நெடுமாறனுக்கு 28ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சிறைக் காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி இரவு நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, அவர்சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நெடுமாறனை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நெடுமாறனின் வழக்கறிஞர், கடலூரிலிருந்து அவரைக் கொண்டு வந்த வேன் வசதிகுறைவாக இருப்பதாக நீதிபதியிடம் குறிப்பிட்டார்.
உடனே அந்த வேனை நேரில் பார்வையிட்ட நீதிபதி ராஜேந்திரன், கடலூருக்கு நெடுமாறனைக் கொண்டுசெல்லும் போது நல்ல வேனைப் பயன்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வேறொரு வேனில் நெடுமாறன் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
வரும் 29ம் தேதியுடன் நெடுமாறன் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமலும் விசாரணை இல்லாமலும் ஒருவரை தொடர்ந்து 90 நாட்கள்வரை மட்டுமே சிறையில் வைக்க முடியும்.
இதற்கிடையே இன்று பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர்சுப. வீரபாண்டியன் மற்றும் பாவாணன் ஆகியோர் உள்பட மூன்று பேரை அடுத்த மாதம் 12ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications