மகாபலிபுரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மகாபலிபுரம் அருகே மாற்றும் திட்டத்தை அரசு கைவிட்டு விட்டது.சென்னை கடற்கரைச் சாலையிலேயே அடுத்த 2 ஆண்டுகளுக்குள் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தலைமைச் செயலகம் மகாபலிபுரம் அருகே மாற்றியமைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.மலேசிய அரசின் உதவியுடன் அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள்கிளம்பின.
இந்நிலையில் மகாபலிபுரம் அருகே தமிழக அரசின் நிர்வாக நகரத்தை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா இன்று கூறினார். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து இன்று தமிழகசட்டசபையில் அவர் பேசுகையில்,
மலேசியாவின் உதவியுடன் மகாபலிபுரம் அருகே தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசுதிட்டமிட்டது.
ஆனால் இது தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் என்றுதெரிய வந்துள்ளது. எனவே இந்தத் திட்டத்தைக் கைவிடுவது என்று அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை கடற்கரைச் சாலையிலேயே தலைமைச் செயலகத்தின் புதிய கட்டடம் கட்டப்படும். ராணி மேரி கல்லூரிமற்றும் விவேகானந்தா இல்லம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடத்தில் தலைமைச் செயலகம்அமைக்கப்படவுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து புதிய தலைமைச் செயலகம் அங்குதயாராகி விடும். பெங்களூரில் உள்ள கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான் செளதாவை விட இந்தக்கட்டடம் அழகாகவே இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார்.


