தமிழகத்தில் இன்று
கே: பொதுவாக அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?
ப: மக்கள் நலனைப் பற்றி நினைப்பது.
கே: அடிக்கடி என்னுடைய மனசாட்சி என்னை அரசியலில் இறங்கி பணி செய் என்று சொல்கிறதே? இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: அடுத்த முறை அது பேசும் போது, கூர்மையாக கவனியுங்கள். அது அனேகமாக மன சாட்சியாக இருக்காது. பண சாட்சியாக இருக்கும்.
கே: சோ தேர்தலில் போட்டியிடலாமா என்று பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி, அதில் போட்டியிடலாம் என்று மெஜாரிட்டி கிடைத்தாலாவதுநீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா...?
ப: போட்டியிடலாம் என்று தானே சொன்னோம்? போட்டியிட்டால் ஓட்டளிப்போம் என்று சொன்னோமா? என்று நீங்கள் உட்பட,எல்லாரும் கேட்டு விட்டால் - நான் என்ன செய்வது?
கே: கேரள முதல்வர் நாயனார் மற்றும் அவரது அமைச்சர்கள் சாதாரண வீடுகளில் குடியிருக்கிறார்கள். கட்சி தரும் சம்பளத்தில் வாழ்கிறார்கள்.இதையெல்லாம் பார்த்து நம் தமிழக அரசியல்வாதிகள் திருந்துவார்களா?
ப: நாயனார் மட்டுமல்ல. பொதுவாக மார்க்சிஸ்ட்கள் பெரும்பாலானவர்கள் எளிமையான வாழ்க்கையை நடத்துபவர்களே. அவர்களிடமெல்லாம்மற்ற கட்சிகளைப் போல் ஊழலும் இல்லை. மற்ற அரசியல்வாதிகள், இவர்களையெல்லாம் பார்த்து பரிதாபப்படுவார்களே தவிர, இவர்களைப்பின்பற்ற மாட்டார்கள்.
கே: கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியைவிட, மம்தா தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது பற்றி..?
ப: பாராளுமன்ற இடைத் தேர்தலில் நடந்த தொகுதியில் கூட, மம்தா பானர்ஜியின் கட்சியிடம் மார்க்சிஸ்ட் கூட்டணி தோல்வியடைந்தது.
இப்போது கல்கத்தா மாநகராட்சி தேர்தலில் தோல்வி. மார்க்சிஸ்ட்களின் செல்வாக்கு சரிகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல்களில், ஓட்டுப் பிளவை பெரிய அளவில் செய்து காங்கிரஸ் உதவினால், மார்க்சிஸ்ட்கள் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் சங்கடம்தான்.
கே: ஜாதிக் கட்சி துவக்கி அரசை மிரட்டுவதுடன், அவர்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவானால், அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் - என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி...?
ப: ஜாதி அடிப்படையில் சலுகைகளை வழங்குகிற அரசுக்கு, அந்த சலுகைகளைப் பெறவும், அதிகப்படுத்திக் கொள்ளவும் உதவுகிற ஜாதி சங்கங்களைப்பற்றி பேசும் அருகதை கிடையாது.
கே: ஜெயலலிதா, தேவ கவுடா போன்றவர்கள் கோயில்களைத் தீவிரமாகச் சுற்றுகிறார்களே! இவர்கள் பிரார்த்தனை பலித்தால், கடவுளைப்பற்றி தங்கள் கருத்து என்னவாக இருக்கும்?
ப: கர்ம பலன் என்ற நியதியை வகுத்து, அதன்படியே உலகை நடத்திச் செல்லும் கடவுளின் கட்டுப்பாடு உணர்வு பற்றி நினைத்து மெய் சிலிர்த்துப்போவேன்.
கே: உங்களுக்குப் பெண் வாசகர்கள் அதிகம் இல்லாததற்குக் காரணம்...?
ப: ஆணும் பெண்ணும் சரி சமம் என்று நான் நினைப்பதால், இவனுக்கு ஆண் வாசகர்களே போதும் என்று பெண் வாசகர்கள் நினைக்கிறார்கள்போலிருக்கிறது.
கே: என் கையெழுத்தே, சில நேரங்களில் எனக்கு போலிக் கையெழுத்து போல் தெரிகிறதே ஏன்?
ப: ஏன் இப்படி? எதிலாவது மாட்டிக் கொண்டு விட்டீர்களா?
கே: நாட்டில் பல கட்சிகள் தோன்றக் காரணம் என்ன?
ப: பணம் சம்பாதிக்க, ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறுக்கு வழி. அதிகாரத்தில் அமர முடியவில்லை என்றால் கூட, வசூலுக்கு நிறையவழிகள் இருக்கின்றன. ஆகையால் கட்சி ஆரம்பிப்பது என்பது ஒரு வியாபார முயற்சி. ஏன் வியாபாரங்கள் பெருகுகின்றன என்று கேட்பதுபோல், நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்.
கே: தி.மு.க. அணிக்கு த.மா.கா.வை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பேன் என்கிறாரே பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்! இது நடக்குமா?
ப: கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்று (அ.தி.மு.க. சொல்வதற்கு முன்பாக) சொல்லி, அதை நடைமுறைப்படுத்துகிற வழிமுறைகளை மேற்கொள்ளும்மனோ தைரியமும், பக்குவமும் தி.மு.க. வுக்கு வந்தால் - இது நடக்கக் கூடியதே!
கே: இலங்கையில் தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று சில தமிழக அரசியல்வாதிகள் நினைப்பது போல், தமிழக மக்களும்நினைக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
ப: தமிழக மக்கள் அப்படி நினைப்பதாக நான் கருதவில்லை. பிரச்னை தீர்ந்து, இலங்கைத் தமிழ் மக்கள் அமைதியுடனும், நிலையான உரிமைகளைப்பெற்றும் வாழ்கிற வகையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் இப் பிரச்சினைகளை அறிந்த தமிழக மக்களின் நினைப்பு - என்றுதான் நான்நினைக்கிறேன்.
கே: காவிரிப் பிரச்சினையில், பாரதீய ஜனதா அரசு மக்களை ஏமாற்றுகிறது என்கிறாரே முன்னாள் பிரதமர் தேவ கவுடா?
ப: ஏமாற்றவில்லை. பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. அதாவது முந்தைய அரசு செய்ததையே செய்கிறது.
கே: உத்திரப் பிரதேச பஞ்சாயத்துத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது பற்றி...?
ப: உத்திரப் பிரதேச அரசியலில் பா.ஜ.க. ஒரு சில வருடங்களாக செயல்பட்டு வரும் விதத்தை நினைத்துப் பார்த்தால் - இந்த தோல்வி அவர்களுக்குபோதிய தண்டனை அல்ல. இன்னும் பெரிய தண்டனை காத்திருக்கிறதோ, என்னவோ!
கே: ஒரு வழக்கில், முக்கியமான தஸ்தாவேஜில் இருப்பது என் கையெழுத்தே அல்ல என்று சொன்னால், நான் தப்பித்து விட முடியுமா?
ப: இது கூட போதாது. நான் அந்த நபரே அல்ல. அந்த நபர் வேறு. நான் வேறு. உருவ ஒற்றுமையை வைத்து வழக்கு போட்டு விட்டார்கள்என்று ஒரு போடு போட்டுப் பாருங்கள்.












Click it and Unblock the Notifications