புலிகள்-இலங்கை பேச்சுவார்த்தை ஐரோப்பாவுக்கு மாற்றம்
கொழும்பு:
ஆண்டன் பாலசிங்கத்தின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு புலிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே அடுத்தமாதம் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.
இதுவரை 4 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதில் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்தது. மற்ற 3சுற்றுப் பேச்சுக்களும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தன.
சிறுநீரகக் கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை எடுத்து வரும் ஆண்டன் பாலசிங்கத்தால் அடிக்கடி நெடுந் தொலைவு பறக்க இயலவில்லை.ஒவ்வொரு முறையும் லண்டனில் இருந்து அவர் பாங்காக் வர மிகவும் சிரமப்படுகிறார்.
இதனால் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை பாங்காக்கில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகளை லண்டனுக்குஅருகிலேயே உள்ள ஏதாவது ஒரு நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நார்வேக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனைத்தெரிவித்தன.
பாலசிங்கம் வசித்தாலும் இங்கிலாந்தில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு பேச்சு நடத்த இயலாத நிலை உள்ளது.இதனால் வேறு ஒரு நாட்டில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும்.
எந்த நாட்டில் பேச்சுவார்த்தையை நடத்துவது என்பது குறித்து புலிகளும் அரசுப் பிரதிநிதிகளும் ஆலோசித்து வருவதாக நார்வேஅதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மார்ச்சில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 6வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை டோக்கியோவில் ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால்,பாலசிங்கத்தால் அங்கு பயணிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.


