சுதந்திர தினம்: நாடு முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு
டெல்லி:
புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், நாகா-உல்பா தீவிரவாதிகளின் மிரட்டல், உள்ளூர் தீவிரவாதிகளின் அதிரடித் தாக்குதல்கள் என்றுஅனைத்துப் பகுதிகளிலும் இருந்து பிரச்சனைகள் வரும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மட்டும் சுமார் 80,000 பேர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வாஜ்பாய் கொடியேற்றிய பிறகு, சுதந்திர தினவிழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்குப் பிறகே, மீண்டும் செங்கோட்டை பொதுமக்களுக்காகத் திறந்து விடப்படும்.
இதற்கிடையே, பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைக்கிறார். தமிழகத்தில், கருணாநிதி கைது செய்யப்பட்டசம்பவத்திலிருந்தே, போலீசாரை நினைத்து திமுகவினரும், அரசியல் கட்சிகளை நினைத்து பொதுமக்களும் பெரும் பயத்துடன் தான் உலவி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திமுக பேரணியின்போது நடந்த வன்முறைச் சம்பவமும் மக்களின் அச்ச உணர்வை மேலும் தூண்டியுள்ளது. இருந்தாலும்,போலீசார் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் விதமாக, "சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை"யைத் தமிழக போலீசார் செவ்வாய்க்கிழமை சென்னையில்நடத்தினர்.
9 பிரிவுகளாக நடந்த இந்தப் போலீஸ் அணிவகுப்பில், கடலோரக் காவற்படையினரும், கடற்படையினரும் கூட அணிவகுத்துச் சென்றனர். தமிழக டிஜிபியான ஏ.ரவீந்திரநாத், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.


Click it and Unblock the Notifications
