அரசு ஒயின்ஷாப்களில் விற்பனை தொடங்கியது!
சென்னை:
தமிழக அரசே நடத்தும் மதுக் கடைகளில் விற்பனை இன்று முதல் தமிழகம் முழுவதிலும் தொடங்கியது. விற்பனை படு ஜோராக நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதே நேரத்தில் கோவில்கள், பள்ளிகளுக்கு அருகே மதுக் கடைகள் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தனியார் மதுக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமே இன்று முதல் மது விற்பனை தொடங்கியுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் இன்று முதல் மது விற்பனையைத் தொடங்கினர்.
சென்னையில் மட்டும் 1,000 கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான கடைகள் இன்று முதல் விற்பனையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. தென் மாவட்டங்களில் தான் பிஸினஸ் மிக சூடாக உள்ளது.
நகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு கடையிலும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சரக்கு ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் ரூ. 1.5 லட்சம் அளவுக்கு ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள், பள்ளிகளுக்கு அருகே பல இடங்களில் அரசின் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து பொது மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே மதுக் கடைகள் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஏராளமான பெண்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் தனியார் நடத்தும் கடைகளை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், தங்கள் வசம் உள்ள சரக்குகளை மிகக் குறைந்த விலைக்கு தள்ளிவிட்டு வருகின்றனர். இதனால் அந்தக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
டிச. 1, 2ல் பாமக ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே அரசே மதுக் கடைகளைத் திறந்துள்ளதை எதிர்த்து டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் அரசே மதுக் கடைகளை திறந்திருப்பதன் மூலம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மேலும் கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்படும்.
மதுக் கடைகளை நடத்துவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications