சேது சமுத்திரத் திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு, இலங்கை முயற்சி: வைகோ புகார்
வேலூர்:
இலங்கை அரசின் நிர்பந்தம் காரணமாக தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெரும் வளம் அளிக்கும் சேது சமுத்திரம் திட்டத்தில் மாற்றம்கொண்டு வர மத்திய அரசு முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இத் திட்டத்தை நிறுத்தத் தான்ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே பாலம் கட்ட இலங்கை முயல்வதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:
இந்தியாவின் கிழக்குக் கடல் பகுதியில் இருந்து வரும் கப்பல்கள் வளைகுடா உள்ளிட்ட மேற்குக் கடல் பகுதிக்குச் செல்ல இலங்கையைச்சுற்றிக் கொண்டு தான் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரினோம்.
இத் திட்டத்தின்படி இலங்கை- தமிழகத்துக்கு இடையிலான கடல் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்லும் அளவுக்கு ஒரு பகுதியைஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இத் திட்டம் நிறைவேறினால் தனது வர்த்தகம் பாதிக்கப்படும் என்று இலங்கைகருதுகிறது.
சேது சமுத்திரக் கால்வாய் வெட்டப்பட்டுவிட்டால் பெரிய கப்பல்கள் இலங்கையை சுற்ற வேண்டிய அவசியம் இருக்காது. அதன்பிறகுபன்னாட்டு கப்பல்கள் தமிழக துறைமுகங்களுக்குத் தான் பொருள்களை இறக்கி- ஏற்றவும், எரிபொருள் நிரப்பவும் வரும். இதனால் அந்தகப்பல் நிறுவனங்களுக்கு பணம் மிச்சப்படும். அதே நேரத்தில் தமிழகம் பெரிய சந்தையாக மாறும்.
இதனால் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைக்க இலங்கை சதிசெய்கிறது. கால்வாயை சிறியதாக வெட்டுமாறு மத்தியஅரசை இலங்கை வற்புறுத்துகிறது. இதனால் சிறிய கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக தமிழக துறைமுகங்களுக்கு வர முடியும். பெரியகப்பல்கள் தொடர்ந்து கொழும்புவுக்கே செல்லும் நிலை ஏற்படும்.
இலங்கையின் இந்த வற்புறுத்தலை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சேது சமுத்திரக் கால்வாயை சிறியதாகஅமைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இது போதாது என்று சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தையே முறியடிக்கத் தான் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம்கட்டப் போவதாகவும் இலங்கை அறிவித்துள்ளது. இந்தப் பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மத்திய அரசும் ஆரம்பித்துள்ளது.இது தமிழக மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.
இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அந்தப் பாலத்திற்கு அனுமன் பாலம் என்று பெயரிடப் போவதாகவும் இலங்கை கூறியுள்ளது.
இந்தப் பாலம் கட்டப்பட்டால் சிறிய கப்பல் கிழக்குக் கரைகயில் இருந்து மேற்குக கடல் பகுதிக்குள் செல்ல முடியாது. இலங்கையை சுற்றிக்கொண்டு தான் செல்ல முடியும். இதனால் எந்தக் கப்பலும் தமிழக கடல் பகுதிக்கு வராது. எல்லாமே கொழும்பு துறைமுகத்துக்குத் தான்செல்லும்.
இதனால் தமிழகத்திற்கு மிகப் பெரிய, நிரந்தர பாதிப்பு ஏற்படும். எனவே இலங்கை அரசின் இந்தச் சதிச் செயலுக்கு இந்தியா அடிபணிந்துவிடக் கூடாது. இந்திய அதிகாரிகள் சிலரும் இலங்கை சதிக்கு உடந்தையாகவே தெரிகிறது. இதன்மூலம் 140 ஆண்டு கால தமிழக மக்களின்கனவில் இடி விழச் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
1999ம் ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் சேது சமுத்திரத் திட்டத்தைக் குறிப்பிட்ட மத்திய அரசு பின்னர் அதை மறந்துவிட்டது. அடுத்தடுத்தபட்ஜெட்டுகளில் இத் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
எனவே பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட்டு சேது சமுத்திரத் திட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அக் கடிதத்தில் வைகோகேட்டுக் கொண்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications