For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரப்பை ஏற்படுத்திய த.மா.கா செயற்குழு

By Staff
Google Oneindia Tamil News

எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது த.மா.கா.வின் சிதம்பரம் செயற்குழு.

சரியாக 6 நாட்களுக்கு முன்புதான் மூப்பனார் முன்னிலையிலேயே ஆட்சியில் பங்கு தர முடியாது என்று அடித்துப் பேசி விட்டுப் போனார் ஜெயலலிதா. அதற்குமூப்பனார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு சிதம்பரம் செயற்குழு 29-ல் கூடியது.

29ம் தேதி செயற்குழு என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆட்சிப் பங்கு விவகாரம் பற்றி பேசும் திட்டமே அப்போது இல்லை. ஆனால்,23ம் தேதி ஜெயலலிதா கிளப்பி விட்ட சர்ச்சைக்கு பின்பு அதுபற்றி விவாதிக்க வேண்டிய நிலைக்கு த.மா.கா. தள்ளப்பட்டது என்று தன்னிலை விளக்கம்அளிக்கிறது சத்தியமூர்த்திபவன் வட்டாரம்.

எப்படியோ சந்தடியில்லாமல் முடிந்திருக்க வேண்டிய சிதம்பரம் செயற்குழுவுக்கு சரியான பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. பரபரப்பான கட்டத்தில் கூடிய இந்தசெயற்குழுவுக்கான ஏற்பாடுகளை செய்தவர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி. ஊர் முழுவதும் த.மா.கா. கொடிகளை பறக்க விட்டுவெற்றிக் கொடி கட்டி விட்டார் என்கின்றனர் கட்சியினர்.

ஆனால், அவர் மேலிடப் பார்வையாளராக இருந்து தீர்த்து வைத்த பாண்டிச்சேரி ஆட்சி அமைப்பு விவகாரத்தில் தான் சற்று சறுக்கல். அந்த கோபத்தில்பாண்டிச்சேரி த.மா.கா. தலைவர் கண்ணன் மட்டும் செயற்குழுவை புறக்கணித்து விட்டார்.

அது கூட பெரியதாக பேசப்படவில்லை. கட்சியின் செயல் தலைவர் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வராமல் போனதற்குதான் சரியான காரணம் கூறப்படவில்லை.

இவ்வளவு முக்கியமான ஒரு கட்டத்தில் சிதம்பரம் மிஸ்ஸிங் என்பது பலரையும் சிந்திக்க வைத்தது. ஆனால், த.மா.கா. வட்டாரத்தில் அது பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

சிதம்பரம் வராமல் போனதற்கு எந்த விசேஷ காரணமும் இல்லை. அவர் தலைவரிடம் தகவல் சொல்லி விட்டுத் தான் வராமல் இருந்தார்என்கின்றனர்.

இப்பின்னணியில் கூடிய செயற்குழுவில் பேசியவர்கள் எல்லோரும் ஆட்சிப் பங்கு விவகாரம் பற்றித் தான் பேசித் தீர்த்தனர். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,ஜெயந்தி, தனுஷ்கோடி ஆதித்தன், அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ்.வி.சித்தன், தமிழருவி மணியன் என்று பலர் இந்த விவகாரங்கள் பற்றி பேசினர்.

ஆட்சிப் பங்கு விவகாரத்தில் அவர்கள் ஜெயலலிதாவை அட்டாக் பண்ணி பேசியபோதெல்லாம் கூட்டத்தில் கைத்தட்டல் எழுந்தது. ஆனால், அதுவேமெல்ல மெல்ல திசை மாறி தி.மு.க. ஆதரவு பேச்சாக வளர்ந்தபோது, கூட்டத்தினர் உற்சாகம் குறைந்தது என்கின்றனர்.

ஜெயலலிதாவின் மூக்கறுப்புக்கு பின்னர் கூடிய இந்த கூட்டத்தில் கட்சி என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று பேசிய பலரும், மூன்றாவது அணி என்றமுடிவை முழுமையாக நிராகரித்தனர் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விசேஷம் என்றார் த.மா.கா. பிரமுகர் ஒருவர்.

குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் வகையில் நிறைவேற்றபட்ட அரசியல் தீர்மானத்தின் மீது பேசிய ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன்,தமிழருவி மணியன் ஆகியோர் மூவருமே மூன்றாவது அணி பற்றி மூச்சு விடவில்லையாம். தமிழருவி மணியன் மட்டும் தைரியமாக தி.மு.க. கூட்டணிக்குபோய் விடுவோம் என்றாராம்

ஜெயலலிதாவை நம்மை மதிக்காதபோது நாம் ஏன் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். தி.மு.க .கூட்டணிக்கு சென்று விடலாம்.

பா.ஜ.க.வும் இப்போது மதச்சார்புக் கொள்கையை கை விட்டு விட்டது. பங்காரு லட்சுமணனை புதிய தலைவராக அக் கட்சி நியமதித்ததில் இருந்தும்,முஸ்லீம்கள் பா.ஜ.க.வின் ரத்தத்தின் ரத்தம் என்று அவர் பேசியதில் இருந்தும் இதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று தமிழருவி மணியன்பேசினாராம்.

ராமகிருஷ்ண ஹெக்டேவின் லோக்சக்தி கட்சியில் இருந்து வந்தவராயிற்றே அதனால் தான் பா.ஜ.க. பக்கம் போகத் துடிக்கிறார் என்று அப்போதேவிமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால், அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கேட்ட மூப்பனார், கடைசியில் தமிழருவி மணியின் கருத்தை நிராகரித்துவிட்டாராம்.

பா.ஜ.க.வின் நிறம் மாறி விட்டது என்றால் அதை நாம் வரவேற்போம். அவ்வளவு தான். அதற்காக அவர்களோடு போய் நாம் ஒட்டிக் கொள்ளமுடியாது. ஒட்டவும் மாட்டேன் என்று கொஞ்சம் உரத்த குரலில் பதில் சொன்னாராம்.

அழகிரி பேசும்போது கம்யூனிஸ புரட்சி பற்றி குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய புரட்சிக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பாளர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் லெனின். அதேபோல் நமக்கு கொள்கை தான் முக்கியம் என்ற உணர்வோடு தலைவர் மூப்பனார் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

தீர்மானங்கள் பற்றியும், தலைவர்கள் பேச்சு பற்றியும் கடைசியில் "வைண்ட் அப் செய்து பீட்டர் அல்போன்ஸ் பேசினார். ஆட்சியில் பங்கு என்பதுத.மா.கா.வின் ஆரம்ப காலக் கொள்கை என்பதை விலாவாரியாக விளக்கிய அவர் கட்சியின் போராட்டத் திட்டம் பற்றி அறிவித்தார்.

விவசாயிகள், நெசவாளர்கள் பிரச்னைகளை உள்ளடக்கிய மக்கள் பிரச்னைகளுக்காக மிகப்பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றை,காமராஜர் காலத்தில் நடந்தது போல் நடத்த மூப்பனார் முடிவு செய்துள்ளார்.

அந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் சிறை செல்ல வேண்டும். அப்படிச் செய்தால் நமது பலத்தை ஜெயலலிதா மட்டுமல்ல, எல்லாதலைவர்களும் புரிந்து கொள்வார்கள்.

நம்மை மதிக்கத் தவறுபவர்களையும் நாம் மதிக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாமெல்லாம் சிறை செல்லத் தயாராக வேண்டும் என்று அவருக்கேஉரிய பாணியில் பேசியவர், பேச்சின் நடுவே லேசாக ஜெயந்தியை வாரியிருக்கிறார். எப்படி?

எல்லாவற்றிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் மகளிரணித் தலைவி ஜெயந்தி, இந்த சிறை நிரப்பும் போராட்டத்திலும் 33 சதவீதம் பெண்கள்இடம் பெறச் செய்ய வேண்டும் என்றாராம்.

மேடையில் அமர்ந்திருந்த ஜெயந்திக்கு லேசாக முகம் சுருங்க, "33 என்ன ஒரு லட்சம் பேரும் பெண்களாக இருப்பாங்க. அதை நான் பாத்துக்கிறேன்என்று கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னாராம்.

அதற்கு பீட்டர், "அப்படியா ரொம்ப சந்தோஷம் அப்போ நாங்க எல்லாரும் பாதுகாப்புக்கு வர்றோம் என்று கிண்டலடித்தாராம்.

சீரியஸாக சென்று கொண்டிருந்த விவாதத்திற்கு மத்தியில் மெல்ல கோஷ்டிப் பூசல் வெளிப்படுவதை பார்த்து மூப்பனார் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாராம்.ஆனால் மிக உறுதியோடு நிறைவுரை ஆற்றினாராம்.

"நாம யாருகிட்டேயும் போய் ஆட்சியில் பங்கு கொடுங்கன்னு பிச்சை கேட்கப் போறதில்லை. ஆட்சியில் பங்கு தாங்ன்னு தான் கேட்கப் போகிறோம்.அதனால நீங்க யாரும் அதைப் பத்த கவலைபட வேண்டாம். மதச்சார்பற்ற சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டணும். அது தான் நமக்கு இருக்கிற பெரியபொறுப்பு.

அந்த பொறுப்பை உணர்ந்து நாம செயல்படணும். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் கெடுத்துடக் கூடாது. பா.ஜ.க.வோட இருக்கிறவங்க பக்கம் நாமபோக முடியாது. அதனால நாம அவசரப்படவும் கூடாது.

இப்போ முடியாதுன்னு சொல்றவங்கள மாத்திக் காட்டணும். அந்த சக்தி நமக்கு வரணும். அந்த பொறுப்பை நான் எடுத்துக்கிறேன். நிச்சயம் அவங்கமாறுவாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்போ நாம செய்ய வேண்டியது எல்லாம் கட்சிப் பணி என்று ஜெயலலிதா மனம் மாறுவார் என்றநம்பிக்கையோடு தான் பேசி முடித்தாராம் மூப்பனார்.

அவரது பேச்சுக்கு பின்னர் தலைவரின் மன நிலையை உணர்ந்த திருப்தியோடு முடிந்துள்ளது செயற்குழு. எனவே இந்த ஆட்சிப் பங்கு விவகாரத்தால்அ.தி.மு.க. - த.மா.கா உறவில் இப்போதைக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்ற நம்பிக்கையோடு, அக்டோபர் 2ம் தேதி சிறை புகதயாராகின்றனர் த.மா.கா.வினர். த.மா.கா.வின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X