வேலூர் சிறையில் வைகோவை சந்தித்தார் ராமதாஸ்
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று காலை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார்.
வைகோ சிறை சென்ற பின் அவரை முதன் முறையாக சிறையில் சென்று சந்தித்த ராமதாஸ் அவருடன் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் பொடா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் பழிவாங்கும் விதமாகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சிறையில் உள்ள வைகோ தனக்காக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று என்னிடம் கூறினார் என்றார் ராமதாஸ்.
பொடா சட்டத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது தொடர்பாக எனக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று ராமதாஸ் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications
