சென்னையில் குற்றங்கள் குறைகின்றன: கமிஷ்னர்
சென்னை:
நாட்டின் பிற பெரு நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளன என்று சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையில் சமீபத்திய ஆண்டுகளை விட இந்த ஆண்டு நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 1997 ம் ஆண்டு 3,900 குற்றங்கள் நடந்தன.2000 மாவது ஆண்டில் 3,029 குற்றங்கள் தான் நடந்துள்ளன.
ஆனால், மும்பையில் கடந்த ஆண்டு 15,000 குற்றங்கள் நடந்துள்ளன. டெல்லியில் 40,000மும், பெங்களூரில் 11,000மும் நடந்துள்ளன. அந்த நகரங்களைக்கணக்கில் கொண்டு பார்க்கும் போது சென்னையில் நடந்த குற்றங்கள் மிகவும் குறைவு தான்.
மற்ற நகரங்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது சென்னையில் அமைதி நிலவுகிறது. ஆனால் சில பத்திரிக்கைகள் பல படங்களைப் போட்டு குற்றங்கள்அதிகமாக நடப்பதாக பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றன.
கடந்த வருடம் நடந்த 82 குற்றங்களில் குற்றவாளிகள் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 50 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
முன்னதாக, குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ 56 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், தொலைக்காட்சிகள், இரண்டு சக்கரவாகனங்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் பல பொருட்களை ஒப்படைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications