போலீஸ் தடையால் வீட்டிலேயே ஆடு வெட்டிய எம்.எல்.ஏ.
திண்டுக்கல்:
கோவிலில் ஆடு வெட்ட போலீஸ் தடை இருப்பதால், தனது வீட்டுக்குப் பின்னால் வைத்து 15ஆடுகளை வெட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் செய்தார் வேடசந்தூர் எம்.எல்.ஏ. ஆண்டிவேலு.
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுவதைத் தடுக்க தமிழக போலீஸார் தீவிர கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எம்.எல்.ஏ.ஆண்டிவேல், எரியோடு பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில 15 ஆடுகள் வெட்டுவதாகநேர்ந்திருந்தார்.
கோவிலில் வெட்ட முடியாத காரணத்தால், தனது வீட்டுக்குப் பின்னால் வைத்து ஆடுகளை வெட்டி,சமைத்து, அதை பக்தர்களுக்குப் பரிமாறி தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
இதற்கிடையே, திருநெல்வேலி போலீஸார் ஒரு படி மேலே போய், கோவில்களுக்கு அருகேசோதனைச் சாவடிகளை (செக்போஸ்டுகள்) அமைத்து வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே உள்ள ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் தற்போது தசமி விழாநடந்து வருகிறது. இன்று நள்ளிரவு பூஜை நடக்கவுள்ளது. இதையொட்டி வழக்கமாக ஆடு,கோழிகள் பலி கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடு,கோழிகள் வெட்டப்படாமல் பார்த்துக் கொள்வதாக கோவில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலுக்கு அருகே 2 செக் போஸ்டுகளைஅமைத்துள்ளது காவல்துறை. அரசின் தடையை மீறி யாராவது கோழி, ஆடுகளை வெட்டினால்கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகேயும்போலீஸ் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் போலீஸ் தடையையும் மீறி ஆடு,கோழிகள் வெட்டப்பட்டதால் இந்த முறை செக் போஸ்டை போட்டு விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடு, கோழிகளைப் பலிகொடுப்பதற்குப் பதில் பூசணிக்காய்களை வெட்டி தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள்நிறைவேற்றினர்.
சிவகங்கையில் பூசாரி கைது: சிவகங்கை மாவட்டம் தாசகோட்டை பகுதியில் உள்ள எக்காளதேவியம்மன் கோவிலில் ஆடு மற்றும் கோழி வெட்டிய ஒரு பக்தரையும், அதைத் தடுக்காதகாரணத்தால் கோவில் பூசாரியையும் போலீஸார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.


