132 அடி உயர புகைக் கூண்டில் ஏறி மிரட்டிய தொழிலாளர்கள்
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தமிழ்நாடு ஸ்பான்ஞ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 7 முன்னாள்ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரியும், மூடப்பட்ட நிறுவனத்தை திறக்கக் கோரியும்,தொழிற்சாலையின் 132 அடி உயர புகைக் கூண்டில் ஏறி நின்று மிரட்டினர்.
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் இந்த நிறுவனம் சமீபத்தில் முன் மூடப்பட்டு விட்டது. அதில் வேலை பார்த்துவந்தவர்களும் நீக்கப்பட்டு விட்டனர். இந் நிலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டது.
இதையடுத்து நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பழைய தொழிலாளர்கள் நிறுவன வாயிலில் அமர்ந்து தொடர்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
நிறுவனத்தை தொடர்ந்து இயக்க வேண்டும், பழைய தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றுஅவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை நிர்வாகம் ஏற்க மறுத்தது.
இதையடுத்து அவர்களில் 7 பேர் நிறுவனத்தின் புகைக் கூண்டில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர்.தங்களுக்கு வேலை தரப்படாவிட்டால் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர்கள்எச்சரித்தனர்.
இதையடுத்து போலீஸார், தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் போலீசார் சமாதானம்பேசி கீழே வரவழைத்தனர்.
போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களின் நிலத்தைத்தான் இந்த தனியார் நிறுவனம் கடந்த 1992ம் ஆண்டுவிலைக்கு வாங்கி நிறுவனத்தை அமைத்தது. பின்னர் நிலம் தந்தவர்களுக்கு அங்கேயே வேலையும் கொடுத்தது.ஆனால் கடந்த 1998ம் ஆண்டு நஷ்டம் என்று கூறி நிறுவனத்தை மூடி விட்டார்கள்.
தற்போது கேரளாவிலிருந்து ஆட்களை கூட்டி வந்து வேலைக்கு அமர்த்தி வருவதாக பழைய தொழிலாளர்கள்கூறுகிறார்கள்.


