டெல்லி அரசியல் எதிர்காலத் திட்டம்: எம்.பிக்கள் கூட்டத்தை அவசரமாய் கூட்டுகிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முரசொலி மாறனின் மறைவையடுத்து டெல்லியில் திமுக எம்.பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் மற்றும் பா.ஜ.க- காங்கிரஸ் கட்சிகளுடனான உறவு ஆகியவை குறித்து விவாதிக்க தனது எம்.பிக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நாளை சென்னையில் அவசரமாகக் கூட்டியுள்ளார் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

வாக்காளர் சேர்ப்புப் பணி, பொடாவுக்கு எதிராக டிசம்பர் 15ம் தேதி நடத்தவுள்ள மறியல் போராட்டம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக திமுக எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும்.

10 மணிக்கு கலைஞர் திருமணக் கூடத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொடா மற்றும் வாக்களர் சேர்ப்பு குறித்து பேசப் போவதாக வெளியில் சொன்னாலும், பா.ஜ.க- காங்கிரஸ் உடனான அரசியல் உறவுகள் மற்றும் டெல்லி அரசியல் ஆகியவை குறித்தே முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாறன் இல்லாததால் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் தலைமையில் எம்.பிக்களை இயங்கச் செய்ய கருணாநிதி திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் மாறனின் இளைய மகன் தயாநிதியை டெல்லியில் தங்கியிருக்கச் செய்யவும் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் விரைவில் தயாநிதிக்கு திமுகவில் முக்கியமான பதவி தரப்படலாம் என்றும் தெரிகிறது. டெல்லியில் வைகோ, நாஞ்சில் மனோகரனுக்கு அடுத்தபடியாக திமுகவின் அடையாளமாக இருந்தவர் மாறன். இப்போது நாஞ்சிலாரும் இல்லை, மாறனும் இல்லை.

வைகோ தனிக் கட்சி கண்டு இப்போது சிறையில் உள்ள நிலையில், டெல்லி அரசியல் வட்டாரங்களில் திமுகவுக்கு முகமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எம்.பிக்கள், மாவட்டச் செயலாளர்களை கூட்டியுள்ளார் கருணாநிதி.

டெல்லியில் திமுகவின் பிரதிநிதி யார் என்பது இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அந்த வாய்ப்பு இப்போதைக்கு பாலுவிடம் தரப்பட்டாலும் விரைவில் தயாநிதி அந்த இடத்தைக் கைப்பற்றுவார் என்று தெரிகிறது.

திமுகவின் செயல் திட்டங்களை வகுப்பதில் தனது தந்தையின் பின்னணியில் அமைதியாக செயல்பட்டு வந்தவர் தயாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கு யோசனை சொல்லும் முக்கிய திமுக தலைவர்களில் ஒருவராக இருந்த மாறன் தனது முடிவுகள் குறித்து தயாநிதியிடம் விவாதிப்பது வழக்கம் என்கின்றது அறிவாலய வட்டாரம்.

மாறன் படுத்தபடுக்கையான நிலையில் இருந்தபோது தயாநிதி திமுக அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவருக்கு மிகப் பெரிய அரசியல் அசைன்மெண்ட் தர கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

சன் டிவி நெட்வோர்க்கை உருவாக்குவதில் தனது சகோதரர் கலாநிதி மாறனுடன் இணைந்து செயலாற்றிய தயாநிதி. இப்போது கேபிள் டிவி இணைப்பு நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷனை நிர்வகித்து வருகிறார்.

காட்டமான கடிதம்:

இதற்கிடையே மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்து ஊதாமல், அரசு தவறு செய்யும்போது அதை மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநர் ராம்மோகன் ராவிடம் காட்டமான கடிதம் தரப்பட்டுள்ளது.

கருணாநிதியின் இந்தக் கடிதத்தை நேற்று அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் ஆளுநரிடம் வழங்கினர். அதில், ஆளுநர் தனது கடமையைச் சரியாக செய்ய வேண்டும் என்று அவருக்கே அறிவுரை கூறும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் ஆளுநர் மாளிகை வட்டாரம் படு கடுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+