பாண்டிச்சேரியில் பால், ரொட்டி சாப்பிட்டதில் விபரீதம்: நகரில் பீதி, பதற்றம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேயில் இலவச காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பால் மற்றும் ரொட்டியை சாப்பிட்ட ஆறு பள்ளிகளைச் சேர்ந்த1,975 பள்ளி மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.பலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.
இதில் 5 மாணவர்களின் நிலை மோசமாக உள்ளதாகத் தெரிகிறது.
இதனால் பாண்டிச்சேரி நகர் முழுவதும் பெரும் பீதியும் பரபரப்பும் நிலவுகிறது.
பாண்டிச்சேரி அரசு சமீபத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பிரட், பால் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இன்று காலைவழக்கம்போல் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள காமராஜர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பால், ரொட்டிவழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 250க்கும் மேற்பட்ட மாணவர்களும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இது குறித்த செய்தி நகரில் பரவிக் கொண்டிருந்த நேரத்தில் நகரின் வேறு 5 பள்ளிகளிலும் மாணவர்களும் மாணவிகளும் மயங்கி விழுவதுதெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பள்ளிகளை நோக்கி ஓடினர்.
செய்வதறியாது திகைத்த ஆசிரியர்கள் போலீசார் உதவியுடன் வேன், ஜீப்கள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் கார், லாரிகளில் இந்தக்குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு எடுத்துக் கொண்டு ஓடினர். பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவர்கள் கொண்டுவரப்பட்டதால் அரசு ஜிப்மர் மருத்துவமனை நிரம்பி வழிந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனைகளுக்குக் குழந்தைகள் எடுத்துச் செல்லப்பட்டனர்.
பால் அல்லது ரொட்டி கெட்டுப் போய் விஷயமானதால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பால் மீதுதான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் முதல்வர் ரங்கசாமியும் மருத்துவமனைகளுக்கு விரைந்தார். காலை உணவுத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய உத்தரவிட்டார். சம்பவத்துக்குக் காரணமான உணவுப் பொருள்களை வினியோகம் செய்த நிறுவனம் மீது விசாரணை நடத்தவும்கலெக்டர் அன்பரசுவுக்கு உத்தரவிட்டார்.
காலையில் தரப்பட்ட பால் மற்றும் ரொட்டிகளை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்ட பல குழந்தைகளுக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பிற்பகலில் மாணவர்கள் உடல் நிலை தேறியதையடுத்து அவர்கள்வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், 5 பேரின் நிலைமை மோசமாக உள்ளதால் அவர்கள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சரியான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. ஆனால்,குறைந்தபட்சம் 1000 குழந்தைகளாவது பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பாண்டிச்சேரியின் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.
பள்ளிகளுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளில் பெரும் ஊழல் நடந்து வருவதாகத் தெரிகிறது. இந்த பாக்கெட்டுகளில் எந்தநிறுவனத்தின் பெயரும் இல்லை, அதை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை. இதை ஆளும் கட்சிக்கு ஆதரவானஏதோ ஒரு கும்பல் தான் சப்ளை செய்து வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications