செக்ஸ், வன்முறையை தூண்டும் திரைப்பட காட்சிகளுக்கு தமிழக அரசு தடை
சென்னை:
பெண்களைக் கேலி செய்யும் மற்றும் பாலியல் பலாத்கார காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தியேட்டர்களில் பல ஆண்டுகளாக விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. சென்ஸார் போர்டு சான்றிதழ் இல்லாத படங்களைத் திரையிடுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. பல தியேட்டர்களில் இந்த சான்றிதழைக் காட்டுவதே இல்லை.
இன்னும் பல தியேட்டர்களில், சென்ஸார் போர்டு "கட்" செய்த பல "செக்ஸ்" காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் (எப்படித்தான் பிலிம் ரோலில்வந்து "மாட்டிக் கொண்டதோ"?) படு அப்பட்டமாக ஓடிக் கொண்டிருக்கும்.
இதுகுறித்து பல புகார்கள் வரத் தொடங்கியதையடுத்து இது போன்ற சம்பவங்களுக்கக் கடிவாளம் போட தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சமீபத்தில் இது தொடர்பான சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.அவற்றின் விவரம்:
- சென்ஸார் போர்டு சான்றிதழ் அளித்த திரைப்படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிட வேண்டும்.
- சென்ஸார் போர்டால் நீக்கப்பட்ட செக்ஸ் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் ஆகியவற்றைத் திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் இந்தியத் தண்டனைச் சட்டம் 292(2)வது பிரிவின் படி குறிப்பிட்ட அந்தத் தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
- பெண்களைக் கேலி செய்யும் காட்சிகளையோ, அவர்கள் வன்முறையாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளையோ திரையிடும் தியேட்டர்களின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். "யுஏ" அல்லது "ஏ" என்று குறிப்பிடப்படாத விளம்பரங்களோ போஸ்டர்களோ எங்கும் ஒட்டப்பட்டிருக்கக் கூடாது.
- "அடல்ட்ஸ் ஒன்லி" படங்களுக்கு சிறுவர்-சிறுமிகளை அனுமதிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- சென்ஸார் சான்றிதழ் அளிக்கப்படாத படங்கள் டி.விக்களிலும் திரையிடப்படக் கூடாது. தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்துத் தடைகளும் டிவிக்களுக்கம் பொருந்தும்.












Click it and Unblock the Notifications