ஈ-மெயில் பயன்படுத்துங்கள்- அரசு அலுவலர்களுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
அரசுத்துறைகளில் அலுவலர்கள் ஈ-மெயிலை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
அரசு துறைகள் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டால் வீண் செலவுகள் குறையும் என்றும் சென்னையில் வியாழக்கிழமைநடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கருணாநிதி கூறினார்.
அரசு நிர்வாகம் முழுவதையும் கணினிமயமாக்க (கம்ப்யூட்டர் மயமாக்க) தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக விவாதிப்பதற்காக கலெக்டர்கள் மாநாட்டை கோட்டையில் முதல்வர் கூட்டியிருந்தார்.
இம்மாநாட்டில் முதல்வர் பேசியதாவது:
1996ம் ஆண்டு அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகத்தில் பல்வேறு துறைகளில் கணினியை பயன்படுத்தி நிர்வாகத்தின்செயல்பாடுகளை மேம்படுத்த முனைப்பான முயற்சிகள் தொடர்கின்றன.
கணினியை அரசு நிர்வாகத்தில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் அரசு பணிகளின் தரம் உயரும். நடவடிக்கைகளில்தாமதம் குறையும். பொதுமக்களின் அலைச்சலும், மனத்தாங்கல்களும் வீண் செலவும் தவிர்க்கப்படும்.
அரசு நடவடிக்கைகள் வெளிப்படையாகி மக்களுக்கு அரசிடம் நம்பிக்கைகள் வலுவடையும். இதைக் கருதி தான்ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்திற்கென தனிக் கொள்கையை இந்தியாவிலேயே முதல் முதலில் வகுத்தது தமிழகம். அதனடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள் காரணமாக தமிழகம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பாராட்டத்தக்க அளவில்முன்னேற்றம் கண்டு வருகிறது.
மென்பொருள் (சாப்ட்வேர்) தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை 96 மே அளவில் 34 மட்டுமே இருந்தன. தற்போது 600க்குமேல் உயர்ந்துள்ளன. அதே ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட மென்பொருள்களின் மதிப்பு 37 கோடி ரூபாய் அளவில் தான்.ஆனால், தற்போது 52 மடங்கு பெருகி 1,914 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
மின்னணு ஆளுமையான அடிப்படைக் கட்டமைப்பாக இணையங்கள் விளங்கிட வேண்டும். அதற்கேற்ற வகையில்நிர்வாகத்தின் ஒவ்வொரு முனையிலும் உகந்த வலைதளம் உருவாக்கப்பட வேண்டும்.
இப்படி வலைத் தளங்கள் உருவாக்கப்படும்போது துறையின் கண்ணோட்டத்தோடன்றி, பொதுமக்களின் தேவைகளை அறிந்துஅவர் தம் கண்ணோட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை தொடர்ந்து நவீனப்படுத்த வேண்டும்.
ஈ-மெயில் என்பது மிகச் சிறந்த மின்னணு சாதனம் என்பதால் அரசு அலுவலர்கள் எல்லா நிலைகளிலும் அதை தொடர்ந்துபயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது "காகிதம் இல்லா நடைமுறை கைவசப்படும்.
ஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒரு நடவடிக்கையை தேர்ந்தெடுத்து அதில் இந்த காகிதம் இல்லா நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications