"பதவியற்றுப் போனாலும் நீ நீதான் ....
சென்னை:
சென்னையில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான்,வைரமுத்து ஆகியோர் கவிதைகள் இடம்பெற்றன. வைரமுத்துவின் சூழ்நிலைக்கேற்ற கவிதை அரங்கில்கூடியிருந்தோரைக் கவர்ந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஞாயிற்றுக்கிழமை 78-வது பிறந்த நாள். இதையொட்டி சனிக்கிழமை முதலேதி.மு.க.வினர் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சனிக்கிழமை கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கிற்குத் தலைமைவகித்த கவிஞர் அப்துல் ரகுமான் பாடிய கவிதை:
தேர்தலில் நட்சத்திரமும்
சூரியனும் போட்டியிட்டு
பெரும்பான்மை பலம் பெற்று
நட்சத்திரம் ஜொலித்தது
சூரியன் தோற்றது
நட்சத்திரம் அரசு அமைத்தது
பரிதி சிறையில் அடைபட்டது
இருள் அரசாங்கத்தின்
கொள்கையான துக்கம்
தேசிய தொழிலாக அறிவிக்கப்பட்டது
தாலாட்டு நாட்டுப்புற
பாடலாக்கப்பட்டது
தீபங்களின் நாக்குகள் துண்டிக்கப்பட்டன
சூரியகாந்தி பூ
நட்சத்திர காந்தி
என பெயரிடப்பட்டது
அரசின் முதல் சாதனை
பாலும், தலையணையும்
இலவசமாக தரப்பட்டது
கன்னக் கோல்கள்
கொண்டாட்டமாயின
மக்கள் எப்போதும்
யாரையாவது எதிர்த்து
வாக்களிப்பார்கள்
இப்போதோ தங்களுக்கு
எதிராக தாங்களே
வாக்களித்துக் கொண்டனர்
அதனால்
பாண்டவர்கள் தோற்றனர்
கெளரவர்கள் வென்றனர்
வானிலை அறிக்கை
சூரியனுக்கு அஸ்தமனமே
பூமி மறுபடியும் சுழலும்
சூரியன் மீண்டும் தோன்றும்.


Click it and Unblock the Notifications
