விடைபெறுகிறேன், இப்படிக்கு உங்கள் 3D கிரிக்கெட்டர்! ஐபிஎல் தொடரில் இருந்து விஜய் சங்கர் திடீர் ஓய்வு
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆல்-ரவுண்டரும், 2019 இந்திய உலகக் கோப்பை அணியின் நட்சத்திர வீரருமான விஜய் சங்கர், அனைத்து விதமான இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் சங்கர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான உருக்கமான அறிக்கையில், கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த கடிதத்தின் முடிவில் "இப்படிக்கு உங்கள் 3D கிரிக்கெட்டர், விஜய் சங்கர்" என்று அவர் குறிப்பிட்டு விடைபெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. எனது 10 வயதில் விளையாடத் தொடங்கினேன். 25 ஆண்டுகள் கழித்து, கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும், நாட்டின் உயரிய சூழலிலும் விளையாடியதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
இனி உலக அளவில் கிடைக்கக் கூடிய மற்ற புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்தி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். பிசிசிஐ, இந்திய அணி மற்றும் எனக்கு ஆதரவளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தபோது, நட்சத்திர வீரர் அம்பதி ராயுடுவை விடுத்து விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அப்போதைய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், "விஜய் சங்கர் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று பரிமாணங்களிலும் அசத்தக்கூடியவர்" என்று பாராட்டினார். அதுமுதல் விஜய் சங்கர் '3D கிரிக்கெட்டர்' என்றே அழைக்கப்பட்டார். இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணியின் தூணாக விளங்கினார்.
விஜய் சங்கரின் தலைமையில் தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே டிராபி, தேவ்தர் டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி ஆகிய மூன்று முக்கிய உள்நாட்டு கோப்பைகளையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. கடந்த சீசனில் அவர் திரிபுரா அணிக்காக விளையாடினார். "என் வாழ்க்கையில் கற்பனைக்கு எட்டாத அளவு வெறுப்பையும், எதிர்மறையான விமர்சனங்களையும் நான் எதிர்கொண்டேன்.
ஆனால் அவற்றை நான் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு, என் உழைப்பில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறினேன். என்னால் அதைச் செய்ய முடிந்தது என்றால், உங்களாலும் முடியும். நேர்மறையாகச் சிந்தித்து கடினமாக உழையுங்கள் என்று ரசிகர்களுக்குப் பாசிட்டிவ் மெசேஜ் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் 2022-ல் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், இனி வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாடத் திட்டமிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் விஜய் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications