தமிழகம் என்ன சாக்கடையா? கர்நாடகத்துக்கு ஜெயலலிதா கேள்வி
டெல்லி:
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து மோசடி செய்து வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
நேற்று நான் அவசரப்பட்டு காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் எனக்கு கொஞ்சமும் பொறுமை இல்லைஎன்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை இன்று தலையங்கம் எழுதியுள்ளது. அவர்களுக்கு அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்றவிவரம் தெரியாததால் அப்படி எழுதியுள்ளார்கள்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு பலன் கிடைக்காததால் தான் எழுந்து வெளியே வந்தேன்.
1998ம் ஆண்டு பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம் உருவாக்கப்பட்டதில் இருந்தே அந்த அமைப்பினால் கர்நாடகத்துக்குஎந்த உத்தரவும் பிறப்பிக்க முடியவில்லை. காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பை இந்த ஆணையத்தாலும்,கண்காணிப்புக் குழுவாலும் அமலாக்க முடியவில்லை.
உருவாக்கப்பட்டதில் இருந்து இந்த ஆணைமே 4 முறை தான் கூடியுள்ளது. அதில் ஒன்று நேற்று நடந்த கூட்டம். இதற்கு முன் நடந்த 3கூட்டங்களிலும் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இதனால் தான் இனி ஆணையத்தையும் நடுவர் மன்றத்தையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்தோம். எங்களுக்கு நியாயம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் நேற்றைய ஆணையக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன்.
இந்தக் கூட்டத்துக்கு வந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக் கூடாது என்ற முடிவுடன் தான் வந்திருந்தார்என்பது அவரது பேச்சின் மூலம் தெரியவந்தது.
காவிரியின் குறுக்கே உள்ள கர்நாடகத்தின் 4 அணைக்கட்டுக்களிலும் 78 டி.எம்.சி. நீர் உள்ளது. தமிழத்துக்கு கர்நாடகம் இன்னும் தரவேண்டிய மிச்சமுள்ள நீர் 43.14 டி.எம்.சி. இதனால் தமிழகத்துக்கு நீரைத் தருமாறு நான் நேற்று நடந்த கூட்டத்தில் கூறினேன்.
ஆனால், இதை ஏற்க முடியாது என கிருஷ்ணா கூறினார். அப்போது பேசிய பிரதமர் வாஜ்பாயும், நீர் வளத்துறை அமைச்சரும்தமிழகத்துக்குத் தண்ணீர் தருமாறு கிருஷ்ணாவிடம் பல முறை கூறினர். ஆனால், அவர் ஒத்துக் கொள்ள மறுத்தார்.
இதனால், எங்களுக்கு 43 டி.எம்.சி. தர வேண்டாம். 30 டி.எம்.சியாவது கொடுங்கள். இதன் மூலம் மிச்சம் மீதி இருக்கும் குறுவைப் பயிரைக்காப்பாற்றிக் கொள்கிறோம், சம்பா நெல் சாகுபடியையாவது துவக்குகிறோம் என்று சொன்னேன். இதை பிரதமரும் மத்திய நீர்வளத்துறைஅமைச்சரும் ஏற்றனர்.
தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. நீரைத் தந்து நெற் பயிர்களை காப்பாற்றுமாறு கூறினர். ஆனால், 30 டி.எம்.சி. நீரையும் கூடத் தர முடியாது என்றுபிடிவாதமாகச் சொன்னார் கிருஷ்ணா.
இதையடுத்து எவ்வளவு நீர் தான் தரத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். பிரதமரும் அதையே கேட்டோர். எவ்வளவு தண்ணீர் தரத்தயாராக இருக்கிறீர்கள் என்று நீங்களே சொல்லுங்கள் என்று வாஜ்பாயும் கேட்டார்.
ஆனால், தமிழகத்துக்கு இப்போதைக்கு கொஞ்சம் கூட நீரைத் தரும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று பதில் சொன்னார் கிருஷ்ணா.செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் யோசிக்கலாம் என்றார்.
ஆனால், நீரைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக செம்பம்பர் 2ம் தேதி நாம் உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற உத்தரவு உள்ளதே என்று சுட்டிக் காட்டினேன்.
உச்ச நீதிமன்றத்துக்கு பதில் தர வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை என்று அலட்சியமாக பதில் தந்தார் கிருஷ்ணா. உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி நடந்த ஒரு கூட்டத்திலேயே உச்ச நீதிமன்றத்துக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டியதில்லை என்று கிருஷ்ணா பேசினார்.
இதனால், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்ற முடிவுடன் தான் அவர் இந்தக் கூட்டத்துக்கே வந்திருப்பதை உணர முடிந்தது.நீதிமன்ற உத்தரவுக்கே கட்டுப்பட மறுக்கும் அவருடன் இனியும் வீணாக பேச விரும்பாததால் நான் வெளியேறினேன்.
தமிழகத்தின் நீர் பிரச்சனையில் கர்நாடகம் கடந்த 1991ம் ஆண்டிலிருந்தே இது போல அலட்சியமாகத் தான் செயல்பட்டு வருகிறது.இப்போது உச்ச நீதிமன்றத்தைத் தான் நாங்கள் நம்பியிருக்கிறோம்.
நதிகள் அனைத்தையும் குறிப்பாக மாநிலங்ளுக்கு இடையே நதிகளை உடனடியாக தேசியமயமாக்க வேண்டும். இது மிக மிக அவசியம்.
இரு வாரத்தில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக ஒரு புதிய பார்முலாவை உருவாக்குவதாக ஆணையக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது குறித்து எனக்குத் தெரியாது. நான் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு குறித்து என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
எப்போதெல்லாம் கர்நாடக அணைகள் நிரம்புகின்றவோ அப்போதெல்லாம் சாக்கடையில் திறந்துவிடுவது மாதிரி தான் தமிழகத்துக்குதண்ணீர் விடுகிறார்கள். நடுவர் மன்றம் சொன்ன உத்தரவுப்படி தமிழக்ததுக்கு உரிய நீரை கர்நாடகம் வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
இப்போது 30 டி.எம்.சி. நீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் கூறிவிட்டதால் கொஞ்ச நஞ்சம் தப்பியிருந்த குறுவைப் நெல் பயிர்களும்வாடப் போகின்றன. சம்பா நெல் உற்பத்தியையும் கூட நாங்கள் தொடங்க முடியாது.
கர்நாடகம் இதுபோல தமிழக விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டாலும் நாகப்பா கடத்தல் விவகாரத்தில் தமிழகம் அலட்சியமாகஇருக்காது. இந்த விவகாரத்தில நாங்கள் தீவிரமாக செயல்பட்டு அவரை மீட்க உதவுவோம். இந்த இரு பிரச்சனைகளையும் ஒன்றுடன் ஒன்றுஇணைத்துப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications