தாமரைக்கனிக்கு நஷ்ட ஈடு வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
போலீஸ் தாக்குதலில் படுகாயமடைந்த தாமரைக்கனிக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று மனிதஉரிமை கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவுக்கு மேல் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய திமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான தாமரைக்கனியும் அடித்து உதைத்து இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் முன், போலீசார் அவரை மிருகத்தனமாகத் தாக்கியதில் அவருடைய இடது கால் எலும்பு முறிந்து,இடுப்பிலும் காயம் ஏற்பட்டது. மேலும் அவருடைய உடலின் பல பாகங்களில் பயங்கரமான காயங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக மனித உரிமைக் கமிஷனிடம் தாமரைக்கனி புகார் கொடுத்திருந்தார். அதை விசாரித்தஅக்கமிஷன், அவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தாமரைக்கனியைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் முருகேசனின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துஇத்தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் மனித உரிமைக் கமிஷன் கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில் அவர்கூறியதாவது:
சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தாமரைக்கனியை நாங்கள் கைது செய்தோம். அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதுஉண்மைதான். ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மனித உரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைக் கமிஷனுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம்மட்டுமே உள்ளது. நஷ்ட ஈடு கொடுக்குமாறு உத்தரவிட அந்தச் சட்டத்தில் எந்தவிதமான அதிகாரமும்அளிக்கப்பட்டிருக்கவில்லை.
தமிழக மனித உரிமைக் கமிஷன் தன்னுடைய வரம்பை மீறிச் செயல்பட்டு வருகிறது.
எனவே தாமரைக்கனிக்கு நஷ்ட ஈடு கொடுக்க தமிழக மனித உரிமைக் கமிஷன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்குத் தடை விதிக்கவும் வேண்டும் என்று முருகேசன் அம்மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், தாமரைக்கனிக்கு நஷ்ட ஈடு கொடுக்க தமிழக மனிதஉரிமைக் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications