ரூ. 5,000 ஊதியம் வாங்கினால் இன்று முதல் ரேசன் கட்
சென்னை:
தமிழகத்தில் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் கெளரவ ரேஷன் கார்டு முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதனால் ரூ. 5,000 மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் வருமான வரி கட்டுவோர் ஆகியோருக்கு இன்று முதல் சர்க்கரை, அரிசி உள்பட ரேஷன் கடையில் எந்தப் பொருளும் வழங்கப்பட மாட்டாது.
ஒரு அடையாளத்துக்கான அட்டையாகவே இனி இதைப் பயன்படுத்த முடியும்.
இதனால் ரூ. 5,000க்கு மேல் சம்பளம் வாங்குவோர், வருமான வரி, விற்பனை வரி கட்டுவோர் ஆகியோர் தங்களது ரேஷன் கார்டுகளை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கொடுத்து அதை கெளரவ ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரேசன் கடைகளில் ஒரு சீலை வைத்து அதை கெளரவ அட்டையாக மாற்றித் தந்துவிடுவார்கள்.
இவ்வாறு ரேஷன் கார்டுகளை கெளரவ அட்டையாக மாற்றிக் கொள்ள இந்த மாத இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கெளரவ ரேஷன் கார்டுகள் மூலம் நேரடியாக பாதிக்கப்படப் போவது 40 லட்சம் நடுத்தர, கீழ் நடுத்தர குடும்பங்களாகும். இந்தக் குடும்பத்தினர் ரேசன கடைகளில் அரிசி வாங்காவிட்டாலும் சர்க்கரை, கோதுமை, ரவை போன்றவற்றையும் சோப்புகள் போன்றவற்றை வாங்கி வந்தனர்.
இதன் மூலம் ஓரளவுக்கு சமாளித்து குடும்பம் ஓட்ட முடிந்தது. இனி இவற்றையும் ரேசன் கடைகளில் வாங்க முடியாது. மூன்று மடங்கு விலை தந்து கடைகளில் தான் வாங்க வேண்டும்.


