றிருக்கும் போதுகூட அங்கே யார் கண்ணுக்கும் படாமல்-ராஜா கண்ணுக்கு மட்டும் படும்படியாக- இருப்பான்.

காலையில் ராஜா கண் விழிப்பதிலிருந்து ராத்திரி தூங்கப் போகும் வரை இவன் அங்கே இருந்தாகனும், இவன் இல்லை என்றால் ராஜாவுக்கு ஒரு காரியம் ஓடாது.

ராஜா போடுகிற வெற்றிலையில் சுண்ணாம்பு எவ்வளவு இருக்கணும் என்பது இவனுக்குத்தான் தெரியும். யாருடனாவது ராஜா பேசிக் கொண்டிருக்கும்போது இவன் இருக்கும் திசையைைப் பார்த்து எந்நேரம் அவரது கை நீழும் என்பது அவனுக்குத் தெரியும். நீட்டும் அந்தக் கையில் அப்பதான் சீவிய பச்சைச் சீவலை எவ்வளவு தரணும் என்பது தெரிந்து கையில் வைப்பான். அதை ராஜா உடனே வாய்க்குள் போட்டாலும் போட்டார்; பேசிக் கொண்டே இருந்தாலும் இருந்தார். சில சமயம், வாயில் போட்டுக் கொண்டும், பேசிக் கொண்டே இருப்பார். கொஞ்ச நேரம் கழித்து நீழும் கையில், மடித்த வெற்றிலையுடன் சிறிதே சீவலையும் வைத்துத்தான் தரணும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும்.

வெற்றிலை போட்டு முடித்த பிறகும் நீழும் கையில் கடுகளவு சுண்ணாம்பை உருட்டி பக்குவமாக விரல்களில் வைக்க வேணும். அந்தக் கடுகளவு சுண்ணாம்பு வாயினுள் போயித்தான் வெற்றிலையை ஜமாளிக்க வைக்கும். கொஞ்ச நேரத்தில் சுருதி குறைவது போல ஒரு தோற்றம். அடப்பக்காரன் இருக்கும் பக்கத்தில் கை நீழும். பலவகை வாசனைச் சரக்குகளை வைத்துப் பாடம் பண்ணிய போயிலைத் துண்டு ஒன்றை நீட்டிய கையில் வைப்பான். அதுதான் கோபுரக் கலசம்-வெற்றிலையின் முத்தாய்ப்பு-அதை வெற்றிலையோடு சேர்த்து அதக்கிய சற்று நேரத்தில் ராஜா "எங்கோ போய் விடுவார். அடடா என்ன ஒரு பிகு!. இப்ப ராஜாவிடம் என்ன கேட்டாலும் தந்து விடுவார். ஏதாவது சொல்லணும் என்றால் இதுதான் நேரம்.

இந்த வெற்றிலைச் சேர்மானம் அரண்மனைக்குள் இருக்கும் எந்த ராணிக்கும் கைவராதது. இந்த அடப்பக்காரனுக்கே கைவந்த கலை. அவனிடமிருந்து அந்த ராஜாவாலேயே கற்றுக் கொள்ள டியாதது. "சுண்ணாம்புக்குள்ளே இருக்கு சூக்குமம் என்ற "சொலவம் சும்மாவா உண்டாயிற்று. ரோம அளவு சுண்ணாம்பு கூடினாலும் வாய் புண்ணாகி விடும். வெற்றிலைக்கு சுண்ணாம்புதான் சுருதி.

சனியும், புதனும் ராஜா தலைகுளிப்பதற்கு ன்னால் தலையில் எண்ணெய் வைத்து விடனும். பச்சை எண்ணை வைப்பதில்லை. காய்ச்சனும். காய்ச்சும் போதே அதன் மணம் ஊரை அள்ளும். இஞ்சி, மலைப்பூண்டு, சீரகம், ஒன்றிரண்டு நில் மிளகு, இன்னும் ஏதோ ஒன்று (அந்த ஏதோ ஒன்று என்பது அடப்பக்காரனுக்குத்தான் தெரியும்) இவ்வளவையும் போட்டுக் காய்ச்சி இளம் சூடாக இருக்கும் போதே தலையில் வைக்கனும்.

தலையில் வைத்தால் மட்டும் போதுமா: பிறகுதான் கதை இருக்கிறது. பொத்துனாற் போல, உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு, நோகாமல் ராஜா தலையில் ஒரு தனி ஆவர்த்தனம் வாசிப்பான் அடப்பக்காரன். அந்தத் தட்டுமானத்தில் ராஜா சொக்கி ஒரு தூக்கம் போட்டு விடுவார்.

அது முடித்து அதன் பிறகு உடம்பில் எண்ணெய் வைத்து நீவி நீவித் தேய்ப்பான். அந்த நீவுதலுக்கும் பிசைதலுக்கும் அப்புறம் விடுகிற வெண்ணீர்தான் சுகமான ஒரு ஒத்தடமாக அமையும். அதுக்கேத்த சூடாக வெண்ணீரின் சூட்டைத் தக்க வைத்துக் கொள்வான் அடப்பக்காரன். தலை முழுகி முடித்ததும், தொவட்டி, சாம்பிராணிப் புகையில் ஈரம் போக்கி அப்பாடா என்று உட்கார்ந்ததும், உலர்ந்த தொண்டைக்கு இதமாக ஒரு மிளகு ரசமோ வேண்டியதிருக்கும், குடிக்க.

இந்தச் சீன்றம் பிடித்த பணிவிடைகளை எந்த ராணிகளாலும் செய்யவே டியாது; அதுக்கென்று ஏற்பட்டது அடப்பக்காரன்தான். "உடம்பைப் பிடித்து விடுகிறது என்றால் இந்தக் காலத்தில் சரியானபடிக்கு அடி சதப்பி எடுப்பதைத்தான் குறிக்கும். அதில் ஒரு அர்த்தம் உண்டு. தெரியாதவன் வந்து உடம்பு பிடித்து விட்டால் உடல் ரணமாக வலிக்கும். பாரம்பரியமிக்க அடப்பக்காரர்களுக்குத்தான் உடம்பில் எந்த இடத்தில் எப்படி நோகாமல் இன்பம் தரும்படி தசைகளைப் பிடித்து பூப்போல பிசைய வேண்டும் என்று தெரியும். தூரத்தில் அடப்பக்காரன் நின்றாலே, உடம்பு அவனைக் கூப்பிடும் (வாடேய், வாடேய் என்று). தொடுசுகம் என்பதும் ஒருவகை மன்மதந்தான்.

காது ஏங்கும் சுருதி சுத்தமான இசைக்கு.

கண் தேடும் குளிர்ச்சியான காட்சிக்கு.

மூக்கு பெருமூச்சு விடும் ரம்மியமான மணத்தை நினைத்து.

நாக்கு கேட்கும் இனிய சுவைகளை.

உடம்பு மட்டும் என்ன பாவம் செய்தது மவுனமாக இருக்க.!

இப்போது சொல்லப்படும் ஒப்பனை என்கிற அரிய கலைக்கு மூலபுருசர்களே இந்த அடப்பக்காரர்கள்தான். மக்கள் ஆவலோடு திரும்பிப் பார்க்கும் ராஜா என்கிற மனிதனை இவர்கள் பார்த்துப் பார்த்து சிங்காரிப்பார்கள். நகம் வெட்டுவதிலிருந்து, முடி வெட்டுவது வரை. ஒரு அடப்பக்காரன் திடீரென செத்துப் போனான். அவனுக்கு வாரிசு கிடையாது.

யாரும் நனைக்கவில்லை இவன் இப்படிப் போய் விடுவான் என்று. பதறிப் போனார் ராஜா.

ராஜா என்றாலே, அலங்காரம்தானெ. ராஜாவுக்கு முகத்தை வெளியே காட்ட முடியலை. எல்லா இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார் ஒரு நல்ல அடப்பக்காரனைக் கண்டுபிடித்து வரச் சொல்லி. எங்கேயும் கிடைக்கவில்லை. கவலை பிடித்துக் கொண்டது அந்த ராஜாவை. கடேசியில் அந்த ராஜாவே, மாறு வேசத்தில் ஊர், ஊராகப் போய் ஒரு அடப்பக்காரனைத் தேடும்படி ஆகி விட்டது.

(நாட்டுப்புறக் கதைகள் பேசாத விஷயமே இல்லை என்று சொல்லி விடலாம். ஒரு அடப்பக்காரனைப் பற்றிய இந்தக் கதையை சொல்கிறவரின் பெயர் வைரவன். இவருடைய தொழில் ஆடு வெட்டுவது. எழுதப் படிக்கத் தெரியாதவர். காமராசர் மாவட்டம், அரசப்பட்டியைச் சேர்ந்தவர். கதை கேட்டு நமக்கு சொல்லுகிறவர் திருமதி பாரத தேவி.)

ஒரு ஊர்ல, ரெண்டு அடப்பக்காரங்க இருந்தாங்க. அவுக ஒன்னுக்கொன்னு ஒத்துமையா ஊருக்குள்ள தொழில் செஞ்சி கஞ்சி குடிச்சிக்கிட்டிருந்தாங்க. ஒரு நா, அவங்க ஊரு மந்தையில, அந்த ரெண்டு அடப்பக்காரங்களும் ரெண்டு இளவட்டங்களுக்கு சிகை அலங்காரம் (முடி சிங்காரிப்பு) செஞ்சுக்கிட்டிருக்கிறதை மாறு வேசத்துல வந்த ராஜா பாத்தாரு. அதுல ஒரு அடப்பக்காரன் முடிவெட்ற அழகு ராஜாவுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சி. அவன மட்டும் தனியா கூப்பிட்டு, நீ அரமனைக்கு வந்து வேல பார்த்தா ஒனக்கு வீடு வாச நலம் காசு பணம்ன்னு கிடைக்கும்; புறப்பட்டு வான்னு சொல்லிட்டுப் போனாரு. அவனும் அரமனைக்குப் போயிட்டான். அன்னிக்கிலருந்து அவனுக்கு அடிச்சது யோகம். ராசாவுக்குப் பிடிச்சிப் போன அடப்பக்காரனாயிட்டதுனால சொத்து சொவம்ன்னு ரொம்ப வசதி ஆயிட்டது.

நிதம் இவன கூட்டிட்டுப் போவ ஒரு வண்டி வரும். கொண்டு வந்து விட வண்டி வரும். ராஜா கூட இருந்ததுனால இவனுக்குப் பவுசு கூடிப் போச்சி. அதுல இருந்து யாரையும் மதிக்கிறதில்ல. சொந்தத் தாயி புள்ளக, கூடப் பொறந்த அண்ணந் தம்பிகள கூட எடுத்தெறிஞ்சி பேசுதது இப்படி ஆயிட்டது. இவனுக்கு ஏதாவது புத்தி சொன்னா, அரமனைக் காவக்காரங்கள விட்டு உதைக்க விடுவது இப்பிடியெல்லாம் கூட ஆயிட்டது. தலகாலு தெரியாம பெருமை வந்துட்டது.

ஊர்ல முந்தி இவங்கூட வேல செஞ்ச அடப்பக்காரன் ஒரு நிா இவனப் பாக்க வந்தாம். பழைய சினேகம். ஏதாவது உதவி கேக்கலாம்னு வந்தாம். "அண்ணே, அண்ணே, நீயும் நானும் கூடவே முன்கை புறங்கை போல ஒத்துமையா இருந்தோம். இப்போ ஊர்ல சரியா மழை தண்ணி கிடையாது. ரொம்பக் கஷ்டப்படுதேம். நீ இப்ப அரமனையில செல்வாக்கா இருக்க. ராசாக்கிட்ட சொல்லி ஏதாவது வேல வாங்கித் தந்தா நானும் பிழைச்சிக்குவேனென்னு கெஞ்சிக் கேட்டாம். அம்புட்டுதேம்; முத அடப்பக்காரனுக்குக் கோவம் அண்டகடாரம் முட்டிப் போச்சி. "ஏலே, பிச்சைக்காரப் பரதேசி. ஒனக்கு அரமனை வாசப்படிய மிதிக்கன்னாச்சும் தகுதி இருக்காடா. எங்கிட்ட கேட்டமான பேசாம போயிரு. வேற எங்கனயும் இந்தப் பேச்சு பேசி வச்சே, நானே ராசாகிட்ட சொல்லி ஒன் நாக்க இழுத்து வச்சி அறுக்கச் சொல்லிருவேம்ன்னாம்.

இப்படி இவம் சொன்னது, சொந்தக்காரங்க தாய் பிள்ளக எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி. எல்லாருக்கும் இவம் மேல கோவம், ஆங்காரம் வந்துருச்சி. "இவம் அரமனைக்கு அடப்பக்காரனாயிட்ட எக்களாத்துல தரையில நக்க மாட்டாம திரியிதாம். இவந்தலக் கனத்த தட்டி வைக்கனும்னு எல்லாரும் கூடிப் பேசி ஒரு முடிவு எடுத்துட்டாங்க.

ஒருநா, இவன் அரண்மனையில இருந்து வரவும் இவனோட பழகினவங்க எல்லாரும் வழி மறிச்சி "ஆமாண்ணே, நீ நித்தம் ராசாவுக்கு அடப்ப வேல செய்யப் போறியே, ராணியப் பாப்பியான்னு கேட்டாக. அவனுக்கு சிரிப்பா வந்திருச்சி. "அட கிருக்குப் பயகா, அரமனைக்கு அதும், ராசாவுக்கு அடப்பக்காரனா இருக்கவன் ராணியப் பாக்காம வருவானா. ராஜா பக்கத்துல ராணி இருப்பா; அவுக பக்கத்துல நிான் இருப்பேம்ன்னாம்.

அதுல இன்னொருத்தன், "ராணி கூட பேசி இருக்கியா?ன்னு கேட்டாம். "பக்கத்துல இவம் இருந்ததுக்கே இந்தப் போடு போடுதாம்; பேசீட்டா கேக்கவே வேண்டாம், நாட்டுலயே இருக்க மாட்டாம்ன்னு சொல்லவும் இவனுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்திருச்சி. உடனே, "ஏலே, எல்லாருங் கேட்டுக்கோங்க நல்லா. நாளைக்கே நானு ராணிகிட்ட பேசிட்டு வந்துட்டா?ங்கவும், "நீ தல்ல பேசிட்டு வா பாப்பம்ன்னாங்க.

மறு நா ராசாவுக்கு தலை சிங்காரிக்கும்போது முடி இறைக்க வேண்டியதிருந்தது. ராணியும் பக்கத்துல நின்னு கவனிச்சிக்கிட்டிருந்தா. ராணிகிட்டப் பேசனும் எப்படிப் பேச என்ன பேசன்னு தெரியல. பெரிய ரோசனையாப் போச்சி. வெட்டுன முடி தரையில சிதறிக் கிடந்தது. அதுகள எல்லாம் தூத்து அள்ளும்போது ராணி பக்கத்துல கொஞ்சம் தல முடிய வேனுமென்னே விட்டுட்டு மத்ததுகளை எல்லாம் தூத்து அள்ளுனான். அப்போ ராணி, "இங்க கொஞ்சம் கிடக்குப் பாருன்னு சொன்னா. அவ்ளோதம், இவனுக்கு சந்தோசம் பொறுக்கல. மத்தவங்க கிட்டவந்து, அய் ராணி ஏங்கூட பேசிட்டா ராணி ஏங்கூட பேசிட்டான்னு குதிச்சாம்.

"போடா போ, பேசுனதுக்கே இந்தக் குதி குதிக்கெ. எதும் ராணியோட விரலுகிரலு ஒம்மேல பட்டுருச்சின்னா அம்புட்டுதேம். தலகுப்புறந்தாம் நடப்பேன்னு சொன்னாங்க. அதக் கேக்கவும், இவனுக்குப் பொறுக்க முடியல. "நாளக்கே ராணி விரலு எம்மேல தொடுதாப்புல ஒரு வேல செஞ்சிக்கிட்டு வாரேம்ன்னு வீராப்பா சொல்லீட்டு, மறு நாளு அரமனைக்கு வந்தாம். அதுக்கேத்தாப்புல, இவன் வரவும் ராசா இவனப் பாத்து, "டேய், ராணி விரல்ல எப்படியோ நிகம் லோசப் பேந்துருச்சி. அத வலிக்காம வெட்டி எடுத்திருன்னாரு.

ராசா சொன்னபடியே இவனும் ராணி விரல் நகத்த வலிக்காம வெட்டி எடுத்தாம். எடுத்ததோட, மருதாணி வச்சி சிவந்திருந்த வெட்டுன அந்த நகத்த எடுத்திட்டு வந்து, அம்புட்டுப் பேரயும் கூட்டி வச்சி, "ஏலேய் பய புள்ளகளா பாத்தீகளா; நல்லா பாத்துக்கோங்க. நாந்தாம் ராணிக்கு நகத்த வெட்டி விடுறது. ஒரு அடையாளத்துக்குத்தாம் இந்த நகத்தக் காமிக்கக் கொண்டுக்கிட்டு வந்தேம் ன்னு பெருமையாக் காமிச்சாம். அதெப் பார்த்த அவனொட சொந்தக்காரங்களுக்கே அவம்பேர்ல ஒரு பொச்சரிப்பு ஏற்பட்டுப் போச்சி. இவன எப்பிடியாச்சும் தாணிச்சிறனும்ன்னு தீர்மானம் பண்ணிட்டாங்க.

"போடா போ. விரலு நகத்த வெட்டுனதுக்கே இப்படி பவுசாப் பேசுதயே, ராணியோட கையக்கிய்யப் புடுச்சிட்டா நீ மானத்துக்கும் பூமிக்குமில்ல குதிப்பேன்னாங்க. அவுகளுக்கு ஏத்தாப்புல இவங்கூட வேல செய்த அந்த அடப்பக்காரன் அவங்களப் பாத்து, "எல்லாரும் வாய மூடுங்கடா. ராணியோட விரலத் தொட்ட எங்க அண்ணனுக்கு அவளோட கையப் பிடிக்க எம்புட்டு நேரமாகும்?ன்னு கேட்டாம். அம்புட்டுத்தாம். அவனுக்கு ரொம்ப மண்டக்கனம் கூடிப் போச்சி. "ஏலேய், எல்லாரும் கேட்டுக்கிங்க. நாளக்கே நா ராணியோட கையப் புடிக்கல. எம்பேர மாத்திக் கூப்பிடுங்கன்னு சவர்தம் (சவால் ) விட்டாம்.

அப்பிடி சவர்தம் கூறி விட்டு வந்தவனுக்கு ராவிடிய உறக்கம் வல்ல. எப்படியும் நாளக்கு ராணி கைய புடிக்காம வரக் கூடாது. இதுல தலையே போனாலும் சரின்னு நனச்சி எப்ப விடியும்னு கட்டையே பாத்துக்கிட்டுப் படுத்துக் கிடந்தானாம். விடிஞ்சதும் எழுந்திருச்சி அவசரமாக் குளிச்சி முழுவி நல்லா சோக்குப் பண்ணிக்கிட்டு அரண்மனைக்குப் போனாம். இவனப் பாத்த ராசா, என்னடா இன்னக்கி வெள்ளயும், சொள்ளயுமா ஆளே மாறிப் போயிருக்கேன்னு கேக்கவும், சும்மாதான் மகாராசான்னு தலக்கு மேல ஒரு கும்புடு போட்டுட்டு அவருக்கு முகம் வழிக்க ஆரம்பிச்சான். ஆனா இவம் நெனப்பல்லாம் ராணி மேல. எப்பிடி ராணியோட கைய பிடிக்கிறது...எப்பிடி... இந்தத் தருமாத்தத்திலேயே இருந்தததுனால ராசா கன்னத்துல கத்திபட்டு, இத்தினிக் காயம் ஆகி சில்லுன்னு ரத்தம் வந்திருச்சி.

ராசா சட்டுனு கத்த இழுத்துக்கிட்டு என்னடா இப்பிடி பண்ணிட்டென்னு கேக்க, ராணி அதுக்குள்ள பதட்டமா ஓடி வந்து அய்யோஇதென்ன இப்பிடி ரத்தம் வருதேன்னு ராசாவோட கன்னத்தத் தொட, எதுரா சாக்குன்னு இருந்த அடப்பக்காரன், இந்த ரத்தமெல்லாம் ஒன்னும் செய்யாது நீங்க கைய எடுங்கன்னு ராணியோட கையப் பிடிச்சான். அம்புட்டுத்தாம். ஏற்கனவே கன்னம் வெட்டுப்பட்ட கோவத்துல இருந்த ராசாவுக்கு இவன் ராணியோட கையப் பிடிக்கவும் பலமா கோவம் வந்துருச்சி. இவம் வெள்ளயும், சொள்ளயுமா வந்தப்பவே, ராசாவுக்கு இவம் பேர்ல ஒரு மாதிரியா இருந்ததுக்கும் இப்ப ராணியோட கையப் பிடிச்ச விதத்தப் பாத்த ராசாவுக்குக் கோவம் அண்டகடாடம் முட்டிப் போச்சி. பயலுக்கு இவ்வளவுக்குக் கொழுப்போச்சோன்னு நெனச்சி, காவலாளிகளைக் கூப்பிட்டு அவன மரத்துல கட்டிவச்சி அறுவது சவுக்கடி கொடுக்கச் சொல், அவனோட அந்தக் கைய வெட்டும்படியா உத்தரவு கொடுத்துட்டாரு.

கையி போன அந்த அடப்பக்காரன் தொழில் செய்ய முடியாம அடுத்த நாட்டுல போயி பிச்சை எடுத்துக்கிட்டு அலஞ்சானாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X