தி.மு.க கூட்டணி: 5 நாட்களில் தொகுதிப் பங்கீடு முடியும்
சென்னை:
தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அடுத்த 5 நாட்களில் முடிவடையும் என்று சுகாதாரத்துறை அமைச்சரும், தி.மு.கதேர்தல் குழு தலைவருமான ஆற்காடு வீராசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்தான முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதிஅனைத்து கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்து விட்டுப் பிறகு எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்பதுகுறித்துத் தெரிவிப்பார்.
பா.ஜ.க தங்களுக்கு 62 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று பா.ஜ.கவற்புறுத்தவில்லை. அவர்களால் 62 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்தான் கண்டறிந்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி, பா.ஜ.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு பா.ஜ.க வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்துக் கூறுவார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க இரண்டாவது மிகப்பெரிய கட்சியா? இல்லையா? என்பதை முதல்வர் கருணாநிதிதான் தீர்மானிக்க வேண்டும்.
தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தி.மு.க வுக்கும் பா.ஜ.க வுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் ஏற்படாது என்று மத்திய விளையாட்டுத்துறைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தி.மு.க, பா.ஜ.க வை மிகவும் நேசிக்கிறது. அதனால் தொகுதிகள் பங்கீடு செய்து கொள்வதில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வுக்கு ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே தி.மு.க தெரிவித்துள்ளது.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்த பா.ஜ.க அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்து விட்டதால் இந்தத் தொகுதியில் நாடாளுமன்றஇடைத்தேர்தல் நடக்கிறது.
பா.ஜ.க வுக்கு பாண்டிச்சேரியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்தும் தி.மு.க மற்றும் பா.ஜ.க தேர்தல் குழு உறுப்பினர்கள் ஆலோசனைநடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க பாண்டிச்சேரி பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் ரகுசுந்தர் ராமன் ஆகியோர்பங்கேற்றனர்.
மேலும் எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனுடன் தொகுதிப் பங்கீடு குறித்து வெள்ளிக்கிழமை மாலை விவாதிக்கப்படும். விடுதலைசிறுத்தைகள் அமைப்பு, புதிய தமிழகம், திருநாவுக்கரசு தலைமையிலான எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துசனிக்கிழமை ஆலோசிக்கப்படும்.
வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ஜ.க வில் சேர்வது குறித்து எனக்கு தெளிவான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் பா.ஜ.க வில் சேர்வதுகுறித்து பத்திரிக்கைகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்றார் ஆற்காடு வீராசாமி.
முன்னதாக, தொண்டர் காங்கிரஸ் என்ற புதிய கட்சி தொடங்கிய தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முதல்வர் கருணாநிதியை அவரதுகோபாலபுரம் வீட்டில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகக் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications