ஆவி வதந்தியால் கிலியில் பாட்னா
பாட்னா:
பீகார் தலைநகர் பாட்னாவில் அண்மையில் விமானவிபத்து நடந்த இடத்தில் ஆவி நடமாடுகிறது என்று புரளி கிளம்பியுள்ளது.
வெள்ளைச் சேலை அணிந்த பெண்கள் அப்பகுதியில் இரவு நேரங்களில் உலாவுவதாகவும் கூறுகிறார்கள். இதையடுத்து "ஆவியை விரட்டுவதற்காக அங்குசிறப்பு பூஜைகள், சடங்குகள் நடத்தப்படுகின்றன.
பாட்னா விமான நிலையம் அருகே ஜூலை 17 ம் தேதி கர்தானிபாக் என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 58 பேர்இறந்தனர். இந்த இடத்தில்தான் ஆவி நடமாட்டம் இருப்பதாக புரளி கிளம்பியுள்ளது.
இதையடுத்து ஆவியை விரட்டுவதற்காக சாமியார்கள் வரவழைக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பூஜைகள் நடத்துவதற்காக 11 சாமியார்கள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விபத்து நடந்த இடத்தில், 31 குழிகளைத் தோண்டி அந்தக் குழிகளில் கங்கை ஆற்றிலிருந்து நீரை ஊற்றுகிறார்கள்.
பூஜை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வரும் பாபா ராமகாந்த் என்பவர் கூறுகையில், இங்கு தினமும் காலை 8 முதல் 12 மணி வரைசிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பின்னர் இரவு நேரங்களில் நடக்கும் "ஆவி விரட்டும் பூஜையில் பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள்.
குழிகளில் ஊற்றப்படும் கங்கா நீரை செப்டம்பர் 18 ம் தேதி வரை வைத்திருந்து விட்டு, விபத்து நடந்த இடத்தில் தெளிக்க வேண்டும். அப்போதுதான்விமானவிபத்தில் இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
அப்பகுதியில், பேய், பிசாசு இருப்பதாகவும், பில்லிசூனியம் வேறு இருப்பதாகவும் புரளி கிளம்பியுள்ளதால் அப்பகுதியில் வாழும் மக்கள் பயத்தில் உள்ளனர்.ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா டிரைவர்கள் இரவு நேரங்களில் அப்பகுதி வழியே செல்வதைத் தவிர்க்கிறார்கள். சில சமயங்களில் அப்பகுதி வழியேவர நேரிட்டால் "விரட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
முதலில் இப்பகுதியில் பூஜை நடத்துவதற்கு விமானத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. அப்பகுதியில் பூஜைகள் நடத்தினால் விபத்துக்குரியசாட்சியங்கள் அழிந்து விடும் என்று கருதியதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பின்னர் அனுமதிக்கப்பட்டது.
பாட்னாவைச் சேர்ந்த சிலருக்கு இந்த பூஜைகளில் நம்பிக்கை இல்லை. இதை சுத்த ஹம்பக் என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள். பாட்னாவைச் சேர்ந்தராகேஷ் சர்மா என்ற கம்ப்யூட்டர் என்ஜினியர் கூறுகையில், இதெல்லாம் மூடநம்பிக்கை. ஆவிகள் உலவுவதாக கூறுவது வெறும் புரளி என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications