அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்
சென்னை:
தி.மு.க. பாணியில் அ.தி.மு.க.விலும் சில மாற்றங்கள் செய்ய அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதன்படி கூடுதலாக இரண்டுபொதுச் செயலாளர் பதவிகளை அவர் ஏற்படுத்துகிறார். அதில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையும், பெண் ஒருவரையும் நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க.வில் சமீபத்தில் இது போன்று தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் சுந்தரத்தையும், பெண் பிரதிநிதி என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர்சுப்புலட்சுமி ஜெகதீசனையும் துணைப் பொதுச் செயலாளர்களாக முதல்வர் கருணாநிதி நியமித்தார். கடந்த ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில்இந்த நியமனங்கள் செய்யப்பட்டன.
அதே பாணியில் அ.தி.மு.க.விலும் இரண்டு துணைப் பொதுச்செயலாளர்களை நியமிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கட்சியின் முன்னணித்தலைவர்களாக இருந்த சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகிய மூவரை கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, மாநிலப் பொறுப்புகளில்இருந்த செங்கோட்டையன், மதுசூதனன், கரூர் சின்னசாமி போன்ற பலரின் பதவிகளையும் பறித்தார்.
அதன் பின்னர் அப்பதவிகளுக்கு புதியவர்களை நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இந்த மாற்றத்தை செய்யவிருக்கிறார். அநேகமாக தலித்தலைவர் என்ற முறையில் தலித் எழில்மலைக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
இவர் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். அங்கிருந்து விலகி தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வில் இணைந்தார். இவரைவைத்து அதிகளவில் பொதுக் கூட்டங்கள் நடத்தும்படி கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
பெண்களுக்கான பதவிகளையும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கலாம் என்ற யோசனையிலும் ஜெயலலிதா இருப்பதாகத் தெரிகிறது.கிறிஸ்தவர், முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இப் பொறுப்புகள் தரப்படலாம் எனத் தெரிகிறது.
அதோடு சசிகலாவின் உறவினரான தினகரனுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவமும், பொறுப்பும் அளித்துள்ள ஜெயலலிதா, அவரைத் தொடர்ந்துதினகரனின் சகோதரரான பாஸ்கரனுக்கும் முக்கிய பொறுப்பு தரவிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications