வாஜ்பாய் அரசை கவிழ்க்க சதி: பங்காரு லட்சுமணன்
டெல்லி:
வாஜ்பாய் அரசை கவிழ்க்க தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் தெகல்கா டாட் காம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆயுத பேர ஊழல் எனக்கூறுகிறார் பதவி விலகிய பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன்.
ஆயுத பேர ஊழலில் முன்னாள் பா.ஜ.க.தலைவர் பங்காரு லட்சுமணன் ஒரு லட்ச ரூபாய் வாங்கியதாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது தெகல்காடாட் காம் நிறுவனம்.
லண்டன் வியாபாரிகள் எனக் கூறிக் கொண்ட தெகல்கா நிருபர்களிடம் இருந்து லட்சுமணன் பணத்தை பெற்று தனது அலுவலகத்தின் மேசை டிராயரில்வைப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது.
இந்த ஆதாரங்கள் வெளியானவுடன் பதவி விலகிய லட்சுமணன் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்த தகவல்கள்:
வாஜ்பாய் அரசை கவிழ்க்க ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதி தான் கடந்த வாரம் வெளியான ஆயுத பேரஊழல்.
பா.ஜ.க. கட்சியின் தலைவராக ஒரு தலித் இருப்பதை பலர் விரும்பவில்லை. நான் பா.ஜ.க.வின் தலைவரானதால், தலித்துகள், பழங்குடியின மக்கள்மற்றும் சிறுபான்மை இனத்தினர் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கினர். இதனால் காங்கிரஸ் கட்சி கலக்கம் ஏற்பட்டது.
லண்டனை சேர்ந்த நிறுவனம் அளித்த பணத்தை பெற்றுக் கொண்டது உண்மை. ஆனால், அது கட்சிக்கு அளிக்கப்பட்ட நிதி. அப்பணம் கட்சியின் கணக்கில்சேர்க்கப்பட்டு விட்டது.
பணத்தை அளித்த அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆயுத பேரம் குறித்து பேசவில்லை.
பல்வேறு நாடுகளில் செயல்படும் தங்கள் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு, மின்துறை போன்ற அடிப்படை கட்டமைப்பு துறைகளில் 50 மில்லியன்டாலர்கள் வரை முதலீடு செய்ய விரும்புகிறது.
ஆளும் கட்சியின் தலைவரான நீங்கள் இதற்கு உதவ வேண்டும் என கேட்டனர். பாதுகாப்புத்துறை ஆயுதங்களை அவர்கள் தயாரிப்பதாக தெரிவித்தபோதிலும் அது குறித்து எதுவும் பேசவில்லை.
தேர்தல் வருவதால் தங்கள் நிறுவனம் ஆளும் கட்சிக்கு மேலும் நிதி வழங்க விரும்புகிறது. வெளிநாட்டு நிறுவனம் என்பதால் அவற்றைடாலராகத்தான் வழங்க முடியும் என அவர்கள் தான் கூறினர். நானாக டாலர்களை அளிக்குமாறு கோரவில்லை.
வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதால் அவர்கள் சந்திக்க வேண்டிய இந்திய அதிகாரிகள் பற்றி தெரிவித்த போது பிரஜேஸ்மிஸ்ராவின் பெயரும் தெரிவிக்கப்பட்டது. ஆயுத பேரத்திற்காக தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்க கோரவில்லை.
பா.ஜ.க.தலைவர் பதவியில் இருந்து விலக யாரும் நெருக்குதல் தரவில்லை. முதலில் ஆயுத பேரத்தில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு வந்த போதுஅதற்காக பதவி விலக மாட்டேன் என கூறினேன்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் மத்திய அரசிற்கு ஏற்படக் கூடிய தர்மசங்கடத்தை தவிர்க்கவே பதவி விலகினேன் என தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!