இளைஞர்களை தூண்டுவதாக உளவுத்துறை ரிப்போர்ட்.. கரப்பான் பூச்சி கட்சி X கணக்கு முடங்கிய பின்னணி
டெல்லி: இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் என்றால் CJP என்ற புதிய மக்கள் இயக்கம் தான். தற்போதைய அரசியல் மற்றும் ஆட்சி முறையின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த இளம் தலைமுறையினர் சமுக வலைத்தளத்தை பயன்படுத்தி மக்களை இணைக்கும் மாபெரும் ஒரு அமைப்பாக மாறி வருகிறது.
Cockroach Janta Party என்ற உருவாக்கப்பட்டு உள்ள இன்ஸ்டா கணக்கிற்கு இதுவரையில் 19.5 மில்லியன் பாலோவர்கள் சேர்ந்துள்ளனர். மற்ற தளங்களிலும் Cockroach Janta Party கணக்குகளில் வேகமாக மக்கள் இணைந்து வரும் வேளையில் மத்திய அரசு அதிரடியாக ஆக்ஷன் எடுக்க துவங்கியுள்ளது.

காக்ரோச் ஜனதா பார்ட்டி எக்ஸ் கணக்கு
'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற பெயரில் இயங்கி வந்த எக்ஸ் கணக்கை மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த கணக்கு செயல்பட்டதாகக் கருதப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி சூர்யா காந்த்
காக்ரோச் ஜனதா பார்ட்டி கணக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்களின் கருத்துக்கு பிறகு தொடங்கப்பட்டது. அரசு அமைப்பைத் தாக்குபவர்கள் மற்றும் எதிர்த்து பேசுபவர்கள் பற்றி நீதிபதி சூர்யா காந்த் கருத்து சமுக வலைத்தளத்தில் பெரிய அளவிலான விமர்சனம் பெற்றது.
நீதிபதி சூர்யா காந்த்-ன் கருத்தை விமர்சனம் செய்யும் வகையில் கேலியாகவும், விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கணக்குகள் தற்போது நாட்டின் இளைஞர்களின் குரலாக மாறியுள்ளது. இந்த கணக்கு துவங்கப்பட்ட சில மணிநேரத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சாதாரண மக்கள், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது.
உளவுத்துறை கொடுத்த தகவல்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், உளவுத்துறை (ஐபி) அளித்த தகவலின் அடிப்படையில் காக்ரோச் ஜனதா பார்ட்டி டிவிட்டர் கணக்கு மீதான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அந்த கணக்கில் பொறுப்பற்ற கண்டென்ட்களை வெளியிட்டு, இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று உளவுத்துறை கணித்துள்ளது. இதனால் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (மீட்யூ) எக்ஸ் நிறுவனத்துக்கு இக்கணக்கை முடக்க உத்தரவு அனுப்பியது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் பிரிவு 69ஏ-வின் கீழ் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, பொது ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாக்கவும், குற்றங்களைத் தூண்டும் செயல்களைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த உத்தரவு ரகசியமான முறையில் வழங்கப்பட்டதால் அதிகாரி பெயர் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் மட்டும் தான் முடக்கம்
இந்த தடை உத்தரவு அனுப்பப்பட்டபோது காக்ரோச் ஜனதா பார்ட்டி எக்ஸ் கணக்குக்கு சுமார் 90,000 பாலோவர்கள் இருந்தனர். இந்த உத்தரவு மூலம் CJP எக்ஸ் கணக்கு இந்தியாவில் மட்டும் தான் தடை செய்ய முடியும், வெளிநாடுகளில் வழக்கம் போல் இதை பயன்படுத்த முடியும். இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மூலம் தற்போது இந்த எக்ஸ் கணக்கிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இதே கணக்குடன் தொடர்புடைய இன்ஸ்டாகிராம் பக்கம் இன்னும் தடை செய்யப்படவில்லை. அந்த பக்கத்துக்கு 1.95 கோடிக்கும் மேற்பட்ட பாலோவர்கள் உள்ளனர். விரைவில் அந்த பக்கமும் தடை செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாற்றுக்கணக்கு
மத்திய அரசு எக்ஸ் கணக்கை முடக்கிய சம்பவத்துக்கு இரண்டு மணி நேரத்திற்குள் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, 'காக்ரோச் இஸ் பேக்' என்ற புதிய எக்ஸ் கணக்கைத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அபிஜீத் தீப்கே மகாராஷ்டிராவை சேர்ந்தவர், தற்போது பாஸ்டனில் வசிக்கிறார்.
இந்த தடை நடவடிக்கை சமூக ஊடக சுதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. சாதாரண மக்கள் இந்த சம்பவத்தை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்
மே 15 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், சீனியர் அட்வகேட் பதவி வேண்டி மனு தாக்கல் செய்த ஒரு வழக்கறிஞரை கடுமையாகக் கண்டித்தார். "சமூகத்தில் ஏற்கனவே அமைப்பைத் தாக்கும் ஒட்டுண்ணிகள் இருக்க, நீயும் அவர்களுடன் சேர வேண்டுமா? வேலைவாய்ப்பு இல்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போல மீடியா, சமூக ஊடகம், RTI ஆர்வலர்கள் என மாறி அனைவரையும் தாக்குகிறார்கள்" என்று கூறினார்.
மே 15ஆம் தேதி பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம் அளித்தார். "இளைஞர்களை விமர்சித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறு. நான் விமர்சித்தது, போலியான டிகிரி வைத்துக்கொண்டு சட்டம், ஊடகம், சமூக ஊடகம் உள்ளிட்ட துறைகளில் நுழைந்த ஒட்டுண்ணிகளை மட்டுமே. இந்திய இளைஞர்கள் மீது எனக்கு பெருமை உண்டு. அவர்கள் அனைவரும் எனக்கு உத்வேகம் தருகிறார்கள்" என்று அவர் கூறினார்.














Click it and Unblock the Notifications