இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சீட் கிடைக்காது: எல்லாமே இனி காசு தான்
சென்னை:
தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளவும்,பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றப் போவதில்லைஎன்றும் அறிவித்துள்ளன.
இதனால் தகுதி இருந்தும் பணம் தர முடியாத ஏழை மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி தனியார் கல்லூரிகளில் சீட்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்துமே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்கொண்டு வரப்பட்டுவிட்டன. இந் நிலையில் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 12,13ம்தேதிகளில் நுழைவுத் தேர்வு நடத்த உள்ளது.
இந்தத் தேர்வில் தனியார் கல்லூரிகளும் பங்கேற்கலாம் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்பாலகுருசாமி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதை தனியார் கல்லூரிகள் புறக்கணித்துள்ளன.
தங்கள் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க தாங்களே தனியார் நுழைவுத் தேர்வை நடத்தப் போவதாக தமிழகசுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கம் கூறியுள்ளது. சென்னையில் நடந்த இந்த சங்கத்தின் கூட்டத்தில் இம் முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நுழைவுத் தேர்வுகள்!!!
இதனால் பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர இந்த முறை இரண்டு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளுக்கு ஒருமுறையும் தனியார்கல்லூரிகளுக்கு இன்னொரு முறையும் தேர்வு எழுத வேண்டிய குழப்பமான நிலைக்கு மாணவர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தத் தனியார் கல்லூரிகள் தாங்களே இட ஒதுக்கீட்டை செய்து கொள்ள இருப்பதால் முடிந்தவரை எல்லாசீட்களையும் விற்கவே பார்ப்பார்கள். நல்ல மதிப்பெண் எடுத்த மாணவனைக் கூட கழித்துக் கட்டிவிட்டு பணம்தரும் மாணவருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள்.
இதனால் பணம் படைத்த பார்டர் மார்க் மாணவர்கள் எளிதாக பொறியியல் கல்லூரிகளில் சேருவார்கள். ஆனால்,நல்ல மார்க் வாங்கியும் வசதி இல்லாத மாணவர்கள் நிலை திண்டாட்டமாகும்.
90 சதவீத பொறியியல் கல்லூரிகள் தனியார்வசம் தான் உள்ளன. இதன் காரணமாக மீதமுள்ள 10 சதவீதக்கல்லூரிகளில் மட்டுமே நல்ல மார்க் எடுத்த ஏழை மாணவர்கள் சேர முடியும். இதனால் அரசுக் கல்லூரிகளில் இடம்பிடிக்க கடும் போட்டியும், பெரும் அடிதடியே நடக்கப் போகிறது.
ஏழை மாணவர்களுக்கு உதவுவார்களாம்...
இது குறித்து சங்கத் தலைவர் ஜேப்பியார் நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியே இம்முடிவுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்சேர்க்கையில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இருக்காது. இது தொடர்பாக அரசு எங்களுடன் பேச்சு நடத்தஅழைத்தால் நாங்கள் அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளிப்போம்.
மாணவர் சேர்க்கையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவி எங்களுக்குத் தேவையில்லை. நாங்களே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து கொள்வோம்.
பொருளாதார ரீதியிலான ஏழை மாணவ, மாணவிகளையும் நாங்களே தேர்வு செய்து அவர்களுடைய படிப்புக்குஉதவி செய்வோம். அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு முறையை நாங்கள் பின்பற்றப் போவதில்லை.
எங்கள் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடமிருந்து குறைந்த பட்சம் ரூ.35,000 கட்டணமாக வசூலிக்க முடிவுசெய்துள்ளோம். இது தற்போதைய "பேமண்ட் சீட்" கட்டணத்தை விடக் குறைவாக இருக்கும்.
மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விதிமுறைப்படி பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதுஎன்பதைப் பின்பற்றியே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இருந்தாலும், அந்த அந்தக் கல்லூரிகளின் தகுதிக்கேற்ப குறைந்தபட்ச மதிப்பெண் அளவு நிர்ணயிக்கப்படும். இந்தஆண்டு ஒரு இடம் கூடக் காலியாக இருக்கவிட மாட்டோம் என்றார் ஜேப்பியார்.
மாணவர்கள் பாடு திண்டாட்டம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்துவிடமுடியாது. எனவே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வையும் மாணவர்கள் எழுதியாகவேண்டும்.
பிளஸ் டூ பாஸ் செய்திருந்தாலே போதும், அவர்களை பி.இ, பி.டெக் வகுப்புகளில் சேர்ப்போம் என தனியார் கல்லூரிகள்அறிவித்துள்ளன. இதனால் இந்தமுறை முழுக்க முழுக்க பணம் தான் புகுந்து விளையாடப் போகிறது. பணம் கொடுத்தால் பார்டர்மார்க் மாணவர்கள் கூட என்ஜினியரிங்கில் சேர்க்கப்படுவார்கள்.
வசதி இல்லாத மாணவர்கள் நிலை தான் மிகவும் திண்டாட்டமாகப் போகிறது. அரசுக் கல்லூரிகளில் மட்டுமே நன்றாக படிக்கும்மாணவர்கள் தங்களுக்கு சீட்களை எதிர்பார்க்க முடியும். ஏழை மாணவர்களையும் சேர்த்து அவர்களின் கல்விக்கு உதவிசெய்வோம் என தனியார் கல்லூரி அதிபர்கள் கூறுவது சுத்தமான பூ சுற்றல் என்பது அவர்கள் இதுவரை கல்லூரிகளை நடத்திவரும் முறையைப் பார்த்தாலே புரியும்.
ராமதாஸ் கடும் எதிர்ப்பு:
மாணவர்களைத் தேர்வு செய்ய தாங்களாவே தேர்வு நடத்திக் கொள்ள தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தருவதை பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எதிர்த்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதன் மூலம் இட ஒதுக்கீடும், சமூக நீதிப்படி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதுஅடியாகும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு இனி சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும்.
சமூக நீதிக்கே பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த தனியார் கல்லூரிகளுக்கு அரசு கடிவாளம் போட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூ:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீட்டை ஒதுக்கிவிட்டுகட்டணத்தைக் கூட்டி மாணவர்களிடம் கொள்ளை அடிக்க தனியார் கல்லூரிகள் முயல்கின்றன என்று கூறியுள்ளார்.
-->


